ககன்யான் திட்டத்தில் இடம்பெற்ற தமிழக விண்வெளி வீரர் அஜித் கிருஷ்ணன்
‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதன்படி விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 வீரர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இதில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1982-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி சென்னையில் பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பட்டம் பெற்ற அஜித் கிருஷ்ணன், விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் (Sword of Honor) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
அஜித் கிருஷ்ணன் 21 ஜூன் 2003 அன்று இந்திய விமானப்படையின் போர்ப் பிரிவில் நியமிக்கப்பட்டார். பயிற்சி விமானிகளுக்கான ஆலோசகராகவும் உள்ளார். அதோடு இந்திய விமானப்படையின் புதிய விமானத்திற்கான சோதனை பைலட்டாகவும் இருக்கிறார்.
வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் ஸ்டாப் சர்வீசஸ் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி.) அஜித் கிருஷ்ணன் பயிற்சி பெற்றுள்ளார். இவர் 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-21, மிக்-29, ஜேகுவார், டார்னியர், ஏ.என்.-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை இயக்கிய அனுபவம் இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ககன்யான் திட்டம்: ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 4 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.