தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்

0
180

தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய குடியரசு தலைவர் சிறப்பு கொடியை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.

https://twitter.com/mkstalin/status/1553667527963987968

சிறப்பான சட்டம் – ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட பல அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு மாநில காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று அதனை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதேபோன்று இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் கொடியை ஒப்படைத்தார்.

https://twitter.com/VPSecretariat/status/1553625706902745090

அப்போது வானத்தில் வண்ண நிற பலூன்கள் பறக்கவிடப்பட்டன.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை என்றார். உயிரை பொருட்படுத்தாமல் காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரம் என்றும் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை என்று கூறிய முதலமைச்சர், சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக காவல்துறை இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு என்று தனியாக ஒன்று செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்று கூறினார். பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதன் மூலம் நல்ல வளர்ச்சியை நோக்கி தமிழகம் பயணிப்பதாகவும் தெரிவித்தார்.