ரணம் அறம் தவறேல் விமர்சனம் : ரணம் அறம் தவறேல் மர்ம முடிச்சுகள் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அசத்தும் உளவியல் சார்ந்த க்ரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 3/5
மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்திருக்கும் ரணம் அறம் தவறேல் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ஷெரீஃப்.
இதில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி, ப்ரணிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்ரமணியம், பத்மன், விளங்கு கிச்சா ரவி, தசரதி, தயாளன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் :-இசை: அரோல் கொரெல்லி, ஒளிப்பதிவு: பாலாஜி கே ராஜா, நிர்வாக தயாரிப்பாளர்: உதயகுமார் பாலாஜி, எடிட்டர்: முனீஸ், கலை இயக்குனர்: மணிமொழியன் ராமதுரை, பாடகர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரேயா கோஷல், மதிச்சியம் பாலா, பிரணிதி, ரகோதம், ஷெரீஃப், பாடல் வரிகள்: விவேக் – ஷெரீஃப் – அரோல் கொரேல்லி, நடனம்: அமீர் ஆட்ஸ், ஸ்டண்ட்: பில்லா ஜெகன் ஓம் பிரகாஷ், ஒலி வடிவமைப்பு: ராண்டி ராஜ், பிஆர்ஓ: சதீஷ்குமார்
சென்னை மாதவரத்தில் பல்வேறு பகுதிகளில் எரிந்த கால்கள், கைகள் மற்றும் உடற்பகுதி அடங்கிய மூன்று பெட்டிகளை கண்டெடுக்கும் நிலையில் அதனுடன் வித்தியாசமான கருப்பு வெள்ளை கலந்த முகமுடி கவசத்துடன் ‘ரணம்’ படம் துவங்குகிறது. இந்த கொலைகளை செய்வர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தீவரமாக களமிறங்க இவர்களுக்கு உதவி செய்ய சிவா (வைபவ்), க்ரைம் சீன் கதை எழுத்தாளர் மற்றும் இறந்தவர்களின் சிதைந்த முகத்தின் அடையாளத்தை வைத்து தத்ரூபமாக வரைந்து கொடுக்கும் ஆற்றல் கொண்ட முக புனரமைப்பு வரை கலைஞர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுகிறார். அவரது முயற்சியில் கிடைத்த உடல் உறுப்புகள் வௌ;வேறு நபர்களுக்கு சொந்தமானது என்று தெரிய வருகிறது. இதற்கிடையில், வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் தலைமறைவாக, புதிய பொறுப்பை ஏற்கும் இன்ஸ்பெக்டர் இந்துஜா (தன்யா ஹோப்) மற்றும் சிவாவும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க ஒன்றாக வேலை செய்ய தொடங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் இருவரும் குற்றவாளிகளை நெருங்கும் போது, தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிகழ்ந்து அவர்களை திசை திருப்புகிறது.இறுதியில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்களா? இந்தக் கொலைகளுக்கெல்லாம் காரணம் யார்? எதற்காக இந்த கொடூர கொலைகளை செய்தனர்? என்பதே பல மர்மமுடிச்சுகளின் கேள்விகளுக்கு தகுந்த பதிலை சொல்லும் க்ளைமாக்ஸ்.
தனது 25வது படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து சிவாவாக நடித்துள்ளார் பைவவ். இதில் திறமைசாலியான வைபவ் தனக்கு ஏற்பட்ட துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சில நொடிகள் உறைந்து நின்று விடும் உடல் ரீதியான பாதிப்பை பொருட்படுத்தாது போலீசிற்கு உதவி செய்யும் நபராக, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அமைதியாக ஆனால் உறுதியாக நடந்தவைகளை கணிக்கும் திறனுடன் செயலாற்றும் விதத்தில் வரைகலைஞராக அளவான வசனங்களுடன் ஆர்ப்பாட்டமில்லாமல் கச்சிதமாக நடித்துள்ளார்.
இரண்டாம் பாதியில் கதையின் மையப்புள்ளியாக வந்து மகளை இழந்த தாய்மையின் வலியை அழகாக சித்திரத்து நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா, கண்ணியம், கடமை தவறாத மிரட்டல் போலீசாக வந்து க்ரைம் விசாரணையை துரிதமாக செயல்படுத்த துடிக்கும் அதிகாரியாக தான்யா ஹோப் யதார்த்தமாக செய்துள்ளார்.
கொஞ்சி பேசி விட்டு சில நொடிகளில் மறைந்து போகும் காதலியாக சரஸ் மேனன், உதவி காவல் அதிகாரியாக சுரேஷ் சக்ரவர்த்தி, முக்கிய திருப்பத்தை தரும் கதாபாத்திரத்தில் ப்ரணிதி, டார்லிங் மதன், ஜீவா சுப்ரமணியம், பத்மன், விளங்கு கிச்சா ரவி, தசரதி, தயாளன் ஆகியோர் படத்தின் தூண்களாக இருந்து படத்தின் விறுவிறுப்பை தக்க வைத்துள்ளனர்.
அரோல் கொரெல்லியின் இசை அரங்கத்தை அதிர செய்து க்ரைம் விசாரணைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொடுத்துள்ளார்.
மிரட்சியும், மிரட்டலும் கலந்த ஒவ்வொரு காட்சிகளையும் தத்ரூபமாக செயல்படுத்தி தன் காமிரா கோணங்களால் உயிர் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா.
எந்த ஒரு இடத்திலும் சுவாரஸ்யம் குறையாதபடி தன் எடிட்டிங்கில் திறமையுடன் கொடுத்துள்ளார் முனீஸ்.
கலை இயக்குனர் மணிமொழியன் ராமதுரையின் பங்களிப்பு படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ரணம் அறம் தவறேல் க்ரைம் இன்வஸ்டிகேஷன் சம்பந்தப்பட்ட படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஷெரீஃப். கடந்த காலத்தில் உண்மையில் ஏற்கனவே நடந்த, அறியப்பட்ட சம்பவத்தில் நடந்த குற்றம் அதை செய்த உளவியல் குறைபாடு கொண்ட நபர் செய்தது குற்றமல்ல என்று கொடுத்த நீதிமன்ற தீர்ப்பை மையமாக வைத்து புதிய கோணத்தில் புதிய விசாரணை களத்தில் பழிவாங்கும் திரைக்கதையை அமைத்து சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுவென காட்சிகளை நகர்த்தி நேர்த்தியாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஷெரீஃப். விசாரணைக் கதைக்குள் பல கிளைகளாக விரிவடைந்து செல்லும் கதை திசை திருப்ப கொடுக்கும் பல காட்சி விவரிப்புகள் விடை தெரியாமல் போனாலும், அது எந்த விதத்திலும் படத்திற்கு பாதிப்பு வராமல் கொடுத்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஷெரீஃப். எதிர்பாராத திருப்பங்கள் படத்திற்கு ப்ளஸ். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் உயிரோடு இருக்கும் போது மட்டுமல்ல அவர்கள் இறக்கும் போதும் கன்னியம் மாறாமல் குலையாமல் மண்ணுக்குள் செல்ல வேண்டும் என்ற உன்னத கருத்தை சமூக அக்கறை கலந்து விழிப்புணர்வை ஏற்படுத்திருக்கும் படம் ரணம் அறம் தவறேல்.
மொத்தத்தில் மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்திருக்கும் ரணம் அறம் தவறேல் மர்ம முடிச்சுகள் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அசத்தும் உளவியல் சார்ந்த க்ரைம் இன்வஸ்டிகேஷன் த்ரில்லர்.