முழு ஊரடங்கைப் பயன்படுத்தி அதிக விலைக்குப் பால் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிக்கை!

0
216

முழு ஊரடங்கைப் பயன்படுத்தி அதிக விலைக்குப் பால் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் சா.மு.நாசர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளான காய்கறிகளை அந்தந்த பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் வழங்கத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதேபோல், ஊரடங்கு காலத்தில் பால், பால் பொருட்கள் பொதுமக்களுக்கு வீட்டின் அருகே கிடைக்கும் விதமாக ஆவின் நிர்வாகம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தாம்பரம் சுற்று வட்டாரத்தில் பால் விநியோகம் முறையாகச் செய்யப்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாகத் தெரு தெருவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பால்பொருட்கள் மக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைத்திடும்.

தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போலப் பால் விலையைக் குறைப்புக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதனால் கொள்முதல் செய்த பால் பண்ணைக்கு தடைகள் இன்றி கொண்டுவரப்பட்டு, தூய்மையாகப் பதப்படுத்தி அதனைப் பொதுமக்களுக்குப் பால், பால்பொருட்கள் என பல்வேறு விதங்களில் வழங்குகிறோம்.

முழு ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பால் விநியோகம் தடைபட்டால் வார் ரூமுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்”. என தெரிவித்தார்.

இதைடுத்து ஆவடியில் நடமாடும் காய்கறி வாகனத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கிவைத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 1,018 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.