”நான் பேசுவது எழுச்சியுரை அல்ல உணர்ச்சி உரை”.. ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!

0
127

”நான் பேசுவது எழுச்சியுரை அல்ல உணர்ச்சி உரை”.. ரமலான் இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு!

தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை திருவான்மியூரில் நடத்தப்பட்ட ரமலான் இப்தார் – நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் ஆற்றிய உரையின்பின்வருமாறு:

அஸ்ஸலாமு அலைக்கும்.

மஸ்தான் அவர்கள் நான் உரையாற்றக்கூடிய அந்த செய்தியை இந்த ஒலிபெருக்கியின் மூலம் சொல்லும்போது “எழுச்சியுரை… எழுச்சியுரை…” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் நான் ஆற்றுவது எழுச்சியுரை அல்ல – உணர்ச்சி உரை.

இந்த விழாவை வெகு சிறப்பாக – மிகவும் பிரம்மாண்டமானதாக ஏற்பாடு செய்துள்ள கழகச் சிறுபான்மை அணிச் செயலாளரும், சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான மஸ்தான் அவர்களுக்கு முதலில் என்னுடைய நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்தார் நோன்பு திறக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ள சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெருமக்களுக்கும், மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இசுலாமியச் சமுதாயப் பெருமக்கள் இந்த ரமலான் மாதத்தை மிகமிகப் புனிதமான மாதமாகக் கடைபிடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள். இதனைத் தங்கள் கடமையாக நினைத்துச் செய்கிறார்கள்.

சிறுபான்மை இயக்கத்திற்கும் – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது – தொடரத்தான் போகிறது. அதில் யாரும் களங்கத்தையோ – பிரிவையோ ஏற்படுத்த முடியாது.

‘நான் சிறு வயது இளைஞனாக இருந்தபோது ஒரு கையில் குடிஅரசு இதழையும் – இன்னொரு கையில் தாருல் இஸ்லாம் இதழையும் பிடித்து திருவாரூரில் வலம் வந்தேன்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

தந்தை பெரியாரைப் போலவே, என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் பா தாவூத் ஷாவிற்கும் பங்கு உண்டு என்று கலைஞரே சொல்லி இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களையும், தலைவர் கலைஞர் அவர்களையும் இணைக்கன் பாலமாக இருந்ததே இசுலாமிய சமுதாய நிகழ்ச்சிதான். திருவாரூரில் நடந்த மிலாதுநபி விழாவிற்குப் பேச வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இந்த ஊரில் கருணாநிதி என்றால் யார்? அவரை அழைத்து வாருங்கள்’ என்று குறிப்பிட்டுச் சொல்லி அழைத்துள்ளார். எனவே இருவரும் முதன் முதலாக சந்திக்கக் காரணம் ஆனது மிலாதுநபி விழாதான் என்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது!

அதுமட்டுமல்ல, பள்ளிக் காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாய் இருந்து உதவி செய்தவர் திருவாரூரைச் சேர்ந்த அசன் அப்துல்காதர் அவர்கள்!கையெழுத்து இதழாக இருந்த முரசொலியை அச்சில் வெளியிட கலைஞர் திட்டமிட்டபோது அதனை அச்சிட்டுக் கொடுத்தவர் கருணை ஜமால் அவர்கள். அவரும் திருவாரூரைச் சார்ந்தவர்தான்!

உள்ளூரில் எழுதிக் கொண்டு இருந்த கலைஞரை சேலம் மார்டன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று மாபெரும் கதை, வசனகர்த்தாவாக அடித்தளம் இட்டவர் கவிஞர் கா.மு. ஷெரீப் அவர்கள்!

தலைவர் கலைஞரைத் தனது காந்தக் குரலால் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தவர் இசை முரசு நாகூர் அனீபா அவர்கள்!

இவ்வாறு கலைஞர் அவர்களின் வாழ்க்கையோடு இணைந்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இசுலாமியத் தோழர்கள்!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றம் 1967-ஆம் ஆண்டு ஏற்பட்டது. ஒரு பெரிய கூட்டணி அமைந்தது. ஆட்சிக்கு வந்தோம். அந்தக் கூட்டணியில் மிகமிக முக்கியப் பங்களித்து – தோள் கொடுத்து நின்றவர் “கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்” அவர்கள்தான்.

1947 முதல் 1962 வரை தமிழகத்தில் இசுலாமிய அமைச்சர் யாரும் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள்தான், இசுலாமிய சமூகத்திற்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்கள். அது காங்கிரஸ் ஆட்சிக்காலம். கடையநல்லூர் அப்துல் மஜீத் அவர்கள் அதன்பிறகுதான் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே சிறுபான்மையினர் உரிமைக்குக் குரல் கொடுத்த கழகம், ஆட்சி அமைத்த பின்னர் ஏராளமான சாதனைகளைச் செய்து கொடுத்தது.

* 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* 1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* 2000-ஆம் ஆண்டில் உருது அகாடமி தொடங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாகச் செலவிற்காக தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* ஹஜ் மானியத்தை அதிகப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு ‘கண்ணியமிக்க காயிதே மில்லத்’ அவர்களின் பெயரை 1974-ஆம் ஆண்டு சூட்டியவர் தலைவர் கலைஞர்.

* நபிகள் நாயகம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* சிறுபான்மையின மாணவியர் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற இலவச வசதிகளைச் செய்து கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியருக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை 2007-ஆம் ஆண்டு வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

* 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

– இவை சிறுபான்மையின மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும்தான். இவ்வாறு ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவருடைய வழியில் இப்போதும் சிறுபான்மையினருக்கான நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஆகும்.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை நான்தான் – கலைஞருடைய மகன்தான் – “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்” கொண்டு வந்து நிறைவேற்றினேன். முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

மாநிலங்களவையில் CAA-விற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தான் அ.தி.மு.க. உறுப்பினர்கள்.இந்தப் பத்துப் பேரும் ஆதரித்ததால்தான் அந்தச் சட்டமே நிறைவேறியது.

நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் – மக்களவையிலும் இதனை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் கையெழுத்து இயக்கம் நடத்திய கட்சி திமுக. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சி தி.மு.க. – என்பதை யாரும் மறுக்கவோ – மறைக்கவோ முடியாது.

இந்த வரிசையில் இசுலாமிய சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறோம்.

* நம்முடைய அரசு அமைந்ததற்கு பிறகு, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைக்கப்பட்டு நம்முடைய மரியாதைக்குரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் அதன் தலைவராகவும் – முன்னாள் எம்.பி. மஸ்தான் அவர்கள் அதன் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 3,852 உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

* உலமாக்கள், பணியாளர் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு மிதிவண்டி தரப்பட்டுள்ளது.

* 2,734 பேருக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

* வக்பு வாரியத்திற்கான ஆண்டு நிர்வாக மானியம் 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ – மாணவியர் சேர்க்கைக்கு பெற்றோர் வருமான வரம்பு என்பது 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் விழாக்கள் அன்று சிறப்பு உணவு வழங்கப்படுகிறது.

* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ஐந்து மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகங்கள் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* தேனி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் உதவி சங்கங்களும், கரூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கிறிஸ்தவ உதவி சங்கங்களும் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* பள்ளிவாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்களைப் பழுது பார்க்க வழங்கப்படும் மானியம் 6 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

– இவை அனைத்தும் கடந்த 11 மாத காலத்தில் செய்த பணிகள் ஆகும்.

அதாவது உங்களது கோரிக்கைகளை எங்களிடம் சொல்லாமலேயே நிறைவேற்றித் தரும் ஆட்சிதான் கழக அரசு. இதைக் கழக அரசு என்றுகூட சொல்ல மாட்டேன் – நமது அரசு – நம் அனைவரின் அரசு.

மதம் என்பதும், சமய நம்பிக்கைகள் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும்.

ஆனால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும்.

அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மையும் அதிகம், பலமும் அதிகம்.

தமிழினத்தை சாதியால் – மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக – நமது வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழினம் பலியாகிவிடக் கூடாது. அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து – தெளிந்து – புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் அமைதி நிலவ வேண்டும், அமைதியான – நிம்மதியான நாடுதான் அனைத்துவிதமான வளர்ச்சியையும் பெறும். அத்தகைய வளர்ச்சிக்கான சூழ்நிலையை கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய அரசு உருவாக்கி உள்ளது.

அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் வளர்ச்சியானது தமிழ்நாட்டை இந்தியாவின் சிறப்பான மாநிலங்களில் முதலிடத்தைப் பெறும் அளவிற்கு முன்னோக்கி நகர்த்தி வருகிறது.

இத்தகைய வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்லி – இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இப்தார் வாழ்த்துகளை நான் சொல்ல விரும்புகிறேன்.

அத்தோடு இந்த நிகழ்ச்சியை எல்லோரும் பாராட்டும் வகையில் மிகுந்த எழுச்சியோடு – உணர்ச்சியோடு இதை நடத்தி வெற்றி கண்டிருக்கும் நம்முடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புக்குரிய டாக்டர்.மஸ்தான் அவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.