கள்ளக்குறிச்சி விவகாரம்.. அமைதி காக்க வேண்டுகிறேன்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0
91

கள்ளக்குறிச்சி விவகாரம்.. அமைதி காக்க வேண்டுகிறேன்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி கடந்த 13 தேதி விடுதியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இறந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளியின் உள்ளே இருந்த பேருந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அடித்து உடைத்து தீ வைத்துள்ளனர்.

மேலும் அவர்களைக் கட்டுப்படுத்த வந்த போலிஸார் மீதும் கற்கலை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலாளரையும் காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.