‘கேப்டன்’ விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளல்! ‘கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்த கருப்பு எம்.ஜி.ஆர்’!! – மூத்த பத்திரிகையாளர் ‘கலைப்பூங்கா’ டி.என்.இராவணன்

0
118

‘கேப்டன்’ விஜயகாந்த் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளல்! ‘கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்த கருப்பு எம்.ஜி.ஆர்’!! – மூத்த பத்திரிகையாளர் ‘கலைப்பூங்கா’ டி.என்.இராவணன்

கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.

ஒரு நடிகராக தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த மனிதநேயம் கொண்டவராக திகழ்ந்தவர். எம்ஜிஆருக்கு பிறகு ஒரு நடிகராக மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர்.

எம்.ஜி.ஆர் வீட்டிற்கு அவரை பார்க்க சென்றால் வெறும் வயிற்றுடன் வீடு திரும்ப மாட்டோம் என்கிற நம்பிக்கை எந்தளவுக்கு மக்களுக்கு இருந்ததோ, அதே நம்பிக்கையை மக்கள் விஜயகாந்த் மீதும் வைத்திருந்தனர். அதனால் தான் மக்கள் மத்தில் அவர் கருப்பு எம்.ஜி.ஆர் என போற்றப்பட்டார். கருப்பு எம்.ஜி.ஆர் யார் என தற்போதுள்ள இளைஞர்கள் வரை பலரிடம் கேட்டாலும் அனைவரும் கூறும் ஒரே பதில் விஜயகாந்த் பெயராக தான் இருக்கும். அதனால் தான், நடிப்பை தாண்டி , அவர் அரசியலுக்குள் நுழைந்த பின்னர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற ஒரு தனி கட்சியை நிறுவி குறுகிய காலத்திற்குள் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறி சென்றார். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள் வெகு சிலரே. அதில் மிக முக்கியமான இடத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜயகாந்த்.

கலைத்துறை மீது உள்ள பாசத்தால், கலைத்துறைக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று தீர்த்து வைத்தார் விஜயகாந்த். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்தது. மோசமான சூழலில் கடனில் இருந்த நடிகர் சங்க கட்டிடத்தை அவர் கஷ்டப்பட்டு மீட்டார்.

விஜயகாந்த் மனிதன் நேயம் உள்ளவர்கள் சினிமாவில் இருக்கிறார்கள் என்பதற்க்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கேப்டன் எல்லோருக்கும் நல்ல நண்பர். உதவி என்று வந்தால் இல்லை என்று சொன்னதில்லை. அவர் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக திகழ்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்த கருப்பு எம்.ஜி.ஆர்.

‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகத்திற்கும், தமிழக மக்களுக்கும், தேமுதிக கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவருடைய மனைவி தேமுதிக பொது செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள், அவரது கட்சியை சார்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!

மூத்த பத்திரிகையாளர் ‘கலைப்பூங்கா’ டி.என்.இராவணன்