மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

0
225

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் – டாக்டர். அனுஷா ரவி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்(WFI) தலைவராகவும் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பா.ஜ.க எம்.பியாகவும் உள்ள பிரிஜ்பூசன் சரண்சிங் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டி, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 மாதங்களுக்கு மேலாகவே மல்யுத்த வீராங்கனைகள் போராடிவந்தபோதும், உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால்தான், பிரிஜ்பூசன் மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள இரண்டு FIRகளில் ஒன்று, போக்சோ(POCSO) சட்டத்தின் அடிப்படையிலானது (சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு!)

விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியவர்களே, அதில் பங்கேற்கும் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தேசத் துரோகத்துக்கு ஒப்பானது. டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே 85 வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் பிரிஜ்பூசன்.,எம்.பியை உடனடியாக கைது செய்யவேண்டும்; இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கையானது வெளியிடப்படவேண்டும் என்பதே வீராங்கனைகளின் கோரிக்கைகள்.

எதிர்வரவுள்ள உலக அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவின் பெருமை காக்கப் பயிற்சியெடுக்கவேண்டிய வீராங்கனைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே வீதியில் நின்று போராடவேண்டியதுள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளின்போது, அதிகாரத்தின் குறுக்கீடு இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியமாகும். விளையாட்டில் இருந்து அரசியல் நீக்கப்படுவதுடன், ஊழல், முறைகேடு மற்றும் பாலியல் பிரச்சினைகளில் இருந்தும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளைப் பாதுகாக்க தக்க கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

“பேட்டி பச்சாவ்”(பெண்களைக் காப்போம்) என்று மேடைகளில் முழங்கும் பிரதமர் மோடி அவர்கள், தலைநகர் டெல்லியில் போராடும் வீராங்கனைகளுக்கே பாதுகாப்பை-நீதியை விரைந்து வழங்கவில்லை என்பது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.

சமூக, பொருளாதார தடைகளைத் தாண்டி, கடின உழைப்பு, விடாமுயற்சியால் விளையாட்டில் சாதிப்பதுடன், இந்திய தேசத்துக்கு சர்வதேச அளவில் பெருமைகளைப் பெற்றுத்தரும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் விரைவில் வழங்கப்படுவதற்கு மக்கள் நீதி மய்யம் என்றும் துணைநிற்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.