மதுரையில் ஓய்வூதியருக்கான குறைதீர்ப்பு முகாம்
சென்னை, பிப்ரவரி 04, 2021
அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப் பெறாதவர்களின் குறைகள், ரயில்வே மற்றும் தொலைபேசித் துறையில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்று, அஞ்சல் துறையின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக மதுரை தென் மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 7-ந் தேதி அன்று காலை 11 மணியளவில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட குறைதீர் முகாம் சம்பந்தமாக, கோட்ட அளவில் ஏற்கனவே மனு கொடுத்து அதற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும், தங்களது குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக இம்முகாமிற்கு அனுப்பப்படும் புதிய புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
இதற்காக ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை வரும் மார்ச் மாதம் 5-ந் தேதிக்குள், திரு.பொ.சோணை, முதுநிலை கணக்கு அதிகாரி, அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், தென் மண்டலம், (தமிழ்நாடு), மதுரை-625002, என்ற முகவரிக்கு வந்து சேருமாறு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியர்கள் தங்களின் தற்போதைய வீட்டு முகவரி, செல்போன் எண், அருகில் உள்ள அஞ்சலக முகவரி போன்றவற்றை குறைகளை அனுப்பும் கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.
“ஓய்வூதியர் குறை தீர்ப்பு முகாம் 2021” என்று தபால் உறையின் மேற்பகுதியில் தெளிவாக குறிப்பிட வேண்டும். சாதாரண, விரைவு, பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். தனியார் கூரியர் சேவை மூலம் அனுப்பப்படும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
சென்னை, தமிழ்நாடு வட்டத்தின் பொது மேலாளர் (அஞ்சலக கணக்கு மற்றும் நிதி), திருமதி. அனிதா மகாதாஸ், மதுரையில் நடக்கும் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு சென்னை அஞ்சலக கணக்கு அலுவலகம் தொடர்பான புகார்களுக்கு பதிலளிக்க உள்ளார்.
நேரில் வர முடியாதவர்கள் முகாம் நடைபெறும் நாளன்று (7.4.2021) மாலை 3 மணிக்கு காணொலிக் காட்சி (கூகுள் மீட்) வாயிலாக நடத்தப்படும் கூட்டத்தில் பங்கு பெறலாம்.
இந்த தகவலை தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர்
திரு. க.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.