தைரியமாக இருங்கள்- உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

0
92

தைரியமாக இருங்கள்– உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னை: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 3-வது நாளாக நீடிக்கிறது.

இதையடுத்து அங்கு வசித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தவித்து வருகிறார்கள். இதையடுத்து மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் இருந்து உக்ரைனுக்கு மருத்துவ படிப்புக்காக சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் அங்கு தவித்து வருகிறார்கள். சென்னை முதல் குமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் தங்கியிருந்து படித்து வந்தனர்.

போர் பதட்டம் காரணமாக கடந்த வாரமே இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய போதும் பலர் உடனடியாக வெளியேறாமல் அங்கு மாட்டிக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து உக்ரைனில் தவித்து வரும் தமிழர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்பதற்கு மத்திய-மாநில அரசுகள் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரிபவர்களை மீட்பதற்கு முதல்-அமைச்சர். மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் சென்னை எழிலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் எழிலகம் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது உக்ரைனில் தங்கியுள்ள ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்களுடன் அவர் வீடியோ காலில் பேசினார்.

அப்போது அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் நிலைமை எப்படி உள்ளது என்பதை கேட்டறிந்ததுடன் பாதுகாப்பாகவும், தைரியமுடனும் இருக்குமாறும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மாணவர் ஒருவருடன் மு.க.ஸ்டாலின் உரையாடினார். அதன் விவரம் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- வணக்கம் பிரதர். எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடன் எத்தனை பேர் உள்ளனர்?

மாணவர்:- நன்றாக இருக்கிறேன். என்னுடன் 5 பேர் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின்:- அங்கு என்ன “பொசிசன்” (நிலைமை) அது பற்றி உங்களால் எதுவும் சொல்ல முடியுமா?

மாணவர்:- நாங்கள் இருக்கும் பகுதியில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் பாதுகாப்புடன்தான் இருக்கிறோம்.

மாணவர்:- சாப்பாடு எல்லாம் கிடைக்கிறது. எல்லை வழியாக எங்களை இந்தியாவுக்குள் அழைத்து செல்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறி இருக்கிறார்கள்.

சேப்பாக்கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்ட காட்சி.

மு.க.ஸ்டாலின்:- பாதுகாப்புடன் தைரியமாக இருங்கள். நாங்கள் இருக்கிறோம். இங்கிருந்தபடி உங்களை மீட்பதற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், மீட்பு பணிகளையும் செய்து வருகிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலினும், அந்த மாணவரும் வீடியோ காலில் பேசிக் கொண்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கும், அவர்களின் பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில கட்டுப்பாட்டு அறையில் தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மையத்துக்கு நேரில் சென்று மாணவர்களிடம் காணொலி அழைப்பு வாயிலாக பேசினார். அப்போது அவர்களிடம் தைரியமாகவும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வின்போது அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியம், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த கட்டுப்பாட்டு மையம் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. அவருக்கு கீழ் கட்டுப்பாட்டு மையத்தில் 20 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

கம்ப்யூட்டர்களும் அமைக்கப்பட்டு மாணவர்கள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மையத்தை தொடர்பு கொண்டு உக்ரைனில் தவிக்கும் மாணவ- மாணவிகள் தங்களது நிலைமையை எடுத்து கூறி வருகிறார்கள். அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் முழுமையாக பதிவு செய்து வருகிறார்கள்.

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் மாணவர்களுடன் வீடியோ மூலமும் பேசி கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தைரியமும், நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள்.

இதன் மூலம் உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைளையும் துரிதமாக மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.