ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்?
அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் கேலிக்கூத்துகள்!
கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம்!
கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில் 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கேலிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கழிப்பறைக்கு கதவும் இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஏற்கெனவே, ஆழ்குழாய்க் கிணற்றின் அடிபம்பை அகற்றாமலேயே கான்கிரீட் தளம் அமைத்தது, இருசக்கர வாகனத்தின் டயர் சாலையில் புதையும்படி சிமென்ட் சாலை போட்டது போன்ற கோமாளித்தனங்களின் வரிசையில் இப்போது ஒரே அறையில் இரு கழிப்பறைகள். தொடரும் இந்த கேலிக்கூத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்.
இதுபோன்ற நிகழ்வுகளை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது மட்டுமின்றி, அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மறு கட்டுமானத்துக்கான தொகையை அவர்களது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதே, இனியும் இதுபோல நேரிடாமல் தடுக்கும்.