வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது.. வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
140

வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது.. வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேதா நிலையம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு வேதா நிலையம், பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.