தமிழக சட்டசபை தேர்தல் 2021 : பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் – ஹெச்.ராஜா

0
201

தமிழக சட்டசபை தேர்தல் 2021 : பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் – ஹெச்.ராஜா

சென்னை, தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது. அதில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது:-

234 தொகுதிகளிலும் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நல திட்டங்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவோம். பாஜக விரும்பும் தொகுதிகளை அதிமுக நிச்சயம் ஒதுக்கும் என்றார்.