ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி : அனைத்து துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

0
316

ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான உபகரணங்களை கொண்டுவரும் கப்பல்களுக்கு அனைத்து கட்டணங்களும் தள்ளுபடி : அனைத்து துறைமுகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு

புதுதில்லி, ஏப்ரல் 25, 2021

நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் தொடர்பான சாதனங்களின் தேவை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, இவற்றை கொண்டு வரும்  சரக்கு கப்பல்களுக்கு காமராஜர் துறைமுகம் உட்பட அனைத்து முக்கிய துறைமுகங்களும், கப்பல்களுக்கான கட்டணம், சேமிப்பு கிடங்கு கட்டணம் உட்பட அனைத்து வகையான கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கீழ்கண்ட பொருட்களை கொண்டு வரும் கப்பல்களுக்கு, துறைமுகங்களில் இடம் அளிக்க அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது:

* மருத்துவ ஆக்ஸிஜன்.

* ஆக்ஸிஜன் டேங்குகள்

* ஆக்ஸிஜன் பாட்டில்கள்,

* பிற இடங்களுக்கு எடுத்து செல்லக்கூடிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள்,

* ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்,

* ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிப்புக்கான ஸ்டீல் பைப்புகள் மற்றும் துணை சாதனங்கள்

இவற்றை கொண்டு வரும் சரக்கு கப்பல்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களை கொண்டு வரும் கப்பல்களுக்கு, துறைமுகத்தில் அதிக முன்னுரிமை அடிப்படையில் இடமளித்து, அந்த சரக்குகளை விரைவில் கையாண்டு, துறைமுகத்தை விட்டு வெளியே செல்ல, சுங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என துறைமுகக் கழகங்களின் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒருவேளை, சரக்கு கப்பல்கள் மேலே கூறப்பட்ட பொருட்களுடன், இதர சரக்குகளையும் கொண்டு வந்தால், சார்பு விகித அடிப்படையில் ஆக்ஸிஜன் தொடர்பான  பொருட்களுக்கு  கட்டண தள்ளுபடி அளிக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களை கொண்டு வரும் கப்பல்கள் துறைமுகங்களுக்குள் நுழையும் நேரம், துறைமுகங்களில் இருந்து சரக்குகள் வெளியேறும் நேரத்தை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கண்காணிக்கும்.

நாட்டில் கொவிட்-19 இரண்டாம் அலை நெருக்கடியை மத்திய அரசு தீவிரமாக கையாண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில், புதுமையான நடவடிக்கைகள் மூலம் நிலைமையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.