கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது

0
195

கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது

தமிழக அரசு அறிவித்தபடி, ரேசன் கடைகளில் இன்று முதல் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக 2 கோடியே 7 லட்சம் ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கு, 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

முதல் தவணையாக மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர், திட்டத்தை 10ம் தேதி தொடக்கி வைத்தார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ரேசன் கடைகளில் கூட்டம் சேராமல் இருப்பதை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

இந்த சூழலில் இன்று முதல் ரேசன் கடைகளில் நாள்தோறும் 200 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. தேதி, நேரம் போன்ற விவரங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, பணம் வழங்கப்படும்.

முதல் தவணையாக நிவாரண நிதி வழங்குவதற்கு 4 ஆயிரத்து 153 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான மே 16ம் தேதி அன்றும் கூட ரேசன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.