“இதுவரை இந்த மாதிரி ஒரு பட்ஜெட்ட பார்த்ததே இல்ல” : வியந்து பாராட்டிய எழுத்தாளர் – முதல்வர் சொன்ன நன்றி!

0
82

“இதுவரை இந்த மாதிரி ஒரு பட்ஜெட்ட பார்த்ததே இல்ல” : வியந்து பாராட்டிய எழுத்தாளர் – முதல்வர் சொன்ன நன்றி!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.

இந்த பட்ஜெட் இளைஞர் நலன், மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் என அனைவரின் நலன் கருதியாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட், ஊரக வளர்ச்சித் துறை, மகளிர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, உயர்கல்வித்துறை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

பொருளாதார அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, “நான் 1952 முதல் வாக்களித்து வருகிறேன். நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பட்ஜெட், இன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்தான்.

நுணுக்கமான, பரந்த அடிப்படையிலான மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என ஒன்றியத்துக்கே கற்றுக்கொடுப்பதாக இந்த பட்ஜெட் இருக்கிறது” எனப் பாராட்டியுள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட்டை பாராட்டிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் இந்தப் பாராட்டைப் பெரிதும் மதிக்கிறேன்.

தமிழ்நாடு அரசுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இப்பாராட்டு அமைந்துள்ளது. வெளிப்படையாகப் பாராட்டிய அவரது பெருந்தன்மைக்கு நன்றி!” எனத் தெரிவித்துள்ளார்.