“நாளை விடியும்! உதயசூரியன் உலா வரும்!” : தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

0
94

“நாளை விடியும்! உதயசூரியன் உலா வரும்!” : தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-

பத்தாண்டுகளாகப் படு பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் உலர்ந்து காய்ந்துபோன வேர்களுக்கு வேண்டும் நீர் வார்த்து, மீண்டும் துளிர்த்து வளர்ந்து செழிக்கச் செய்யும் வகையில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையும், எவ்வித மறு சிந்தனையுமின்றி, முழுமையாக நடத்தி முடித்திருக்கிறோம்.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு பெரிதும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருந்தாலும், அதுகுறித்து சட்டரீதியாக உரிய நடவடிக்கையும், தேவையான இடங்களில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.

எந்த வகையிலும் வாக்காளர்களுக்கு இடர்பாடு நேர்ந்திடாத வண்ணம் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 61% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு சில இடங்களில் 70%-க்கு மேல் வாக்குப்பதிவும், ஒரு சில இடங்களில் 50%-க்குக் கீழ் வாக்குப்பதிவும் நடைபெற்றிருப்பதை மாநிலத் தேர்தல் ஆணையம், புள்ளிவிவரங்களுடன் விரிவாக வெளியிட்டுள்ளது.

“உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி – நம்ம ஆட்சி” என்பதே நமது இலட்சியமும் நோக்கமும் ஆகும். அதற்கேற்ற வகையில், தேர்தல் களத்தை எதிர்கொண்டோம். கடந்த 9 மாதங்களில், நாட்டு மக்களுக்காக நிறைவேற்றிய முக்கியமான சாதனைகளை மட்டும் முன்வைத்து தி.மு.க. வாக்கு கேட்டது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், திமுக அரசு மீது நாளுக்கு நாள் வளர்ந்து பெருகி வரும் நம்பிக்கையேதான் நம் பலம்.

தமிழ்நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய முந்தைய ஆட்சியாளர்களாலும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளாலும், இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேர்தல் பரப்புரை என்ற போர்வையில், அவதூறுகளை அள்ளித் தெளித்தார்கள். பொய்களைக் கட்டவிழ்த்துப் பூச்சாண்டி காட்டினார்கள். தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளைகளை நிறைவேற்றவில்லை எனக் கட்டுக்கதைகளை அளந்தார்கள். எல்லாவற்றுக்கும் உரிய ஆதாரத்துடன் பதில்களை அடுக்கி, தி.மு.க. பரப்புரை செய்தது. மக்களின் பேராதரவைத் திரட்டியது.

நம் மீது அவர்கள் பரப்பிய அவதூறுகள் மக்களிடம் சிறிதும் எடுபடவில்லை என்றதும், வேறு எந்த வகையிலாவது திசைதிருப்ப முடியுமா என சதித் திட்டமிட்டனர். “முதலமைச்சர் ஏன் நேரடியாகப் பரப்புரை செய்யவில்லை; மக்களை சந்திக்கத் தயங்குகிறாரா?” என்று வேண்டுமென்றே திசை திருப்பிட முயன்றனர். அதிலும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பன்னீர்செல்வமும் அவர்களுக்குள் நடக்கும் பதவிப் போட்டியில், என் மீது பாய்ந்து கொண்டிருந்தார்கள்.

திமுகவினர் யாரேனும், எங்கேனும் ஓரிரு இடங்களில் சற்று அத்துமீறிச் செயல்படுகிறார்கள் என்ற செய்தி வந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.க. நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். திமுக இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்.

சட்டம் தன் கடமையைச் செய்யும். திமுகவினர் செய்ய வேண்டிய மக்கள் பணிகள் நிறைந்திருக்கின்றன. மக்களின் தீர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமாகவே அமையும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனினும், அது முறைப்படி அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியது நம் கடமை. நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நிறைவடையும்வரை திமுகவினர் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றி அறிவிக்கப்பட்டு, அதற்குரிய சான்றிதழ் வழங்கப்படும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான திமுக முகவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளின் வாக்குகளும் முழுமையாக எண்ணப்பட்டு, அனைவருக்கும் முறைப்படி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் எந்த அளவுக்கு எல்லை மீறிச் செல்வார்கள் என்பதை அ.தி.மு.க ஆட்சியில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின்போது நேரில் கண்டு அறிந்தவன் நான். இரண்டாம் முறையாகச் சென்னை மக்கள் என்னை மேயராகத் தேர்ந்தெடுத்த நிலையில், என் வெற்றியைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்கு எண்ணும் மையங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, பயங்கரமான ஆயுதங்களுடன் அராஜகப் பேயாட்டம் போட்டவர்கள் அவர்கள். அதே வழியை அவர்கள் இப்போது கையாண்டாலும் நாம் அமைதி வழியையே கையாள வேண்டும். என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனத் தமிழ்நாட்டின் அனைத்துத் தொகுதிகளுக்கும் நான் பயணம் மேற்கொண்டு மக்களுடன் உரையாடியபோது, அவர்களில் பலரும் தெரிவித்தது, கடந்த பத்தாண்டு காலமாக உள்ளாட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிக் கிடப்பதால், அடிப்படைத் தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் உள்ளாட்சி ஜனநாயகம் மலரும் என்ற நல்ல நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர். மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக நிறைவேற்றவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

கடைசி கிராமம் வரை, கடைசி வீடு வரை, நமது அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டியவர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான். கடைக்கோடி மனிதரும் ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாறிட வேண்டும்; இன்பம்பெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய ஆழ்ந்த எண்ணம். வெற்றி உறுதி; அதைவிட கடமையும் பொறுப்பும் நமக்கு மிகுதியாக இருக்கிறது. வெற்றிக் கொண்டாட்டங்களைக் குறைத்து, மக்கள் பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய கட்டாயமான இடத்தில் நாம் இருக்கிறோம்.

வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களைக் கொண்டு மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றங்களுக்கான தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.

தேர்தல் முறை, மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுகிறவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, முழுமையான அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டியதும் திமுக நிர்வாகிகளின் கடமை. தோழமைக் கட்சிகளுக்கு கண்ணியமான அளவில் ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் கட்டுப்பாடான முறையில் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதும் திமுகவினரின் பொறுப்பு. அதில் எள்முனையளவுகூட பாதிப்பு இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.