“கேள்வி கேட்டது ஆங்கிலத்தில்.. பதில் இந்தியிலா?” : ஒன்றிய அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி MP!
மக்களவையில் மார்ச் 16ஆம் தேதி கேள்வி நேரத்தில் பேசிய தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி, ”தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 20 கிலோ இலவச அரிசி வழங்கிவருகிறோம்.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான செலவை மாநில அரசு ஏற்க வேண்டுமா, ஒன்றிய அரசு ஏற்க வேண்டுமா? பொது விநியோகத் திட்டம் என்பது மாநில அரசின் கீழ் வருவது. அதனால் இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார் கனிமொழி எம்பி.
இதற்கு உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பதிலளிக்க எழுந்து இந்தியில் பேசத் தொடங்கினார். அப்போது கனிமொழி எம்.பி. குறுக்கிட்டு, “நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டேன். அமைச்சருக்கு ஆங்கிலம் மிக நன்றாகத் தெரியும். ஆங்கிலத்திலேயே பதில் சொல்லுங்கள். இந்தியில் எதற்கு சொல்கிறீர்கள்?” என்று வலியுறுத்த, அமைச்சர் பியூஸ் கோயல், “மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறதே” என்று கூறினார்.
ஆனால் விடாத கனிமொழி எம்.பி, ”கேள்வி கேட்ட எனக்கு உங்கள் பதில் புரியும் வகையில் ஆங்கிலத்திலேயே பதில் கூறுங்களேன்” என்று மீண்டும் கூறினார். இதையடுத்து அமைச்சர் பியூஸ் கோயல் “சகோதரி கனிமொழியை நான் மதிக்கிறேன்.
அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு… “புலம்பெயர்ந்த மக்களுக்கான ரேஷன் பொருட்களுக்கான செலவை 100% ஒன்றிய அரசே ஏற்கும்” என்று ஆங்கிலத்தில் தெரிவித்தார். இந்தியில் பேசத் தொடங்கிய அமைச்சரை ஆங்கிலத்தில் பதிலளிக்க வைத்த கனிமொழி எம்.பி-யை உறுப்பினர்கள் பாராட்டினார்கள்