”அங்கேயே தங்கி கண்காணியுங்கள்”.. ஒடிசா சென்ற தமிழ்நாடு குழுவிற்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
119

”அங்கேயே தங்கி கண்காணியுங்கள்”…  

ஒடிசா சென்ற தமிழ்நாடு குழுவிற்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று (3.6.2023) மாலை ஒடிசா சென்ற தமிழ்நாட்டு குழுவினருடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஒடிசா இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்தும், மீட்புப் பணிகளின் நிலவரங்கள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.

ஒடிசா இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், மற்றும் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் ஒடிசா அனுப்பி வைக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் விபத்து நடந்த பாலசோர் என்ற இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை கண்காணித்து உதவி வருகின்றனர். மற்றொரு குழுவான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் ஆகியோர் ஒடிசாவில் இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் ரயில் விபத்தில் உயிரிந்த மற்றும் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், பாலசோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, விபத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களைப் பார்த்து வந்ததாகவும், ஆனால் அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் நேர்ந்த எவரும் இதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், ஒடிசா தலைநகர் கட்டாக்கில் உள்ள எஸ்.வி.பி. மருத்துவமனையில், விபத்தில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை அவர்கள் சேகரித்து வருவதாகவும், தற்போது வரை அந்த மருத்துவமனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி அவர்கள் தெரிவித்தார்.

பாலசோர் நகரத்தில் உள்ள 4 இடங்களில், விபத்தில் இறந்த 237 நபர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தற்போதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 70 சடலங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை என்று அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், குழுவினர் தெரிவித்தனர்.

தென்னக இரயில்வேயின் பயணிகளின் முன்பதிவுப் பட்டியல்படி, விபத்தில் சிக்கிய இரயில்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள், அவர்களது உறவினர்களிடம் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையில் ஒடிசா சென்றுள்ள குழுவினர், மேலும் சில தினங்கள் அங்கு தங்கியிருந்து, தமிழ்நாட்டைச் நேர்ந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைவதை உறுதி செய்திட வேண்டுமென்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், இதுவரை பெறப்பட்ட விவரங்கள் குறித்தும், அதன் செயல்பாடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அரசு உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஒடிசா இரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அரசு அலுவலர்கள் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர்.

இன்று மாலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு, மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கலந்துரையாடினர்.