கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

0
182

கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏக்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் என 133 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். அப்போது, திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினின் பெயரை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்திட, அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார்.

இதனை தொடர்ந்து திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு துரைமுருகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, துரைமுருகன் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

இந்நிலையில், காலை திமுக தலைவர் ஸ்டாலின், ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான திமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்குகினார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்ததைத் தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்த புல்வெளி மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அங்கு சுமார் 200 பேர் அமரும் வகையில் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடைபெறுகிறது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.