நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

0
240
நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமாக பரவியது. இதற்காக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. ஆனால், குறைந்தது. பின்னர் இதற்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பரவிய நிலையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தொற்று குறைந்து வருகிறது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் 116 கோடிக்கும் மேலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.