தமிழக சட்டசபை தேர்தல் 2021: 45 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் ‘வெப் கேமிரா’ மூலம் கண்காணிப்பு

0
214

தமிழக சட்டசபை தேர்தல் 2021: 

45 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் ‘வெப் கேமிரா’ மூலம் கண்காணிப்பு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 12-ந்தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று மாலை வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.

234 தொகுதிகளிலும் நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அதன்பிறகு மனுவை திரும்ப பெற 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

22-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை? எவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மத்திய துணை நிலை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஓட்டுப்பதிவின் போது எத்தகைய கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. சுமார் 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா மூலம் கண்காணிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வருகிற 22, 23-ந் தேதிகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற. அப்போது எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்துவது என்பது முடிவு செய்யப்படும்.

வருகிற 27-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா பொருத்தும் பணி நடைபெறும். இதற்காக பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி தமிழக பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளருக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.

வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு ஒத்திகை பார்க்கப்படும். ஏப்ரல் 3, 4-ந்தேதிகளில் முதல் ஒத்திகையும், 5-ந்தேதி 2-வது கட்ட ஒத்திகையும் நடைபெறும்.

ஏப்ரல் 6-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே மாதம் 2-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும்.