”அது உங்களுடைய உரிமைத் தொகை; இந்த திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது” : முதலமைச்சர் எழுச்சிமிகு பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தமிழ்நாடு முழுமைக்குமான திட்டமாக இருந்தாலும், நான் எதற்காக தருமபுரிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், மாண்புமிகு அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிப்பிட்டு சொன்னதுபோல, அதாவது 34 ஆண்டுகளுக்கு முன்னால் 1989-ஆம் ஆண்டு இதே தருமபுரி மாவட்டத்தில்தான் மகளிர் சுய உதவிக் குழு என்ற ஒரு மாபெரும் அமைப்பை அன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக இருந்த நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மகளிர், தாய்மார்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்திட வேண்டும், சுயமரியாதை உணர்வோடு வாழ்ந்திட வேண்டும், யாருடைய தயவை எதிர்பார்க்காமல், தன்னுடைய சொந்தக் காலில் அவர்கள் நிற்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் மகளிர் சுய உதவிக் குழு என்கிற அந்த அற்புதமான திட்டம். ஏழை எளிய மகளிரைக் கொண்டு முதன்முதலில் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது.
அன்று தலைவர் கலைஞர் அவர்கள் விதைத்த விதைதான் இன்றைக்கு மாபெரும் திட்டமாக தமிழ்நாடு எங்கும் தழைத்து, வளர்ந்து இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் அது ஒளியை ஏற்றி வைத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு கணக்கெடுத்துப் பார்த்தால்,4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் 51 லட்சத்து 46 ஆயிரம் மகளிர் பங்கெடுத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 3 இலட்சத்து 90 ஆயிரத்து 633 குழுக்களுக்கு 25 ஆயிரத்து 642 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
2006-11 காலக்கட்டத்தில் நான் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். துணை முதலமைச்சராகவும் இருந்தேன். அந்த சமயத்தில், அந்த காலக்கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மகளிர் உதவிக் குழுவினுடைய உறுப்பினர்களை நான் உருவாக்கினேன். குழுக்களையும் நான் உருவாக்கினேன். அவர்களுக்கான கடனுதவிகளை பல மணி நேரம் மேடைகளில் நின்று நான் வழங்கினேன். அதையெல்லாம் இப்போது நினைத்து பார்க்கிறேன்.
இன்னொரு சுவையான செய்தியைகூட உங்களிடத்தில் நான் சொல்லவேண்டும். மறக்க முடியாத நிகழ்ச்சி, என்னவென்று கேட்டீர்கள் என்றால், நான் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு நிகழ்ச்சிக்காக நான் செல்கிறபோது, அதில் கட்டாயம் மகளிர் சுய உதவிக் குழுக்களை பங்கேற்க வைத்தேன். பங்கேற்க வைத்து அவர்கள் அத்தனை பேருக்கும் சுழல்நிதி, வங்கிக்கடன், கடனுதவி இதையெல்லாம் அன்றைக்கு மானியமாக வழங்கினோம். அப்படி வழங்குகின்றபோது, ஒவ்வொரு நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் 5,000 பேர், பல மாவட்டங்களில் 7,000, 8000, 9,000, 10,000 பேர் இருந்தார்கள். அவ்வளவு பேருக்கும், ஒருத்தர் விடாமல், இப்போது அரசு நிகழ்ச்சி என்று பார்த்தீர்கள் என்றால், அது அமைச்சர்களாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, ஒரு அரசு நிகழ்ச்சி நடத்துகின்றபோது, நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள். ஒரு 5 பேருக்கு, 6 பேருக்கு அல்லது 10 பேருக்கு வழங்கிவிட்டு மீதமிருக்கக்கூடிய பயனாளிகள் எல்லாம் தயவு செய்து நேரமில்லை அதனால் உங்கள் வீடு தேடி வரும் இல்லையென்றால் அலுவலகத்திற்கு சென்று நீங்கள் வாங்கி செல்லுங்கள் என்று ஒரு செய்தி சொல்லிவிட்டு போய்விடுவார்கள். இது எல்லாம் கடந்த காலத்தில் நடந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. காரணம் நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பொறுத்தவரையில், எத்தனை பேர் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்களோ, அத்தனை பேருக்கும் தந்துவிட்டுதான் நான் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியில் சென்றிருக்கிறேன் என்ற உண்மையான செய்தியை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். காரணம் என்ன என்று கேட்டால், அலுவலகத்திற்கு வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று சொன்னால், சில பேருக்கு சங்கடங்கள் ஏற்படும். அதனால் பல பிரச்சனைகள் எல்லாம் வரும். பலபேருக்கு கிடைக்காமல் கூட போய்விடும்.
அந்த நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான், அந்த முறையை அப்போது நான் கையாண்டேன். அப்போதுகூட அவர்களுக்கெல்லாம் நம்பர் கொடுத்து வரிசையாக வரச் சொல்லுவோம். மேடைக்கு வந்து அந்த சுழல்நிதியை என் கையால் வாங்கிச் சென்று போவார்கள். ஒரு நிகழ்ச்சியில் இப்படி வாங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு வயதான தாயார் மேடைக்கு வந்தார்கள், என் கையைப் பிடித்து சொன்னார்கள். நாங்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறோம், நீங்கள் கூப்பிடும்போதுதான் மேடைக்கு வந்து வாங்கிக் கொண்டு செல்கிறோம். ஆனால் நானும் பார்க்கிறேன், வந்த நேரத்திலிருந்து நீங்கள் அத்தனை பேருக்கும் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் 10 பேர், 20 பேர் என்றால் பராவாயில்லை, 5000 பேருக்கு தருவதால் கிட்டதட்ட 2, 3 மணி நேரம் ஆகுமே, இவ்வளவு நேரம் நின்று கொடுப்பதனால் உங்கள் கால் வலிக்கவில்லையா? ஏன் உட்கார்ந்து கொண்டு கொடுங்கள், என்று அந்த தாய் என்னை பார்த்து சொன்னார்கள். அப்போது நான் சொன்னேன்.
நான் நின்றுகொண்டு கொடுக்கும்போது எனக்கு கால் வலிக்கவில்லை. காரணம் என்னவென்று கேட்டால், இதை வாங்குகின்றபோது முகம் மலர்ச்சியை பார்க்கிறேன், அதில் எனக்கு கால் வலி பறந்து போய்விட்டது என்று நான் சொன்னேன். எதற்காக நான் சொல்கிறேன் என்று சொன்னால், என்னை பெருமைப்படுத்துவதற்காக சொல்லவில்லை. அது முறையாக சென்று சேரவேண்டும், எந்த உணர்வோடு தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தை உருவாக்கினாரோ, அந்தத் திட்டம் மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு போய் சென்றடையவேண்டும். பயனடையவேண்டும், என்பதற்காகதான் அந்தத் திட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம்.
இன்றைக்கு கம்பீரமாக இது வளர்ந்து வந்திருப்பதை பார்த்து நான் பெருமைப்படுகிறேன். அப்படிப்பட்ட அந்த சிறப்பான திட்டத்திற்கு விதை போட்ட மண் தான் இந்த தருமபுரி மண் என்பதை நான் நினைத்து, நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
”அது உங்களுடைய உரிமைத் தொகை; இந்த திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது ” : முதலமைச்சர் எழுச்சிமிகு பேச்சு!
இந்த மாவட்டத்தில், ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் 14 ஆயிரத்து 104 குழுக்களிலுள்ள, 1 இலட்சத்து 69 ஆயிரத்து 248 மகளிர் குழு உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். மேலும் கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 625 குழுக்களுக்கு 751 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தியையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தருமபுரியில் விதைத்தால், அது தமிழ்நாடு முழுக்க முளைக்கும் என்ற நம்பிக்கையால் தான் இன்றைக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தையும் இங்கு நாங்கள் தொடங்கி வைத்திருக்கிறோம்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான், என்று சொல்லி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன் அல்லவா, அந்த பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு முதன்முதலில் கோட்டைக்குச் சென்று முதல் கையெழுத்திட்டது எது என்று கேட்டால், தமிழ்நாட்டுக்கான நலத்திட்ட உதவிகள். அவைகள் எல்லாம் இன்றைக்கு நாள்தோறும் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.
சுயமரியாதைக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் அறிவுச்சுடராக விளங்கியவர் நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இவர்கள் எல்லாம் வகுத்துத் தந்திருக்கக்கூடிய பாதையில்தான், தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக, அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திடச் செய்வதற்காக, நாள்தோறும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை, பல்வேறு மக்கள் பயன்படக்கூடிய திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
* முதன்முதலில் பதவியேற்றுக் கொண்டு கவர்னர் மாளிகையிலிருந்து நேராக கோட்டைக்குச் சென்று, நான் இட்ட முதல் கையெழுத்து எது என்று கேட்டால், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, அதுதான் நான் போட்ட முதல் கையெழுத்து. கடுமையான நிதி நெருக்கடி. அதுமட்டுமல்ல, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமையில் மிகவும் மோசமாக இருக்கக்கூடிய ஒரு துறை. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், அந்த காலக்கட்டத்தில், கடுமையான சூழ்நிலையில், கோடிக்கணக்கான மகளிருக்கு உதவி செய்யவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் அந்தக் கோப்பில் நான் கையெழுத்திட்டேன்.
* ஒரு நாளைக்கு 36 இலட்சம் மகளிர் இலவசமாக அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 283 கோடி முறை பெண்கள் பயணம் செய்திருக்கிறார்கள். இதனால், மாதந்தோறும், 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பெண்களால் சேமிக்க முடிகிறது. இதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம்.
* அரசுப்பள்ளியில் பயிலும் மாணவிகள் உயர்கல்வி பெற்றாகவேண்டும் அதற்கு அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. அந்த உதவித்தொகை அளித்தால் அந்த மாணவிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் அது பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் “புதுமைப் பெண் திட்டம்” என்ற ஒரு அற்புதமான திட்டத்தினை நாம் இன்றைக்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்தத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் கண்கெடுத்துப் பார்த்தால், 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இந்தத் திட்டத்தின் மூலமாக 11 ஆயிரத்து 252 மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
* காலை உணவுத் திட்டம். நீதிக்கட்சியினுடைய தலைவர்களில் ஒருவராக இருந்த திரு.தியாகராயர் அவர்கள்தான் மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் வரவேண்டும் என்பதற்காக, அவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய அந்த பள்ளிச் செல்வங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, அப்போது மதிய உணவுத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்கு பிறகு பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி அதை சிறப்பாக நிறைவேற்றி தந்தார். அதற்குப்பிறகு மறைந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவு திட்டம் என்று பெயரை மாற்றி அதை விரிவாக்கி இன்னும் சிறப்பாக நிறைவேற்றினார். அதை மறுக்க முடியாது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால், சத்துணவு திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று திட்டமிட்டே பிரச்சாரமே நடந்தது. ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். சத்துணவை, உண்மையான சத்துணவாக நான் வழங்குகிறேன் என்று சொல்லி, முட்டையோடு கலந்த சத்துணவை வழங்கியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இவையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான், இந்த காலை உணவுத் திட்டம். சத்துணவுத் திட்டம் என்பது மதியம் வழங்கப்படுகிறது. பள்ளிக்கு வந்தபிறகு மதியம் அந்த உணவு வழங்கப்படுகிறது. பள்ளிக்கு வீட்டிலிருந்து காலையில் 7, 8 மணிக்கு புறப்படுகிறார்களே, அதில் 100க்கு 99 சதவீதம் காலைச் சிற்றுண்டியை சாப்பிடாமலேயே அவசர அவசராமக புறப்பட்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் பசியோடு வரக்கூடிய அந்தக் குழந்தைகள் எப்படி கவனத்தை அந்தக் கல்வியில் செலுத்தமுடியும். ஆகவேதான், அதற்காக சிந்தித்து, யோசித்து காலையில் அந்த பிள்ளைகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று முடிவு செய்து முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் திட்டத்தை உருவாக்கி பள்ளிக்கூட மாணவ மாணவியர்க்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
2 இலட்சம் மாணவ மாணவியர் தினமும் காலையில் அந்த உணவை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் இப்போது வரக்கூடிய காலக்கட்டங்களில் இந்த மாதத்திலிருந்து விரிவுபடுத்தப் போகிறோம். எப்படி என்று கேட்டீர்கள் என்றால், அது ஒரு குறிப்பிட்ட பள்ளிகளுக்குத்தான்,
2 இலட்சம் மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில்தான் அதை நிறைவேற்றிக் கொண்டிருந்தோம். இப்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அந்த காலை சிற்றுண்டியை வழங்கவேண்டும் என்று முடிவு செய்து 18 இலட்சம் மாணவர்கள் அதில் இனிமேல் பயன்பெறப் போகிறார்கள் என்ற செய்தியை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த வரிசையில் தான் மகளிர் உரிமைத் திட்டம். அந்த மகளிர் உரிமைத் திட்டத்திற்கு எப்படி கலைஞர் அவர்கள் மகளிருடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தாரோ, அந்தத் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரைத்தான் இதற்கும் சூட்டவேண்டும் என்று முடிவு செய்து “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” என்ற பெயரில் அதை உருவாக்கியிருக்கிறோம்.
* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்று 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை சீர்திருத்த மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். அப்படி நிறைவேற்றிய தீர்மானங்களில் மிக மிக முக்கியமான ஒரு தீர்மானம்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கவேண்டும் என்ற அந்த தீர்மானம். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் தந்தை பெரியார் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அந்த தீர்மானத்தை 1989-ஆம் ஆண்டு 60 வருடங்களுக்கு பிறகு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திலே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி தந்தவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். இதுதான் பெண்ணினத்திற்கு திராவிட இயக்கம் வழங்கிய மாபெரும் அதிகாரக் கொடை. இதன் அடுத்த கட்டமாகத் தான் மகளிர் உரிமைத் திட்டத்தை வடிவமைத்துள்ளோம்.
இல்லறப் பொறுப்புகளுடன் பல்வேறு பணிகளை செய்து கொண்டிருக்கக்கூடிய, அதன்மூலம் தங்களுடைய குடும்பங்களுக்கு, அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுக்கெல்லாம் பணி செய்து அந்த குடும்பத்தின் உயர்வுக்கு உழைத்து கொண்டிருக்கக்கூடிய மகளிரின் உழைப்பை அங்கீகரிக்க வேண்டும். அதற்குரிய மரியாதை தரவேண்டும். இதனை மனதில் வைத்துக்கொண்டுதான், கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம்.
சொன்னதைச் செய்யத் தொடங்கிவிட்டதன் அடையாளம் தான் இன்றைக்கு நீங்கள் பார்க்கக்கூடிய இந்தக் காட்சி. இந்த விழா.
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நான் சொன்னேன். “தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் நிலைபெறவுள்ள, ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வகையில் அமைந்திடும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”என்ற திட்டத்தை நான் அறிவித்தேன்.
மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்தின் மூலம், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரைக்கு சென்று கொண்டிருக்கக்கூடிய மீனவ சமுதாயத்தை சார்ந்திருக்கக்கூடிய மகளிர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடக்கூடிய மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரேநாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் சென்று பணிபுரியக்கூடிய விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மகளிர், என பல்வேறு வகையில் தங்கள் விலைமதிப்பில்லாத உழைப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறவார்கள் என்று நினைத்து தெளிவாக சொன்னேன். யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று கேட்டார்கள், ‘யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் அவசியம் தேவை இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று நான் அழுத்தமாக சட்டமன்றத்தில் சொன்னேன்.
இந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக கடந்த ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் திட்டம் கிடையாது. இதுவரை இப்படிப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லத்தக்க அளவிற்கு இந்த மாபெரும் திட்டம். அடுத்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளது என்பதையும் தெரிவித்திருக்கிறேன்.
இந்தத் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் அன்று இந்தத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதன்பிறகு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உங்களது வங்கிக் கணக்கில் வந்துவிடும். அதனை யாரும் தடுக்க முடியாது. எந்த தவறும் நடக்க வாய்ப்பே கிடையாது. இது அரசாங்கம் தருகிற உதவித் பணமாக நீங்கள் கருத வேண்டியதில்லை. அது உங்களுடைய உரிமைத் தொகை, மகளிர் உரிமைத் தொகை அதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இத்திட்டத்தில் பயன் அடைக்கூடிய வகையில், அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்கள் அதை உறுதி செய்தாக வேண்டும்.
இந்த மகத்தான திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மகளிரின் சமூக பொருளாதார நிலைமை பெருமளவில் மேம்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மாறிவரும் சமுதாய, பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப பெண்களின் பங்களிப்பு, ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும், மாநிலத்தில் ஏன் நாட்டின் வளர்ச்சிக்காகவும் கூட மிகப்பெரிய உந்துசக்தியாக திகழ்ந்து வருகின்றது.
இந்தப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பெண்களின் சுயமரியாதையையும், பொருளாதார விடுதலையும் வழங்க தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இன்று இந்த “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை” நடைமுறைப்படுத்த நாமெல்லாம் ஒன்று கூடியுள்ளோம்.
இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தபோது, இதை நிறைவேற்ற முடியாது வெறும் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று சில பேர் அரசியல் ரீதியாக பேசினார்கள். நான் அதற்கெல்லாம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. பதில் சொல்லவும் தயாராக இல்லை. பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இவர்களால் தரமுடியாது என்று திட்டமிட்டுச் சொன்னார்கள். ஆட்சிக்கு வந்ததும் கொடுத்திருப்போம். ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு என்ன நிலை? நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா என்ற கொடிய நோயில் இந்த நாடு சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. அப்போது இருந்த நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால்தான், உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முன்வர முடியவில்லை. ஆனால் இன்றைக்கு அதை ஓரளவு நிதி நிலைமையை சரிசெய்து, அதுவும் முழுமையாக அல்ல, ஓரளவு நிலைமையை சரி செய்து, இப்போது செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் வழங்கப் போகிறோம். இதனைச் சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்தத் திட்டத்தை எப்படியாவது கொச்சைப்படுத்த வேண்டும். முடக்க வேண்டும், மக்களிடத்தில் ஒரு தவறான பிரச்சாரம் செய்து திட்டமிட்டு சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைபற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். இதை அறிவித்துவிட்டால், நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலினுடைய பணி என்பதை அழுத்தந்திருத்தமாக நான் தெரிவிக்க விரும்புகிறேன். அது தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் என்ன சொன்னேன். தேர்தல் வெற்றி செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வெற்றி செய்தியை தலைவருடைய நினைவு இடத்திற்குச் சென்று மரியாதை செய்வதற்காக நாங்கள் சென்றபோது பத்திரிகை நண்பர்கள் என்னை சந்தித்தபோது என்ன சொன்னேன் என்று சொன்னால், வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி, ஆனால் வாக்களித்த மக்களுக்காக மட்டுமல்ல, வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆட்சி செய்யப்போகிறோம். வாக்களித்தவர்கள் நாம் நியாயமாக வாக்களித்திருக்கிறோம். நம்பிக்கையோடு நாம் ஓட்டுப் போட்டது இன்றைக்கு அந்த நம்பிக்கை வெற்றி பெற்றிருக்கிறது என்று எண்ணக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு பணி ஆற்றுவோம். எங்களுக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் இவர்களுக்கு ஓட்டுப் போடாமல் போய் விட்டோமே என்று வருந்தக்கூடிய அளவிற்கு அவர்களும் அதை உணரவேண்டும் என்பதற்காக நாங்கள் ஆட்சியை நடத்துவோம் என்று அப்போதே நான் உறுதியாக சொன்னேன்.
பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம்தான் இந்த முன்னேற்றம்.
ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கப் போகிறது. இது பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை அறவே ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொடுப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்க போகிறது. பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இது பயனுள்ளதாக இருக்க போகிறது.
இந்த இரண்டும்தான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கமாகும். தந்தை பெரியாரிடம், பேரறிஞர் அண்ணாவிடம், தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் கற்ற பாடங்களின் அடிப்படையில்தான் இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.
உங்களிடம் ஏற்கனவே அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் மூலமாக 4 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டு இருக்கக்கூடிய விண்ணப்பங்களை இன்றைக்கு நீங்கள் பூர்த்தி செய்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்தி, இன்றைக்கு முதன்முதலாக நான் தருமபுரி மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இந்த விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலமாக பதிவு செய்யப்படும்.
இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். இது ஏற்கனவே பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசினுடைய செய்தி குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், இது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நிகழ்ச்சியாக இருக்கின்ற காரணத்தால் இதை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். இந்த விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலமாக பதிவு செய்யப்படும்.
இந்த விண்ணப்பங்களை வாங்க சிறப்பு முகாம்கள் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். விண்ணப்பப் பதிவு காலை 9-30 மணி முதல் மதியம் 1-00 மணி வரையும், பிற்பகல் 2-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும். அந்த இரண்டு நாட்களில் நீங்கள் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். குடும்ப அட்டைதாரர்களாகிய உங்கள் ஒவ்வொருக்கும் வழங்கப்படக்கூடிய டோக்கன்களில் நீங்கள் முகாமுக்கு வரவேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதியில் சரியாக வந்து, எவ்வித கூட்ட நெரிசலுமின்றி, நீங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து செல்ல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அந்த குறிப்பிட்ட நாளில் உங்களால் ஒருவேளை முகாமுக்கு செல்லமுடியாத சூழ்நிலையிருந்தால் முகாமின் கடைசி இரண்டு நாட்களில் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் கொடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் அளித்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல் குடும்பத் தலைவிக்கு தெரிவிக்கப்படும். செல்போனில் செய்தி வந்துவிடும்.
அரசு விதிமுறைகளின்படி வகுக்கப்பட்ட தகுதிகளையுடைய எந்தவொரு குடும்பமும் இந்த உரிமைத் தொகை பெறுவதிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதில் நம்முடைய அரசு மிக மிக மிக கவனமாக இருக்கிறது. ஆகவே, எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். பொய்ப் பிராச்சாரங்கள், பித்தலாட்ட பிரச்சாரங்கள் செய்து கொண்டிருப்பார்கள் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். முகாமிற்கு வரும் தாய்மார்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், மின்வாரியகட்டண இரசீது ஆகியவற்றை அசலாக சரிபார்ப்பதற்காக கொண்டு வந்து, தகுதியுள்ள அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் திட்டத்தினை நல்லமுறையில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 35 ஆயிரத்து 925 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில், விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்காக 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகாம்களுக்கு வரும் உங்களை வழி நடத்துவதற்காக, ஒவ்வொரு முகாமிற்கும் ஒரு உதவி மையத் தன்னார்வலர் என்று 35 ஆயிரத்து 925 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுமுதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இந்த முகாம்கள் செயல்படும். இந்தத் திட்டம் இவ்வளவு சிறப்பாக செயல்படுவதற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கக்கூடிய, அதற்காக பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகங்கள், தன்னார்வலர்கள், உதவி மைய தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
எல்லார்க்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். அதனால்தான் அனைத்துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி – அனைத்து சமூக வளர்ச்சி என்பதை நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொடண்டிருக்கிறோம்.
அனைத்து சமூக வளர்ச்சியின் அடையாளம் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகும். இதன் மூலமாக தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும். உங்களுடைய குடும்பங்களில் வளம் பெருகும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் ஒற்றைக் கையெழுத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள புரட்சிதான் இந்த புரட்சி. இத்தகைய சாதனைச் சரித்திரம் தொடரும்..
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.