ஹாட் ஸ்பாட் சினிமா விமர்சனம் : ஹாட் ஸ்பாட் அதிரடி வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நான்கு கதைகளின் ஜாக்பாட் வெற்றி சங்கமம் | ரேட்டிங்: 3.5/5
கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கேஜே.பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “ஹாட்ஸ்பாட்”.
சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் வெளியிட ஹாட் ஸ்பாட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.
இதில் கலையராசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி, சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி , ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி, கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – கோகுல் பினோய், இசை – சதீஷ் ரகுநாதன், வான், படத்தொகுப்பு – முத்தையன் ஏ, கலை – சிவா சங்கரன், நிர்வாக தயாரிப்பாளர் – ஆர். பாலாகுமார், தயாரிப்பு மேற்பார்வை – பிரியான், சேர்க்கை உரை, திரைக்கதை – கிஷோர் சங்கர், பப்லிசிட்டி டிசைனர் – ராஜின் கிருஷ்ணன், டைட்டில் டிசைன் – ட்வென்டி ஒன் ஜி, இயக்குநர் குழு – எம் பி எழுமலை, சபரி மணிகண்டன், மாதவன் ஜெயராஜ், எம்.பிரபாகரன் ஜாய், வெற்றி ஏஜேகே, பி.ஆர்.ஓ – வேலு
கேஜே.பாலமணிமார்பன் பிரபல தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார் அறிமுக இயக்குனர் விக்கேஷ் கார்த்திக். முதலில் வேண்டா வெறுப்பாக கதை கேட்கும் தயாரிப்பாளர் பின்னர் இயக்குனரின் சுவாரஸ்யமான கதையால் ஈர்க்கப்படுகிறார். ஒரு கதை நான்கு கதைகளின் தொகுப்பாக ஹாப்பி மேரிட் லைஃப், கோல்டன் ரூல்ஸ், தக்காளி சட்னி, ஃபேம் கேம் என்ற தலைப்பில் இயக்குனர் விவரிக்கிறார்.
ஹாப்பி மேரிட் லைஃப்
தன்யா (கௌரி ஜி கிஷன்) மற்றும் விஜய் (ஆதித்யா பாஸ்கர்) இருவரும் காதலர்கள். தங்கள் காதலை பெற்றோர்களுக்கு தெரிவிக்கின்றனர். இதில் பெண் பார்க்கும் படலம் தொடங்கி திருமணம் செய்து கொண்டு பெண் புகுந்த வீட்டிற்கு சென்று வாழும் வரை எப்படிப்பட்ட மனநிலை, சூழ்நிலை இருக்கிறது அதை ஆண்கள் அனுபவித்தால் என்ன நடக்கும் என்பதை விஜய் எண்ணுவது போலவும், அதன் பின் விஜய்; எடுக்கும் முடிவு என்ன? பெற்றோர்கள் இந்த வித்தியாசமான முடிவுக்கு சம்மதித்தார்களா? என்பதைச் சொல்வதே ஹாப்பி மேரிட் லைஃப்.
கோல்டன் ரூல்ஸ்
தீப்தி (அம்மு அபிராமி) மற்றும்; சித்தார்த் (சாண்டி) இருவரின் காதலைச் சுற்றி கதை நகர்கிறது. சித்தார்த் தீப்தியை தன் பெற்றோரை பார்த்து அறிமுகம் செய்து வைக்க அழைத்துச் செல்கிறார். சித்தார்த்தின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து தீப்தியின் பெற்றோரைப் பற்றி விசாரிக்கின்றனர். தீப்தி தன் பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று தெரிவித்து பெயரை சொன்னவுடன், சித்தார்த்தின் பெற்றோர் அதிர்ச்சியாகின்றனர். தீப்தியின் அம்மா தனக்கு தங்கை என்றும் சித்தார்த்தின் பெற்றோர் பெரியம்மா, பெரியப்பா முறை வருகிறது என்றும் அதிர்ச்சி கலந்து தெரிவிக்கின்றனார். அண்ணன், தங்கை உறவு முறை வரும் காதலர்கள் இதைக் கேட்டு என்ன முடிவு செய்தார்கள்? இருவரும் பிரிந்தார்களா? அல்லது காதலர்கள் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பதை பார்ப்பவர்களின் யூகத்திற்கே கேள்விக்குறியோடு விட்டுச் செல்வதே கோல்டன் ரூல்ஸ்.
தக்காளி சட்னி
காதலர்கள் பத்திரிகையாளர் அனிதா (ஜனனி) மற்றும் ஐ டி துறையில் வேலை செய்யும் வெற்றி (சுபாஷ்). பெண் மோகம் கொண்ட வெற்றியின் எண்ணத்தால் வேலை பறிபோகிறது. வீட்டில் தங்கையின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட எதிர்பாராத நபரின் சந்திப்பு ஆண் பாலியல் தொழிலாளியாக மாறி பணம் சம்பாதிக்க தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக தன் தாயை சந்திக்கும் சூழ்நிலையும், அதே நேரத்தில் ஆண் பாலியல் தொழிலாளி சம்பந்தமாக கட்டுரை எழுதும் நோக்கத்துடன் வரும் அனிதாவை சந்திக்கும் சூழ்நிலையும் அமைந்து விட சமாளிக்க முடியாமல் தடுமாறி போகிறார் வெற்றி. இறுதியில் காதலி அனிதா கொடுக்கும் அதிர்ச்சிகரமான ஷாக் என்ன? காதலுக்கும் காமத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை அனிதா புர்pய வைத்தாரா? என்பதே தக்காளி சட்னி.
ஃபேம் கேம்
ஏழுமலை (கலையரசன்), லட்சுமி (சோபியா) தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க செய்கின்றனர். குழந்தைகளின் திறமையால் படிப்படியாக முன்னேறி இறுதிப் போட்டிக்கு தகுதியாகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சி இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. மனைவி லட்சுமியின் அதீத ஆசை,ஈடுபாடு இரு குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கிறது. முதல் பெண் குழந்தை எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலையால் இறந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் ஏழுமலை தன் மனைவியின் போக்கையும், குழந்தைகளின் மனஉளைச்சலையும், வயதுக்கு மீறிய நடவடிக்கை குழந்தைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை எப்படி உணர்த்துகிறார்? என்பதே ஃபேம் கேம்.
கௌரி ஜி. கிஷன் – தன்யா, ஆதித்யா பாஸ்கர் – விஜய் ஆரம்ப கதையே படத்தை பார்க்க நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. இதில் இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பலம்.
சாண்டி – சித்தார்த், அம்மு அபிராமி – தீப்தி இந்த ஜோடிகள் சந்திக்கும் அதிர்ச்சிகரமான தருணங்கள் காதல்பெற்றோர்களை சிந்திக்க வைக்கிறது.
ஜனனி – அனிதா , சுபாஷ் – வெற்றி இருவரின் காதல் வித்தியாசமான கோணத்தில் பயணித்திருக்கிறது.
கலையரசன் – ஏழுமலை, சோஃபியா – லக்ஷ்மி என்று தங்களுக்கு கொடுக்கபட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துள்ளனர். இவர்களின் கதை குழந்தைகளின் மனதில் ஏற்படும் பாதிப்பை பிரதிபலித்தாலும் இன்னும் அழுத்தமாக திரைக்கதை அமைத்திருக்கலாம். சொல்ல வந்த கருத்து சிறப்பு.
அமைதியும் அதிர்ந்து பேசாத குணம் கொண்ட ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. நான்கு கதைகளின் தொகுப்பாக வௌ;வேறு கோணங்களில் காட்சிப்படுத்திய விதம் தேர்ந்த அவரின் அபரிதமான திறமையை வெளிக்கொணர்ந்து அசத்தியுள்ளார்.
சதீஷ் ரகுநாதன், வான் இருவரின் இசையில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆரவாரமாக தொடங்கி கதையில் ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது.
பல சர்ச்சைகள் கிளப்பிய டிரெயிலர் வெளியீட்டின் கேள்விகளுக்கு தன் படத்தொகுப்பால் பாசிடிவ் பதிலை சொல்லியிருக்கிறார் முத்தையன். முதலில் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்ட என்ன செய்யமுடியுமோ அதை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் படத்தொகுப்பாளர் என்பது தெளிவாக புரிகிறது.
திருமணம் என்பது பெண்களுக்கு போடும் கட்டுபாபாடுகள் ஆண்களுக்குச் சாதகமாக பயன்படுத்தும் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி அதை நகைச்சுவையுடன் எதிர்மறையாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கும் கேள்வியை நியாயமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.ஒடிப்போய் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் உறவு முறைகள் பிற்காலத்தில் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக புரிய வைத்து சிந்திக்க வைத்துள்ளார். சர்ச்சையான இந்த கதைக்கு தீர்ப்பை கொடுத்தால் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று சாதுர்யமாக கதையை முடித்துள்ளார்.ஆண் பாலியல் தொழிலாளியின் எண்ணத்தை தகர்தெறியும் சவுக்கடியாக பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். பெண்கள் தடம் மாறினால் குற்றமாக பார்க்கும் சமூகம் ஆண் தவறு செய்தால் ஏன் அதை கண்டு கொள்வதில்லை என்பதை நியாயமான கேள்வியாக முன் வைத்துள்ளார். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள் வெகுளித்தனம் தான் அவர்களின் குணம், அதை மாற்றாமல் வயதுக்கு மீறிய செயல்களை செய்ய விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பதையும் ஆழமான கருத்துக்களுடன், காதல், பெண்கள் சமத்துவம், விடுதலை, ஆணாதிக்கம், ரியாலிடி ஷோக்களின் அத்துமீறல்கள், ஆபாச விஷயங்களை குழந்தைகளை விட்டு சொல்ல வேண்டாம் என்று விளாவாரியாக அலசி ஆராய்ந்து சிறப்பான நோக்கத்துடன் திருப்புமுனையுடன் யாரும் அணுகாத கோணங்களில் நிறைவாக கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இறுதியில் காதலியின் தந்தையான தயாரிப்பாளரை கிடுக்குப்பிடி போட்டு திருமணத்திற்கும், படம் தயாரிக்கவும் ஒட்டு மொத்தமாக சம்மதம் வாங்கும் இயக்குனரின் சாதுர்யத்துடன் முடித்திருப்பதில் கைதட்டல் வாங்கி விடுகிறார். வெல்டன்.
மொத்த்தில் கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் கேஜே.பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள “ஹாட்ஸ்பாட்” அதிரடி வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த நான்கு கதைகளின் ஜாக்பாட் வெற்றி சங்கமம்.