தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் போடும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
136

தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் போடும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் மற்றும் சுகாதாரம் பணியாளார்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பணிகளை தொடங்கி வைத்தார்.

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள 60 வயதினர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் மூன்றாவது டோஸ் போட தகுதி பெறுகின்றனர். இவர்கள், ‘கோ – வின்’ இணையதளம் வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அடையாள சான்றுடன் நேரடியாக சென்றும், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இரண்டாவது டோஸ் போட்ட தேதியில் இருந்து ஒன்பது மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிவடைந்தவர்கள் மட்டுமே, மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்ள தகுதி பெறுவர். முதல் மற்றும் இரண்டாவது டோஸின் போது போடப்பட்ட அதே தடுப்பூசி தான், மூன்றாவது டோஸாகவும் போடப்படும். இதய நோய், நீரிழிவு, சிறுநீரக கோளாறு, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைகள், சிரோசிஸ், புற்று நோய், ‘சிக்கில் செல் டிசீஸ்’ எனப்படும், ரத்த அணு குறைபாடுகள் உள்ளிட்டவை இணை நோய்களாக கருதப்படும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியம் பெறும் ஆவணம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள சான்றாக அளிக்கலாம். தகுதி உள்ளோருக்கு முன்பதிவு செய்யாவிடினும் குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டல் அனுப்பப்படும். முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி, தொற்று பாதிப்பு தீவிரமடைவதில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கிறது. தடுப்பூசியின் வீரியம் குறிப்பிட்ட காலத்திற்கு பின் குறையத் துவங்கும். உருமாறிய வகை கொரோனா வைரஸ் முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களை மீண்டும் தாக்கக்கூடிய சாத்தியம் அதிகமாக உள்ளது. அதிலிருந்து அவர்களை பாதுகாக்கவே மூன்றாவது டோஸ் அளிக்கப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த 3ஆம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 15-18 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தச் சூழலில் தற்போது முதியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.