தமிழகத்தில் 25-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது..!

0
104

தமிழகத்தில் 25-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது..!

சென்னை, தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அதன் மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 24 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

இதுவரை 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடியே 81 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போடாமல் 46 லட்சத்து 67 ஆயிரத்து 999 பேர் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 2-வது தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 34 லட்சத்து 32 ஆயிரத்து 862 பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 25-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களை இலக்காக வைத்து இந்த 25-வது தடுப்பூசி முகாம் செயல்படுகிறது.