சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும்”: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் உறுதி!

0
108

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும்”: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் உறுதி!

சிறுபான்மையின மக்களுக்கு என்றும் துணையாக திமுக அரசு இருக்கும் என சென்னை, சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியது வருமாறு:-

இந்த மாபெரும் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் முனைவர் த.இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ., அவர்களே! நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்களே!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்களே! சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களே! மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் அவர்களே! தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி அவர்களே!பங்கேற்று பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி அவர்களே! ஐட்ரீம்ஸ் மூர்த்தி அவர்களே! பிரபாகர் ராஜா அவர்களே! ஹசன் மௌலானா அவர்களே! மயிலை த.வேலு அவர்களே! இங்கே எனக்கு முன்னால் மிகச் சிறப்போடு, எழுச்சியோடு உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் என் பாசத்திற்குரிய . பீட்டர் அல்போன்ஸ் அவர்களே! தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை துணைத் தலைவர் மேதகு டாக்டர் அ.நீதிநாதன் அவர்களே! தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் பேரருட்.A.தர்மராஜ்ரசாலம் அவர்களே! அய்யாவழி சமயத் தலைவர் சன்னிதானம் பூஜிதகுருபாலபிரஜாபதி அடிகளார் அவர்களே! அனைத்து சமயத் தலைவர்களே! பேராயர் பெருமக்களே ! எங்களுக்கு எப்போதும் துணை நிற்கக்கூடிய சிறுபான்மை சமுதாய சகோதர, சகோதரிகளே ! என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் பாசத்தோடு அழைக்கக்கூடிய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே!உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

கிறித்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் திருவிழாவில் உங்களோடு இணைந்து, பிணைந்து நானும் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கக் கூடிய ஒரு நல்வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று அதற்குரிய தேதியை நிர்ணயித்து இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து வந்து உங்களிடத்தில் நிறுத்தி வைத்திருக்கக்கூடிய என்னுடைய அருமை நண்பர் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு முதலில் என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இனிகோ இருதயராஜ் அவர்கள் ஆண்டுதோறும் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து வந்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் வருகிறபோது நான் வந்திருக்கிறேன். கலைஞர் அவர்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும், அவருடைய மறைவிற்குப் பிறகும் அந்தச் சூழ்நிலையிலும் நான் வந்திருக்கிறேன். அவர் அழைப்பதற்கு முன்னாலேயே அவர் வந்து தேதியைச் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை, நடத்தப் போகிறோம் என்று சொன்னால் போதும், நான் என்ன தேதி தருகிறேனோ அந்தத் தேதியைப் பயன்படுத்திக்கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர் நடத்துவதுண்டு. நெஞ்சுக்கு நெருக்கமான விழாவாக இந்த விழா அமைந்திருக்கிறது. எத்தனையோ விழாக்களுக்குச் சென்றாலும், எவ்வளவு பெரிய கூட்டம் கூடக்கூடிய கூட்டத்திற்குச் சென்றாலும், இங்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகின்றபோது அதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாட்டின் உணர்வுகளையெல்லாம் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் உங்களிடத்தில் எடுத்துச் சொன்னார்கள்.

கிறித்துவ மக்களாக இருந்தாலும் – சிறுபான்மை மக்களாக இருந்தாலும்- அவர்களோடு எப்போதும் துணையாக நிற்பவர்கள்தான் நாங்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைச் சொல்லித்தான் நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சிறுபான்மையினருக்கு இந்த அரசு எத்தகைய முக்கியத்துவம் தரும் அரசு என்பதன் அடையாளமாகத்தான் – கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய இனிகோ இருதயராஜ் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வைத்து சட்டமன்றத்துக்கு கழகத்தின் சார்பில் நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம்.

சிறுபான்மை, கிறித்துவ மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் பிரதிநிதியாக ஒருவர் சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் இனிகோ அவர்கள் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.

முதலில் என் இதயத்தில் இடம்பெற்றார்.இப்போது சட்டமன்றத்தில் இடம்பெற்றார்.நாளைக்கு என்னவோ, அது தெரியாது எனக்கு.அதேபோல், இந்த ஆட்சி அமைந்ததும் சிறுபான்மையினர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டது. நம்முடைய மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் அந்த ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

சொல்லை வில்லாகப் பயன்படுத்தும் பேச்சாளர் அவர். எழுத்தை அதன் வலிமையோடு எழுதும் எழுத்தாளர் அவர். கொண்ட கொள்கையில் யாருக்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கக்கூடியவர். இந்தப் பெருமைகளைப் பெற்றவர்தான் நம்முடைய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்.

அவர் தலைமையில் சிறுபான்மையினர் ஆணையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை, நானும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இந்த அரசுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய வகையில் அவருடைய பணி அமைந்திருக்கிறது. எப்படி நீங்கள் மனதார என்னை வாழ்த்தினீர்களோ அதுபோல நானும் மனதார உங்களுக்கு அன்போடு நன்றி சொல்லி என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த வகையில் சிறுபான்மையினருக்கு எல்லா வகையிலான ஏற்றமும் வழங்கும் காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி காலம் தொடங்கி இருக்கிறது.

கிறித்துவர்கள் என்றோ சிறுபான்மையினர் என்றோ – ஒரு வித அடையாளச் சொல்லாகத்தான் நாம் அதனை பயன்படுத்துகிறோம். நாம் மொழியால் தமிழர்கள்தான். இனத்தால் தமிழர்கள்தான்.வழிபாடு என்பது அவரவர் விருப்பம். ஆனால் தமிழர்கள் என்பது பண்பாட்டுப் பிணைப்பு ஆகும்.

‘ஒரே வயிறு தாங்காத காரணத்தால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உடன்பிறப்புகள்தான் நாம். அந்த உணர்வோடுதான் நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கிறோம்.

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. கிறித்துவமும் திரும்பத் திரும்ப அன்பைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் மற்றவர்களுடன் அன்பாக இருங்கள் என்பதுதான் அனைத்து மதங்களின் சாராம்சமாக இருக்கிறது. அத்தகைய எண்ணங்களை நாமும் ஆதரிக்கிறோம். அதனை நாம் விமர்சிப்பது இல்லை.

அன்பு என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது, மொழி பார்க்காது, இனம் பார்க்காது, நிறம் பார்க்காது, பால் பேதம் பார்க்காது. இத்தகைய அன்பை அடிப்படையாகக் கொண்ட எதுவும், யாரும் ஏற்கத்தக்கவர்கள். இதில் பேதம் பார்க்கும் யாரும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அத்தகைய மானுடச் சிந்தனை, மனிதாபிமான எண்ணம் தழைப்பதற்கு, கிறித்துவ நல்லெண்ண இயக்கம் போன்ற இயக்கங்கள் அடித்தளம் அமைத்து இன்றைக்கு தன்னுடைய பணியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன், வாழ்த்துகிறேன்.

அத்தகைய அன்பின் வெளிப்பாடாகத்தான் நலத்திட்ட உதவிகள் இங்கே வழங்கப்பட இருக்கிறது. இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுப்போம் – என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இங்கே பொருள்களை நீங்கள் வழங்க இருக்கிறீர்கள்.

மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் மட்டும் செய்து விட முடியாது. இது போன்ற அமைப்புகளும் உதவிட முன் வர வேண்டும்.

இனிகோ இருதயராஜைப் பொறுத்தவரையில் எப்போது விழா நடத்தினாலும் அதனை ஒரு மத விழாவாக, கொண்டாட்டமான விழாவாக மட்டும் நடத்தாமல் நலிந்திருக்கக்கூடிய மக்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவாக நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வழக்கத்தை இந்த மேடையிலும் தொடர்ந்து கடைப்பிடித்துக் காட்டி இருக்கிறார்.

அன்பும், இரக்கமும், கருணையும் கொண்ட அரசைத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் முதல் தலைமுறையினர் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு 1972-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

சமூக சீர்திருத்தத் துறையை தோற்றுவித்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்.

சிறுபான்மை சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காக தனி வாரியம், இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, சத்துணவுத் திட்டம் ஆகியவற்றை கிறித்துவ சமுதாய மக்களுக்கு, பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நீட்டித்துத் தந்தவர்.

2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

– இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும்தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் தாயைப் போல் பார்த்துப் பார்த்து திட்டங்களைக் கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்னேற்றத்துக்கான பொறுப்புகளையும் ஏற்றிருந்தேன். அப்போது, வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ஒரு தனி கட்டடத்தைக் கட்டி, அதன் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து வந்து திறக்கச் செய்தோம். அதை திறக்கும்போது அக்கட்டடத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டபோது, உடனடியாக, அவர் அந்தக் கட்டடத்திற்கு ‘அன்னை தெரசா’ என்ற பெயரை சூட்டுங்கள் என்று சொல்லி, இன்று கம்பீரமாக அந்தக் கட்டடம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அதிமுக அரசு முடக்கியது. 2006-ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்ததும், அதை மீண்டும் செயல்பட வைத்தோம்.

– இத்தகைய சாதனைச் சரித்திரம்தான் மீண்டும் இப்போது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு திட்டமிடுதல்களை சிறுபான்மைத் துறையும், சிறுபான்மை ஆணையமும் திட்டமிடத் தொடங்கி இருக்கின்றன. கடந்த பத்தாண்டு காலமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் அனைத்தையும் சரி செய்யும் முயற்சியையும் தொடங்கி இருக்கிறோம். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை ஐந்தே மாதத்தில் செய்திருக்கிறோம் என்பதை அரசியல் எல்லைகளைக் கடந்து பொதுவானவர்களும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அதில் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நிதிச் சுமை இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை, திட்டங்களை நிறுத்தாமல் செய்து வருகிறோம்.

நாங்கள் சொன்ன அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி என்னையும் ஏமாற்றி, உங்களையும் ஏமாற்ற நான் தயாராக இல்லை. ஆனால் நிறைவேற்றியே காட்டுவோம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ஏழை எளிய மக்களாக இருந்தாலும் -மகளிராக இருந்தாலும் -பழங்குடியினராக இருந்தாலும் -இலங்கைத் தமிழராக இருந்தாலும் -மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் திருநங்கையராக இருந்தாலும் -குழந்தைகளாக இருந்தாலும் -அனைவரது கோரிக்கையையும் தாயுள்ளத்தோடு செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு இன்றைக்கு மக்களுடைய மனதில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது.

அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம். அத்தகைய சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும். அந்த உணர்வை ஊட்டும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா அமைந்திருக்கிறது என்று நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியை இனிகோ இருதயராஜ் நடத்தியிருக்கிறார் என்றால், தொடர்ந்து 12 ஆண்டுகாலமாக இதை நடத்தி வந்து இன்று நாமெல்லாம் கலந்து கொள்ளக்கூடிய வகையில் எழுச்சியோடு, உணர்ச்சியோடு இதை நடத்திக் கொண்டிருக்கிறார், அவர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்த இருக்கிறார். அதில் எந்த மாற்றமும், சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நான்தான் வரப்போகிறேன், அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போகிறேன்.

சில நேரங்களில் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது இரண்டு, மூன்று நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர் எனக் குறிப்பிட்டு என்னை அழைத்திருந்தார்கள். தயவு செய்து, சிறப்பு விருந்தினர் என்று குறிப்பிட்டு என்னைப் பிரித்துவிடாதீர்கள். என்றைக்கும் உங்களோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சொன்னேன். மேயராக இருந்தபோது வந்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வந்திருக்கிறேன், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது வந்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்தபோது வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

இந்த இனிய வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த இனிகோ இருதயராஜ் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.