நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேச்சு

0
128

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் பிரதமரை 17.6.2021 அன்று நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தான் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன் வடிவை 13.9.2021 அன்று நம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால் அந்த சட்ட முன் வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருக்கிறார். ஒரு சட்டமன்றம் தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் போது ஆளுநர் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம்.

ஆகவே நான் நேரில் சென்று ஆளுநரை வலியுறுத்தியும் குடியரசு தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. மாநில உரிமையும் சட்டமன்றத்தின் சட்ட இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை உருவானதால்தான் அவசரமாக அவசியத்துடன் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

இன்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் ஒரு வரைவு தீர்மானத்தை உங்களிடம் எடுத்துரைப்பார். நம் அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காப்பாற்றிட வேண்டும் என்பதுதான்.

ஆகவே இந்த வரைவு தீர்மானத்தின் மீது தங்களது ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.