சிங்கப்பூரில் மூன்று நிறுவன CEO-களை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. புகைப்பட தொகுப்பு இங்கே!

0
164

சிங்கப்பூரில் மூன்று நிறுவன CEO-களை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. புகைப்பட தொகுப்பு இங்கே!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு இலட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இந்த இலக்கினை அடைந்திட, ரூ.23 இலட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில் துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறது.

இதன் மூலம் ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒன்பது நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூர் நாட்டின் Temasek நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதேபோல், sembcorp நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிம்யின் வாங்க் மற்றும் Capita Land நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா ஆகியோரையும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டும் என்றும் சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.