2 கே லவ் ஸ்டோரி சினிமா விமர்சனம் : ‘2 கே லவ் ஸ்டோரி’ நட்பையும் காதலையும் வேறுபடுத்தி இதயம் கவர்ந்த சுவாரஸ்ய அனுபவம் இளசுகளை கவர்ந்து இழுத்து ரசிக்க வைக்கும் | ரேட்டிங்: 3.5/5

0
683

2 கே லவ் ஸ்டோரி சினிமா விமர்சனம் : ‘2 கே லவ் ஸ்டோரி’ நட்பையும் காதலையும் வேறுபடுத்தி இதயம் கவர்ந்த சுவாரஸ்ய அனுபவம் இளசுகளை கவர்ந்து இழுத்து ரசிக்க வைக்கும் | ரேட்டிங்: 3.5/5

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கும் ‘2 கே லவ் ஸ்டோரி” படத்தை க்ரியேடிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூடர்ஸ் சார்பில் ஜி தனஞ்சேயன் வெளியிட சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

இதில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்த்ராஜ் , லத்திகா பாலமுருகன், பாலா சரவணன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ் ஜி.பி முத்து, வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்:-இசை: டி. இமான் , ஒளிப்பதிவாளர்: வி எஸ். ஆனந்த கிருஷ்ணா, எடிட்டர்: தியாகு டி, நடன இயக்குனர்கள்: ஷோபி பால்ராஜ் , ஆடை வடிவமைப்பாளர்: மீரா எம், காஸ்ட்யூமர்: ரஞ்சித் ஆர்.ஜே.கே, தயாரிப்பு நிர்வாகி: டி முருகேசன் , ஒப்பனை: தசரதன், கிரியேட்டிவ் விளம்பரம்- டிஜ​pட்டலி, ஸ்டில்கள்: சூர்யா, பிஆர்ஒ:சதீஷ் (ஏய்ம்)

கோயம்பத்தூரில் சிறு வயதிலிருந்தே ஒரே பள்ளியில் படிக்கும் போது ஏற்படும் நட்பு பின்னர் கல்லூரி வரை தொடரும் இணை பிரியா நண்பர்கள் கார்த்திக் (ஜெகவீர்) மற்றும் மோனிஷா (மீனாட்சி கோவிந்தராஜன்). அதன் பிறகு இருவரும் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து ப்ரீ வெட்டிங் ஷ{ட் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். கார்த்திக்கும் மோனியும் அன்னோன்யமாக பழகுவதை அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன் இருக்கும் நண்பர்கள் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு காதலாக மாறும் என்று நினைக்கிறார்கள்.  இதனிடையே இவர்கள் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்ட ஜுனியர் மாணவி பவித்ராவை சிக்கலிருந்து கார்த்திக் காப்பாற்றுகிறார். அதன் பின் பவித்ரா கார்த்திக்கை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்து, பின்னர் கார்த்திக்கை சந்தித்து தன்னுடைய காதலை சொல்கிறார். கார்த்திக் மோனியிடம் நடந்ததை சொல்லி சம்மதம் வாங்கி பவித்ராவை காதலிக்க தொடங்குகிறார். இவர்களின் காதலுக்கு நடுவே மோனி தடையாக இருப்பதாக பவித்ரா நினைக்க, ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சந்தேகத்தையும் மோனி தீர்த்து வைக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கும் காதல் ஜோடி ஒரு நாள் சுற்றுலா செல்லும் போது வழியில் விபத்து ஏற்பட்டு பவித்ரா இறந்து விட, மனஉளைச்சலில் சிக்கும் கார்த்திக்கிற்கு ஆறுதலாக இருக்கிறார் மோனி. இவர்களின் பெற்றோர்; அண்ணன் தங்கை இருக்கும் ஒரே குடும்பத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். இவர்களின் தேடல் முடிவுக்கு வந்ததா? இருவருக்கும் ஒரே வீட்டில் திருமணம் நிச்சயமானதா? அதற்குள் குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள் என்ன? திருமண ஏற்பாட்டில் நடக்கும் குளறுபடிகள் என்ன? இருவரும் நண்பர்களாவே இருக்க முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஜெகவீர் தோழிக்கு மதிப்பளித்து நடந்து கொள்ளும் கார்த்திக் கதாபாத்திரத்தை சிரத்தையுடன் நட்பின் உன்னதத்தையும், ஒவ்வொரு விருப்பு வெறுப்புகளையும் நன்றாக புரிந்து வைத்து  கொண்டு நடக்கும் விதத்தில் முடிந்த வரை சிறப்பாக செய்துள்ளார்.

மோனியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் நண்பனுக்காக எதையும் செய்வதும், அவனின் காதலுக்கு மதிப்பளிப்பதும், பின்னர் அரவணைத்து தேற்றும் போதும், நண்பனுக்காக பெண் தேடி கண்டுபிடித்து சந்தோஷப்படும் இடத்திலும் படத்தின் அழுத்தமாக காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார். இறுதிக் காட்சியில் தன் நிலைபாட்டில் சில தடுமாற்றங்களை காட்டினாலும் நட்பை இயல்பாகவும் அன்பாகவும் உணர வைத்து விடுகிறார்.

பாலா சரவணன் தன்னுடைய இயல்பான நகைச்சுவை தன்மையால் சில இடங்களில் பார்வையாளர்களை மகிழ்விக்கிறார்.

கொஞ்சி பேசும் காதலியாக வரும் பவித்ரா சில காட்சிகள் என்றாலும் கவனிக்க வைத்து ரசிக்க வைக்கிறார். மற்றும் லத்திகா பாலமுருகன், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், ஆண்டனி பாக்யராஜ், ஜி.பி முத்து, வினோதினி ஆகியோரின் நடிப்பு கச்சிதம்.

உணர்ச்சிகளின் தருணங்களை மேம்படுத்தும் இமானின் ஆத்மார்த்தமான பாடல்கள் தாளம் போட வைத்து பின்னணி இசை கதையின் அனுபவத்தை உயர்த்தவும் வழி செய்கிறது.

வி எஸ். ஆனந்த கிருஷ்ணாவின் காட்சிக் கோணங்களில் படத்தை வர்ணஜாலமாக வழங்கி இளமை துள்ளலுடன் ரசிக்க வைத்து மெய் மறக்க செய்கிறார்.

எடிட்டர் தியாகு படத்தின் ஒட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தாலும் சில காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நடன இயக்குனர்கள்: ஷோபி பால்ராஜ் , ஆடை வடிவமைப்பாளர்: மீரா எம், காஸ்ட்யூமர்: ரஞ்சித் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

படத்தின் முதல் பாதி இளமை ஆற்றல், நவநாகரீக உரையாடல்கள், வேடிக்கையான சூழ்நிலை நகைச்சுவை என்று செல்ல இரண்டாம் பாதி ஒரு உணர்ச்சிபூர்வமான குடும்ப நாடகமாக மாறுகிறது, கதாபாத்திரங்களின் பயணத்திற்கு ஆழத்தையும்  நம்பகத்தன்மையையும் சேர்க்கிறது. ஏற்கனவே பார்த்த பல படங்களின் கலவையாக வந்திருந்தாலும் இது நட்பின் பிணைப்பை ஆழமாக அழகாக சித்தரித்து பொழுதுபோக்கு படமாக இளசுகளின் உணர்ச்சிகளின் நாடி துடிப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

மொத்தத்தில் சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்து க்ரியேடிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூடர்ஸ் சார்பில் ஜி தனஞ்சேயன் வெளியிட்டிருக்கும் ‘2 கே லவ் ஸ்டோரி’ நட்பையும் காதலையும் வேறுபடுத்தி இதயம் கவர்ந்த சுவாரஸ்ய அனுபவம் இளசுகளை கவர்ந்து இழுத்து ரசிக்க வைக்கும்.