O2 விமர்சனம்: O2 மகனை காப்பாற்ற போராடும் தாயின் பரிதவிப்பு | ரேட்டிங் – 3/5

0
80

O2 விமர்சனம்: O2 மகனை காப்பாற்ற போராடும் தாயின் பரிதவிப்பு | ரேட்டிங் – 3/5

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரித்திருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் O2 திரைப்படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ளார். O2 முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்துள்ளது.
சிறுவன் ரித்விக், பரத் நீலகண்டன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாபர் இடுக்கி, ஆடுகளம் முருகதாஸ், சிவா சாரா, அர்ஜுனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு- தமிழ் ஏ.அழகன், படத்தொகுப்பு- செல்வா ஆர்.கே, கலை-என்.சதீஷ்குமார், வசனம்-விக்னேஷ், புதியபார்தி, சந்திரகாந்த், சண்டை-ஏ.எஸ்.சுதீஷ்குமார், பாடல்கள்-ராகேஷ் கிரிபிரசாத், மோகன்ராஜ், கே.ஆர்.தரன்,மக்கள் தொடர்பு-AIM சதீஷ்.
கோவையில் இயற்கை ஆர்வலரான நயன்தாரா சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் மகன் ரித்விக்கை மேல் சிகிச்சைக்காக கொச்சின் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார். இவருடன் அந்த பேருந்தில் போதைப்பொருள் பையை பணமாக மாற்ற கடத்தி வரும் இன்ஸ்பெக்டர், பெற்றோருக்கு தெரியாமல் ஒடிப்போக திட்டமிடும் காதல் ஜோடி, இதை அறியாத காதலியின் தந்தை, விடுதலை பெற்ற கைதி, செல்வாக்கு இழந்த அரசியல்வாதி ஆகியோருடன் ஆம்னி பஸ் புறப்படுகிறது. வழியில் விபத்து காரணமாக பஸ்ஸில் இருக்கும் சக பயணிகளை பாலக்காட்டில் இறங்கி விட்டு மாற்று வழியில் எட்டு பேருடன் ஆம்னி பஸ் டிரைவர் கொச்சி செல்கிறார். அந்த மாற்று பாதையில் மழையால் மண் சரிவு ஏற்பட ஆம்னி பஸ் மண்ணில் புதைந்து விட, அதில் இருக்கும் எட்டு பேரும் மாட்டிக் கொள்கின்றனர். நேரம் செல்ல செல்ல ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும் நிலையில், ரித்விக் கொண்டு வரும் மாற்று ஆக்சிஜன் சிலிண்டருக்காக சண்டை நடக்கிறது. நயன்தாரா தன் மகனின் உயிரை காப்பாற்ற வைத்திருக்கும் மாற்று ஆக்சிஜன் சிலிண்டரை இவர்களிடமிருந்து மீட்டாரா? மகனின் உயிரை காப்பாற்றினாரா? அனைவரும் உயிர் தப்பித்தார்களா? இறுதியில் என்ன நடந்தது? அதற்குள் பேரிடர் மீட்பு குழு விரைந்து இவர்களை காப்பாற்றியதா? என்பதே க்ளைமேக்ஸ்.

நயன்தாரா பார்வதி என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக,தன் மகனை இறுதி வரை காப்பாற்ற போராட, இவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் சிறுவன் ரித்விக். இவர்களுடன் முரட்டுத்தனமான இன்ஸ்பெக்டராக பரத் நீலகண்டன், அரசியல்வாதியாக ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாபர் இடுக்கி, ஆடுகளம் முருகதாஸ், சிவா சாரா, அர்ஜுனன் ஆகியோர் படத்தின் முக்கிய புள்ளிகள்.இவர்களுடன் பேரிடர் மீட்பு குழுவின் தலைவியாக வருபவர் அசத்தலான அழுத்தமான இயலாமையையும், கவலையையும் தேர்ந்த நடிப்பால் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

விஷால்சந்திரசேகர் இசை மெச்சும்படி உள்ளது என்றால் பஸ்ஸில் முக்கால்வாசி படத்தை ஒளிப்பதிவு செய்து அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ. அழகன்.
செல்வாவின் படத்தொகுப்பு கச்சிதம். விக்னேஷ், புதியபார்தி, சந்திரகாந்த் ஆகியோரின் வசனம் படத்திற்கு பலம்.

இப்படத்தில் முக்கிய தூணாக விளங்கியிருக்கிறார் கலை இயக்குனர் என்.சதீஷ்குமார்.

ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கதாபாத்திரங்களை கையாண்டு, உயிர்வாழ மனிதன் எந்த நிலைப்பாட்டையும் கையிலெடுத்து சுயநல மனிதனாக நொடிப்பொழுதில் மாறுவான் என்பதை திறம்பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ். படம் ஆரம்பம் முதல் பதற்றம், விறுவிறுப்பு அடுத்தது என்ன நடக்கும் என்ற கதைக்களம் சென்றாலும் இறுதியில் திடீரென்று முடிந்து விடுவது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது. இறுதிக் காட்சியில் இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில்  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தயாரித்திருக்கும் O2 மகனை காப்பாற்ற போராடும் தாயின் பரிதவிப்பு.