இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமின்று

0
166

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமின்று

இந்தியா விடுதலை அடைந்தவுடன், நாட்டிலிருந்த அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நிலப்பரப்பாக இந்தியாவை வடிவமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஆயுதப்படைகளைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அவரது உறுதியான தலைமை காரணமாகவே அனைத்து சமஸ்தான அரசுகளும் இயல்பான ஒத்துணர்வுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

குஜராத்தின் கேடா மாவட்டத்தில், கரம்சத் கிராமத்தில் 1875, அக்டோபர் 31ல் பிறந்த வல்லபபாய், லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்று வந்தார். கோத்ரா, மும்பை, அகமதாபாத் நகர்களில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், 1917 ல் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார்.

மகாத்மா காந்தியின் போராட்ட வழிமுறைகளாலும் போதனைகளாலும் கவரப்பட்ட அவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்கள், கட்சி மாநாடுகளில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக விளங்கிய படேல், 1934 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க இயலாத தலைவராக உயர்ந்தார்.

.
விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோருக்கு அடுத்தபடியாக பெரும்பங்கு ஆற்றியவர் படேல். காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பும் படேலை நாடி வந்தது. எனினும் கட்டுப்பாடுள்ள கட்சித் தொண்டனாக, காந்தியின் அறிவுரையை ஏற்று அமைதி காத்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த படேல், தேசப்பிரிவினை உள்ளிட்ட நெருக்கடியான காலத்தில் நாட்டை உறுதியாக வழிநடத்தினார். 1950, டிசம்பர் 15ல் உடல்நலக் குறைவால் படேல் மும்பையில் காலமானார்.
.
இந்தியா என்ற அரசியல் ஒருங்கிணைப்புக்கு சர்தார் வல்லபபாய் படேல் அளித்த பங்களிப்பு மகத்தானது. சர்வமத சமரசம் என்பது எந்த மதமும் சாராததோ, இந்து மதத்தை நிராகரிப்பதோ அல்ல என்று அவர் தெளிவு படுத்தினார்.

அதனாலேயே கஜினி முகமதுவால் இடிக்கப்பட்ட சோமநாதபுரம் கோயிலை தானே முன்னின்று மீண்டும் கட்டினார் படேல். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே சுக்கானாக இருந்து முறைப்படுத்திய ஆளுமைக்கு உரியவர் படேல்