டெல்டா மாவட்டங்களில் 4964.11 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணி- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி: நகர்புற அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்கு ரூ.80 கோடி அரசாணை வழங்கி உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 810 எந்திரங்களை கொண்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு விரைவில் கடைமடை வரை சென்றடைய உறுதி செய்யப்படும்
மேலும் சென்ற ஆண்டு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை வருங்காலங்களில் தவிர்க்கவும் வடிகால்களை சீரிய முறையில் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு தூர்வாரும் பணிகள் சீரிய முறையில் நடைபெற தமிழ்நாடு அரசின் மூலம் 10 மாவட்டங்களுக்கும் குடிமை பணி அலுவலர்கள் ஐஏஎஸ் அளவில் பணிகளை கண்காணிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறையின் மூலம் பணிகளை விரைவாக முடிக்கவும், நல்ல முறையில் மேற்கொள்ளவும் கூடுதலாக பொறியாளர்கள் தேவைக்கேற்ப இத்துறையில் பிற பிரிவுகளிலிருந்து பணியமர்த்தி கண்காணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பணிகளுக்கும் உழவர் குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.