ராகுல் காந்தியின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்கள் சார்பில் நன்றி – மு.க.ஸ்டாலின் ட்வீட்

0
106

ராகுல் காந்தியின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்கள் சார்பில் நன்றி – மு.க.ஸ்டாலின் ட்வீட்

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தமிழக மக்களிடம் தமிழ்நாடு மற்றும் தமிழ் குறித்த புரிதல் இருக்கிறது. அதேநேரம் இந்தியா குறித்த புரிதலும் அவர்களிடம் உள்ளது. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என மத்திய அரசையும் பாஜகவையும் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

மேலும், 1947ஆம் ஆண்டில் அடித்து நொறுக்கப்பட்ட மன்னர் ஆட்சியை தற்போது மீண்டும் ஆளும் பாஜக கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. கூட்டாட்சி என்பது அதன் அர்த்தம். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்பேன். அவர் அவரது தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல எனக்கு தேவையானதை கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது, நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள் என்று கூறினார்.

தொடர்ந்து நீட் தேர்வை பற்றி பேசிய ராகுல் காந்தி, தமிழகம் மீண்டும், மீண்டும் நீட் தேர்வை விலக்க வேண்டும் என முறையிட்டாலும், அதை ஏற்காமல் துரத்தி விடுவதே மத்திய அரசின் வாடிக்கையாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமான முறையில் வெளிப்படுத்தி நாடாளுமன்றத்தில் உங்களின் எழுச்சியூட்டும் உரைக்கு அனைத்துத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதையை மதிக்கும் தனித்துவமான கலாச்சார மற்றும் அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களை, நாடாளுமன்றத்தில் நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்கள்,’ என்று குறிப்பிட்டுள்ளளார்.