டேக் இட் ஈஸி சினிமா விமர்சனம் : டேக் இட் ஈஸி குழந்தைகளின் உளவியல் வளர்ப்பை பெற்றோர்கள் உணரச் செய்து அறிவுரை சொல்லும் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை | ரேட்டிங்: 3/5

0
125

டேக் இட் ஈஸி சினிமா விமர்சனம் : டேக் இட் ஈஸி குழந்தைகளின் உளவியல் வளர்ப்பை பெற்றோர்கள் உணரச் செய்து அறிவுரை சொல்லும் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை | ரேட்டிங்: 3/5

தர்மேஷ் பண்டிட் தயாரித்து ஹன்சா பிக்சர்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் டேக் இட் ஈஸி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுனில் பிரேம் வியாஸ்.

விக்ரம் கோகலே, ராஜ் ஜுட்ஷி, சுப்ரியா கார்னிக், ஜாய் சென்குப்தா, தீபன்னிதா சர்மா, யாஷ் கனேகர், பிரசாத் ரெட்டி, சுல்பா ஆர்யா மற்றும் அனங் தேசாய் ஆகியோர் நடித்துள்ளனர். மக்கள் தொடர்பு – ஆர்.எஸ்.பிரகாஷ்.

சிறுவர்களின் மனநிலையையும், அவர்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பற்றியும் விரிவாக சொல்லும் (10-12) வயதுடைய அஜய் மற்றும் ரகு என்ற இரு நண்பர்களைப் பற்றியது படத்தின் கதை. முதல் காட்சியில்; ஜி டி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் பள்ளிச் சீருடையில் கடல் ஒரம் மயங்கி விழுந்து கிடக்கும் சிறுவன் அஜய் பற்றி கதைக்களம் செல்கிறது. அஜய்யின் அப்பாவுக்கு பணத்துக்கு பஞ்சமில்லை,  தன் மகன் வகுப்பில் மட்டுமல்ல, முழுப் பள்ளியிலும் முதலிடம் பெற வேண்டும் என்று விரும்புகிறார். பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு போட்டியிலும் அஜய்யை நம்பர் ஒன் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு எப்போதும் உண்டு. அதனால் தந்தை, தாய் இருவரும் அவனை நம்பர் ஒன் இடத்திற்கு வர அவனுக்கு அழுத்தம் கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொடுக்கிறார்கள்.  அஜய் விருப்பம் இல்லாமல் இருக்கிறான். அவன் விண்வெளி வீரராக வர வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க பெற்றோர்கள் நிர்பந்திப்பதையும், தங்கள் கனவை திணிப்பதையும் முழுமையாக எதிர்க்கிறார் அஜய்யின் தாத்தா. தன் பெற்றோரின் மனப்போக்கால் மிகவும் சோர்வும், மனஉளைச்சலாலும் அஜய் அவதிப்படுகிறான். மறுபுறம், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ரகுவின் தந்தை தேசிய அளவிலான தடகள வீரர், தேசிய அளவில் பதக்கம் வென்றவரால் சிறு விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தால் சர்வதேச போட்டிகளில் தனது நாட்டிற்காக பதக்கம் வெல்ல முடியாத சூழலில் மனவேதனையில் இருக்கிறார். அதற்காக ரகுவின் அப்பா, தன் மகன் படிப்பில் மட்டுமல்ல, பள்ளியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் முதலிடம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ரகுவிற்கு கடுமையான பயிற்சி, குறைந்த மதிப்பெண் எடுத்தால் அடி உதை என்று பயமுறுத்தி கடுமையாக நடந்து கொள்கிறார்.இதனால் அஜய்க்கும் ரகுவுக்கும் இடையே நடக்கும் அழுத்தம் மற்றும் நம்பர் ஒன் போட்டியின் காரணமாக, அவர்களின் நட்பு பொறாமையாக மாறுகிறது. இதனிடையே பள்ளியில் தடகள போட்டி நடக்கும் போது அஜய்யால் ரகுவிற்கு காயம் ஏற்படுகிறது. அந்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் அஜய் அதற்கு பின் தன் தவறை உணர்ந்து பெற்றோரிடம் சொல்கிறான். அஜய்யின் பெற்றோரும் ரகு வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்கின்றனர். அது முதல் அஜய் மற்றும் ரகு நல்ல நண்பர்களாக மாறுகின்றனர். இதனிடையே பள்ளியின் தளாளர் ரகுவின் குடும்பத்தினரை அழைத்து பள்ளிக் கட்டணம், குழந்தைகளின் நடவடிக்கையால் தங்கள் பள்ளிக்கு கெட்ட பெயர் வருகிறது என்று பொய் புகார் கூறி பள்ளியிலிருந்து நீக்க முற்படுகிறார். ரகு அனைத்து பள்ளிகளுக்கான தடகள போட்டியில் வென்றால் பள்ளியில் சேர்;த்து கொள்வதாக நிபந்தனை விடுக்கிறார். அஜய் மற்றும் ரகு இருவரில் தடகள போட்டியில் யார் வென்றார்கள்? இருவரின் நட்பு என்னானது? பள்ளியில் மீண்டும் ரகு சேர்த்துக்கொள்ளப்பட்டாரா? போட்டி இறுதியில் நடந்த திருப்பம் என்ன? என்பதே படத்தின் உச்சக்கட்ட க்ளைமேக்ஸ்.

‘அஜய்’வாக இளம் நடிகர்கள் யாஷ் கனேகரும், ‘ரகு’வாக பிரசாத் ரெட்டியும் இப்படத்தில் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உணர்ச்சிகள் கலந்த முகபாவங்கள், குழந்தைகளின் ஏக்கங்கள், குறும்புகள், தடகள ஒட்ட வீரர்களாக அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர்.ரகுவின் பாட்டி (சுல்பா ஆர்யா) மற்றும் அஜய்யின் தாத்தா (அனங் தேசாய்) இருவரின் பங்களிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது.

விக்ரம் கோகலே பள்ளி முதல்வர் வேடத்தில் தனது சக்திவாய்ந்த நடிப்பால் பார்வையாளர்களின் கைதட்டலை பெறுகிறார்,  தீப்னிதா ஷர்மா, ஜாய் சென் குப்தா மற்றும் ராஜ் ஜூட்ஷி  ஆகியோர் பெற்றோர்களாக நன்றாக தங்களது பாத்திரத்தை உணர்ந்து எளிமையாக நடித்துள்ளனர்.

சுப்ரியா கார்னிக் தலைகனம் பிடித்த, பிடிவாத குணமிக்க கண்டிப்பு நிறைந்த தளாளராக வில்லத்தனமாக கேரக்டரில் வந்து போகிறார்.

சுனில் பிரேம் வியாஸ் இயக்கியிருக்கும் இக்கதையில் பெற்றோர்கள் தங்களால் அடைய முடியாத அனைத்து கனவுகளை தங்கள் குழந்தைகள் நிறைவேற்ற விரும்புகிறார்கள். அதனால் பிள்ளைகள் ஒருவரையொருவர் ஒப்பிடும்போது அவர்கள் தொடர்ந்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்க அவர்களின் நட்பு எப்படி பொறாமையுடன் பின்னர் போட்டியாக மாறுகிறது மற்றும் அவர்களின் இனிமையான, அப்பாவித்தனமான மனிதநேயம் எவ்வாறு அவர்களின் நட்பை மீண்டும் பிணைக்கிறது என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி  மற்றும் முழு சமூக கல்விக்கும் ஒரு தார்மீக செய்தியை விட்டுச்செல்கிறது. 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பெற்றோரின் தொடர் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் தற்போதைய நிலை அதிகரித்திருப்பதையும், பெற்றோர்கள் அதிக அழுத்தத்துடன் வலியுறுத்தக் கூடாது எப்படி வழிநடத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி படம் கூறுகிறது. நம் குழந்தைகளை நல்ல மனிதர்களாக உருவாக்குவதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட இருண்ட பாதையை நோக்கி அவர்களை பயணிக்க வைக்கிறோம் என்பதை படத்தின் இறுதியில் விளக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல மருத்துவர், பொறியாளர், கட்டிடக்கலைஞர், அல்லது எந்த ஒரு நிபுணராக இருந்தாலும் அவர்களை முதலில் நல்ல மனிதர்களாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்றும் ‘தி ஃபர்ஸ்ட் ஸ்கூல்’  என்பது வீட்டிலிருந்து தான் தொடங்குகிறது என்ற கருத்து படம் முழுவதும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இன்றைய குழந்தைகள் சுமக்கும் சுமைகளைப் பற்றி பெரியவர்கள் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்து கூறுகிறது.  சீரியஸான கதையில் பள்ளிக் குழந்தைகளின் ராமாயண நாடக அரங்கேற்றத்தை காட்சிப்படுத்தி படத்தில் கொஞ்சம் சிரிக்கவும் வைத்து ரிலாக்ஸ் செய்ய வைத்துள்ளார் இயக்குனர் சுனில் பிரேம் வியாஸ்.

மொத்தத்தில் தர்மேஷ் பண்டிட் தயாரித்து ஹன்சா பிக்சர்ஸ் வெளியீட்டில் வந்திருக்கும் டேக் இட் ஈஸி குழந்தைகளின் உளவியல் வளர்ப்பை பெற்றோர்கள் உணரச் செய்து அறிவுரை சொல்லும் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை.