“நம்மளை இங்க எரிக்கத்தாண்டா விடுவாங்க எறிய விடமாட்டாங்க”… வசனங்களால் நெஞ்சைச் சுடும் ’நெஞ்சுக்கு நீதி’ ட்ரெய்லர்

0
271

”நம்மளை இங்க எரிக்கத்தாண்டா விடுவாங்க எறிய விடமாட்டாங்க”… வசனங்களால் நெஞ்சைச் சுடும் ‘நெஞ்சுக்கு நீதி’ ட்ரெய்லர்

ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படம், தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

“எல்லோரும் சமம்னா யாரு சார் ராஜா?” என்று தொடங்கும் ட்ரெய்லர், “எல்லோரும் சமம்னா யாரு ராஜா ஆகிறது?” என்ற கேள்வியுடனேயே நிறைவடைகிறது. இரண்டு நிமிட ட்ரெய்லரில் இரண்டுமுறை வரும் இந்தக் கேள்வியின்போது சட்டப்புத்தகத்துடன் இருக்கும் அம்பேத்கர் சிலை காட்டப்படுகிறது. எல்லோரும் சமம் என்றால் அதிகாரம் செய்யும் ராஜாக்களுக்கு இங்கு வேலையில்லை. மக்கள்தான் ராஜா. சட்டம்தான் ராஜா. ஜனநாயகம்தான் ராஜா என்பதை அம்பேத்கர் சிலையும் கையில் இருக்கும் சட்ட புத்தகமும் குறியீடாய் நமக்கு உணர்த்துகிறது.

“நம்மளை இங்க எரிக்கத்தாண்டா விடுவாங்க எறிய விடமாட்டாங்க” போன்ற வசனங்கள் இன்னமும் சாதிக்கொரு சுடுகாடு என்றிருக்கும் ஆதிக்க மனப்பான்மையை சுட்டெரிக்கிறது.

’அவங்கக் குளிச்சி அழுக்காகாதத் தண்ணி நாங்கக் குடிச்சா அழுக்காகுமா சார்?”…”நீ ஆக்குன சோத்தை எங்க வூட்டு பசங்க சாப்பிடணுமாக்கும்? அதை உங்க வூட்டு பன்னிகளுக்கு போடுறதோட நிறுத்திக்கோ”… ”செத்தது ரெண்டு தலித் பொண்ணுங்க விசாரணை நேர்மையா இருக்கும்ங்களா?” போன்ற வசனங்களும் காட்சிகளும் பட்டியலின மக்கள் படும் துயர சாட்சியாய் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், ”அவங்கவங்களை அவங்க இடத்துல வைக்கணும் சார்” என்று வரும் வசனத்தின்போது கூண்டில் அடைப்பட்ட அம்பேத்கர் சிலை காட்டப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, உலகிலேயே நீண்ட அரசியல் சாசனம், அதுவும், உலகிலேயே ‘சமூக நீதி’ என்னும் வார்த்தை இருக்கும்படி அரசியல் சாசனமியற்றியவரும் இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான அம்பேத்கர் கூண்டில் அடைப்பட்டுக் கிடக்கவேண்டியவரா? என்பதையும் காட்சிகளாலேயே பொது சமூகத்தினரின் மனதை துளைத்தெடுக்கிறது. கூண்டில் அடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையுடன் பெரியார் சிலையும் அடைக்கப்பட்டு சமீபத்திய நிகழ்வுகளை கண்முன் நிறுத்துகின்றன.

இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் பட்டியலின மக்கள் படும் துயரங்களை கடந்துபோகும் ஒரு காட்சிகளாகவோ அல்லது ஒரு சம்பவத்தை மையப்படுத்தியோதான் வந்துள்ளன. ஆனால், ‘நெஞ்சுக்கு நீதி’யின் ஒவ்வொரு காட்சிகளும் சாதிக்கொடுமைகளின் வெவ்வேறு வடிவங்களை ஆவணப்படுத்தியுள்ளது. அது, சாதிய ஆணவக்காரர்களின் நெஞ்சை குத்திக் கிழிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, ஒரு ட்ரெய்லரிலேயே சாலையில் சட்டப்புத்தகத்துடன் அம்பேத்கர், கூண்டுக்குள் அடைபட்ட அம்பேத்கர், நீதி வழங்கும் காவல்நிலைய சுவற்றில் அம்பேத்கர் என மூன்றுமுறை அம்பேத்கரின் புகைப்படங்கள் காட்டப்படுகின்றன.

அம்பேத்கர் நிறைந்த இப்படியொரு ட்ரெய்லர் தமிழ் களத்திற்கு புதிது. ’ஆர்டிகிள் 15’ ரீமேக் என்பதாலும் கதைக்களமே அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் வழியே வழங்கப்படும் நீதி என்பதாலும் துணிச்சலாகவும் நேர்மையுடனும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.