பதிவுத்துறை சேவையை மேம்படுத்த ரூ.323 கோடியில் புதிய தொழில்நுட்பம்: அரசாணை வெளியீடு

0
95

பதிவுத்துறை சேவையை மேம்படுத்த ரூ.323 கோடியில் புதிய தொழில்நுட்பம்: அரசாணை வெளியீடு

சென்னை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பத்திர பதிவுத்துறையில் தற்போது வழங்கப்பட்டு வரும் ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகளை உட்புகுத்துதல், சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்கச் சான்று முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் ஸ்டார் 3.0 திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக தலைமைச்செயலாளர் தலைமையில் மாநில குழுவும், செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைவர் தலைமையில் திட்ட செயலாக்கக்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத்திட்டம் அமலுக்கு வரும்போது பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் துரிதமான உயர்தரத்திலான சேவைகள் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.