‘பிரம்மாண்ட ‘BIOPIC’ எடுக்கும் அளவிற்கு முதலமைச்சரின் வரலாறு உள்ளது’ : இயக்குநர் AR.முருகதாஸ் பேட்டி!
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கின்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருக்கும் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியினை திரைப்பட இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பார்வையிட்டார்.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கின்ற தலைப்பில் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சி பிப்ரவரி 28 முதல் மார்ச் 12 வரை நடைபெற்ற உள்ளது. இக்கண்காட்சி பொது மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் இக்கண்காட்சியினை கண்டு ரசித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் புகைப்பட கண்காட்சியினை திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “மிகப்பெரிய தலைவரின் மகனாக இருந்தாலும், தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் மு.க ஸ்டாலின்.
இந்த கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை பார்க்கும் போது அவர் மீது மிகப்பெரிய மரியாதையும், பண்பும், உணர்வும் உண்டாக்குகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வரலாற்று புகைப்படங்களை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாடா, தமிழகமா இந்த செய்தியாளர்கள் கேள்விக்கு, தமிழகம் எனபதை தமிழ்நாடாக மாற்றுவதற்கு பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு என்கின்ற ஒன்றை முதலமைச்சர் விட்டுக் கொடுக்கமாட்டார் என்று பதில் அளித்தார்.
முதலமைச்சருடைய வாழ்க்கையை திரைப்படமாக்குவது எண்ணம் உண்டா என்கின்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் நிச்சயமாக ஒரு தலைவருடைய வாழ்க்கை வரலாறு எடுக்கிற அளவிற்கு இந்த புகைப்பட கண்காட்சியில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன, இதனை பார்த்த உடனே எனக்கு மிகப் பிரம்மாண்டமான பயோபிக் எடுக்கலாம் என்று தோன்றியது எனத் தெரிவித்துள்ளார்.