உ.பி.யில் 255 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. – தேர்தல் முடிவின் முழு விவரம்

0
73
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் 255 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. – தேர்தல் முடிவின் முழு விவரம்

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்கும் என்றே கூறியது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர்.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல் மந்திரி ஆகிறார்.

பா.ஜ.க. 255 இடங்களிலும், அப்னா தள் 12 இடத்திலும், நிஷாத் 6 இடத்திலும் என மொத்தம் 273 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆட்சியைப் பறிக்கும் கனவுடன் களம் புகுந்த சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வென்றுள்ளது.

உ.பி.யில் ஒரு முதல் மந்திரி 5 ஆண்டு முழு பதவிக்காலத்திலும் பதவி வகித்து, மீண்டும் முதல் மந்திரி பதவி ஏற்பது 37 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி. தலைநகர் லக்னோவில் பா.ஜ.க. வெற்றியை அந்தக் கட்சியின் தொண்டர்கள் மேளதாளங்களுடன் ஆடிப்பாடி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.