”கல்வியில் தமிழ்நாடு சிறந்து விலங்க காரணம் நீதிக்கட்சி போட்ட விதை”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

0
170

”கல்வியில் தமிழ்நாடு சிறந்து விலங்க காரணம் நீதிக்கட்சி போட்ட விதை”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (26.8.2022) கோயம்புத்தூர், பூ.சா.கோ. (PSG) கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

மூன்று நாள் பயணமாக, இந்த மேற்கு மண்டலத்திற்கு வருகை தந்த நான், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இயக்கத்தினுடைய நிகழ்ச்சிகள், அதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இப்போது இங்கே வந்திருக்கிறேன், உங்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறேன்.

இது ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியாக இருந்தாலும் – ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. எல்லோலாருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகத்தான் நான் இதை உணர்ந்து கொண்டிருக்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தக் கல்லூரி எவ்வளவு நேரம் தவறாமல் ஒரு கட்டுப்பாட்டோடு நடைபெறுகின்றது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், நான் நிகழ்ச்சி நிரலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 6.30 மணிக்கு கின்னஸ் உலக சாதனை வழங்கக்கூடிய நிகழ்ச்சியும், 6.35 தமிழக முதல்வர் சிறப்புறையும் வெளியிடப்பட்டிருக்கிறது. சரியாக நான் 6.35 மணிக்குத் தான் பேசத் தொடங்கியிருக்கிறேன். இது ஒன்றே ஒரு எடுத்துக்காட்டாக, சாட்சியமாக இந்தக் கல்லூரியினுடைய கட்டுப்பாட்டை காட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்.

தனிப்பட்ட தன்னுடைய குடும்பத்துக்காக மட்டும் வாழாமல், பொதுமக்கள் அனைவருக்காகவும்; பொது நன்மைக்காகவும் வாழ்ந்தவர்

திரு. P.S. கோவிந்தசாமி அவர்கள். வணிகத்திலும், வேளாண்மையிலும், தான் ஈட்டிய சொத்துகளைத் தன்னுடைய நான்கு புதல்வர்களுக்கு மட்டுமல்லாமல், ஐந்தாவதாக அறநிலையத்துக்கும் சேர்த்து, பிரித்துக் கொடுத்த பெருந்தன்மைக்கு உரியவர் திரு. கோவிந்தசாமி அவர்கள். இந்தச் சிந்தனை, 100 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே உதயமாகியிருப்பது உள்ளபடியே பாராட்டுக்கும், மரியாதைக்கும் உரியது.

1926-ஆம் ஆண்டில், இரண்டு இலட்சத்து ஆயிரத்து நூற்றுப் பதினாறு ரூபாயில் தொடங்கப்பட்ட இந்த அறநிறுவனம், இன்று நவீன வசதிகளுடன் பல்வேறு தொழில், அறிவியல் படிப்புகளை அறிமுகம் செய்து மாணவர் சமுதாயத்திற்கான அறிவு நலன் பேணி வருவது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.

1947-ஆம் ஆண்டு ஜி.ஆர்.கோவிந்தராஜலு, ஜி.ஆர்.தாமோதரன் ஆகியோரால் இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நினைவாக பூ.சா.கோ. என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், பூளை எனப்படும் பூ அதிகமாக விளைந்த பகுதி இது. குறிஞ்சி நிலப் பெண்கள் குவித்து விளையாடிய 99 வகையான பூக்களில் ஒன்று இந்த பூளைப் பூ. அதை வைத்துத்தான், பூளைமேடு என்று இதற்கு பெயர் இருந்தது. இன்று பீளமேடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் PSG – என்பதற்கு நான் காணக்கூடிய பொருள் என்பது

P – people

S – service

G – Good – என்பதே.

மக்களுக்கு உண்மையான சேவையை சிறப்பாகச் செய்யும் நிறுவனம் இது என்பதால்தான், PSG என்று அழைக்கப்படுவதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், அதுதான் உண்மை.

75-ஆவது ஆண்டு பவளவிழாவை இன்று நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். இந்த பவளவிழா நிகழ்ச்சிக்கு, இந்தக் கல்லூரியினுடைய நிறுவனத்திற்கு வருகை தந்து உங்களையெல்லாம் சந்திக்கிற, இந்த நிர்வாகத்தைப் பாராட்டுகிற, வாழ்த்துகிற வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்.

1965-ஆம் ஆண்டு, ஆதிக்க இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் – தனது வீரம் மிகுந்த போராட்டத்தை நடத்தியது. ஐம்பது நாட்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தமிழ்க்காப்புப் போராட்டம் நடந்தது. தமிழைக் காக்கத், தனது உடலுக்குத் தானே தீமூட்டியும், நஞ்சுண்டும் – தமிழ்நாட்டு மொழிக்காவலர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் பீளமேடு தண்டாயுதபாணி. எதற்காக இதை குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அவர் PSG பொறியியல் கல்லூரி மாணவர். தமிழுக்காக உயிர்கொடுத்த மாணவர் ஒருவர் படித்த கல்லூரி இந்தக் கல்லூரி.

தமிழ்நாட்டில் பிறந்து, இன்று உலகப் புகழ்பெற்ற தொழிலதிபராக உயர்ந்து நிற்கக்கூடியவர் H.C.L. நிறுவனத்தின் தலைவர் சிவ்நாடார் அவர்கள். அவர் படித்த கல்லூரியும் இதுதான்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின், திட்ட இயக்குநராக இருந்து – இந்தியாவின் அறிவியல் ஆற்றலை விண்ணுக்கு உணர்த்திய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் படித்த கல்லூரியும் இந்தக் கல்லூரி தான்.

PSG அறநிலையமானது கல்வி, மருத்துவம், ஆன்மீகம், தொழில்நுட்பம், சமூகசேவை எனப் பல பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மனிதநேயத்தின் கிளைகள்தான்.

PSG அறநிலையத்தார், அனைத்துத் தரப்பினருக்கும் பாகுபாடு இன்றி கல்வி கிடைக்க வேண்டும் என்ற சமதர்மச் சமத்துவச் சிந்தனையைக் கொண்டிருக்கக்கூடியவர்கள். அதனால்தான், படிப்படியாக வளர்ந்து இன்று இந்தளவுக்கு வளர்ந்து நிற்கிறார்கள்.

இந்தக் கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலின் A++ தகுதி, பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்புத் தகுதி பெற்ற முதன்மையான கல்லூரியாக இருக்கிறது.

ல்வேறு STAR தகுதியைப் பெற்றிருக்கிறது.

கல்லூரிகளின் தரவரிசையில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

NIRF தர வரிசையில், நாட்டிலேயே 20-ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது.

இவை அனைத்துக்கும் மேலாக, மாணவர் சேர்க்கையில், ஒவ்வொரு ஆண்டும் – அரசு ஆணைகளின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறீர்கள்.

அதேபோல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் முறையில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்பட்டு வருகிறீர்கள்.

மகளிருக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறீர்கள்.

60 விழுக்காடு மாணவியர்கள் படிப்பதாகவும் – ஆசிரியர்களில்

60 விழுக்காடு, பெண் ஆசிரியர்களாக இருப்பதும் உள்ளபடியே பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது.

கிராமங்களைத் தத்தெடுத்து, அந்தந்த கிராமங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருவதை அறிந்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். கிணற்றைத் தூர்வாருதல், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அகற்றி மக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் கிடைக்கச் செய்தல், தூய்மையாகக் கிராமங்களை வைத்துக் கொள்ளும் முறையினைக் கற்றுக் கொடுத்தல், சுயதொழில் வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுத்தல் மற்றும் அரசின் செயல்திட்டங்களை இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலமாக மக்களுக்குக் கொண்டு சென்று, சமூகக் கடமையைச் செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது. படிப்புடன் இணைந்து, இத்தகைய சமூகப்பணியையும் மாணவ சமுதாயம் ஆற்றி வருகிறார்கள்.

குறிப்பாக, பெருந்தொற்று COVID அந்தப் பெருந்தொற்று காலத்தில் சிறுதொழில் செய்பவர்கள் நலிவடைந்தார்கள். அது குறித்தும் நீங்கள் அக்கறை காட்டி இருக்கிறீர்கள். பானை செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தித் தொழில் வாய்ப்பைப் பெருக்கக்கூடிய நிலையில், இந்தக் கல்லூரியின் 75-வது ஆண்டு பவளவிழாவினை முன்னிட்டு 75,000 பானைகளைச் செய்ய வைத்து, PSG கலை அறிவியல் கல்லூரி இன்றைக்கு கின்னஸ் உலக சாதனை (Guinness Record) படைத்திருக்கிறது. இதனால் மண்பாண்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பல்வேறு வகைகளில் பயன்பெற்றிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்கிறோம்.

கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறீர்கள்.

ஏழைக் குழந்தைகளின் உணவு, உறைவிடம், கல்விக்கு உதவுகிறீர்கள்.

தமிழகத்தில் அறிவியல் தமிழை வளர்த்ததில் மிக முக்கியமான பங்கு கலைக்கதிர் இதழுக்கு உண்டு. அந்த இதழ் இந்தக் கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும் இந்த இதழைத் தொடர்ந்து படிப்பதைப் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடிய அளவுக்கு, பெருமைமிகு கல்வி நிறுவனமாக இந்த பி.எஸ்.ஜி நிறுவனம் அமைந்திருக்கிறது.

தமிழ்நாடு என்பது, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் 21 தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.

தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது.

தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது.

தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளது.

100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் இருக்கிறது.

40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளது.

30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளது.

30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளது.

இப்படி நான் சொல்லிக் கொண்டே போக முடியும்.

கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால், நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

பி.எஸ்.ஜி போன்ற பல்வேறு அறக்கட்டளைகள், தங்களது கல்வித் தொண்டை 75 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியதுதான் இதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. இந்த வளர்ச்சியை, இந்தியாவே வியந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இத்தகைய தமிழ்நாட்டு அறிவுச் சக்தியை வளர்ப்பதையே, தமிழ்நாடு அரசு தன்னுடைய கடமையாக நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும் – உயர்கல்வித் துறையாக இருந்தாலும் – உன்னதமான பல்வேறு திட்டங்களைச் இன்றைக்கு செயல்படுத்தி வருகின்றன.

அனைவர்க்கும் கல்வி –

அனைத்துப் பிள்ளைகளுக்கும் அடிப்படையான கல்வி –

ஆரோக்கியமான கல்வி –

உடற்கல்வி –

உறுதி மிக்க மனவளக்கலை

-ஆகியவற்றைப் பள்ளிக் கல்வித் துறை வழங்கி வருகிறது.

அனைவர்க்கும் உயர்கல்வி –

அனைவர்க்கும் ஆராய்ச்சிக் கல்வி –

திறன்மேம்பாட்டுக் கல்வியைத்

-தமிழக உயர்கல்வித் துறை வழங்கி வருகிறது.

நான் மட்டும் முதல்வன் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே ‘நான் முதல்வன்’ திட்டத்தை நம்முடைய அரசு இன்றைக்கு செயல்படுத்தி வருகிறோம்.

இன்னும் ஐந்து, பத்தாண்டு காலத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் அடைய இருக்கும் தகுதியையும், உயர்வையும் நினைத்து நான் உள்ளபடியே பூரிப்படைகிறேன். அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக, நம் மாநில இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

அதேநேரத்தில், இளைஞர் சமுதாயம் குறித்த ஒருவிதமான கவலையும் எனக்கு இருக்கிறது. போதைப் பொருள் பழக்கத்திற்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக இருக்கிறது. அதற்காகவே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து நடத்தி வருகிறோம். காரணம், அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டாக வேண்டும். புதிதாக யாரும் அடிமையாகாமல் தடுத்தாக வேண்டும்.

ஒரு மாணவன் அடிமையாவது என்பது, அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கே அது தடையாகிறது. அதிலும் குறிப்பாக, மாணவிகள் சிலரும் அந்தப் பழக்கத்தில் அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது.

நல்ல கல்வியுடன், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தரும் கடமை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உண்டு. இந்த நிகழ்ச்சியின் மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்துக் கல்லூரி நிறுவனங்களுக்கும் நான் ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

ஒரு பெருமைமிகு கல்லூரியின், பவளவிழாவில் கலந்து கொண்ட மனநிறைவுடன் நான் சென்னைக்கு திரும்புகிறேன்.

இன்னும் பல நூற்றாண்டு விழாக்களை இந்த நிறுவனம் காண வேண்டும் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.