கவுன்சிலராகும் பெண்கள் பதவியை திறமையாக பயன்படுத்த வேண்டும்- கனிமொழி எம்.பி.

0
113

கவுன்சிலராகும் பெண்கள் பதவியை திறமையாக பயன்படுத்த வேண்டும்- கனிமொழி எம்.பி.

சென்னை: தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அப்பாஸ் பள்ளியில் வாக்களித்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:- நான் பிரசாரத்திற்கு சென்ற அளவில் ஏராளமான மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் எழுச்சியாக, மகிழ்ச்சியாக உள்ளனர். தி.மு.க. மீதும், முதல்-அமைச்சர் மீதும் வைத்துள்ள நம்பிக்கை என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது.

இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

கேள்வி: காலை 9 மணி நிலவரப்படி 4 சதவீத வாக்குகள்தான் பதிவாகி இருந்தது. எனவே இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க தயங்குகிறார்கள் என நினைக்கிறீர்களா?

பதில்: நிறைய பேர் உள்ளாட்சி தேர்தலில் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களிப்பதில்லை. இது மிகத் தவறான கண்ணோட்டம். பொதுமக்கள் நிச்சயம் தாமாக முன்வந்து வாக்களிக்க வேண்டும். நேரம் ஆக ஆக இன்னும் அதிகம் மக்கள் வாக்களிக்க வருவார்கள் என நம்புகிறேன்.

கே: தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்காக நிறைய திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது தேர்தலில் பிரதிபலிக்குமா?

ப: நிச்சயமாக பிரதிபலிக்கும். இந்த ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கே: பெண்கள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றிபெறும் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அவர்களே நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்க்கக்கூடிய வகையில் தனது அரசியல் களத்தை பலப்படுத்தும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.