விஷமக்காரன் விமர்சனம்: விஷமக்காரன் சதுரங்க ஆட்டும் ஆடும் வில்லங்கமானவன் | ரேட்டிங் – 3/5

0
211

விஷமக்காரன் விமர்சனம்: விஷமக்காரன் சதுரங்க ஆட்டும் ஆடும் வில்லங்கமானவன் | ரேட்டிங் – 3/5

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் படத்தை தயாரித்து எழுதி இயக்கியிருக்கிறார் வி (விஜய் குப்புசாமி).இவருடன் அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : ஜெ. கல்யாண்,இசை : கவின்-ஆதித்யா, படத்தொகுப்பு : எஸ்.மணிக்குமரன், மக்கள் தொடர்பு : கே.எஸ்.கே. செல்வா.

மனதை வசியப்படுத்தும் உத்திகளை கையாளும் பயிற்சியாளர் அக்னி (வி).அவரிடம் தன் தோழியின் மணவாழ்க்கை சிக்கலில்; இருப்பதாகும் அதற்கு ஆலோசனை வழங்குமாறு ஐகிரி (அனிகா விக்ரமன்) அணுகிறார். அக்னியும் தம்பதிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி சேர்த்து வைக்கிறார். இதனால் அக்னியும் ஐகிரியும் அடிக்கடி சந்திக்க நேரிட காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு முன் அக்னி தனக்கு தரங்கிணி(சைத்ரா ரெட்டி) என்ற காதலி இருந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறுகிறார். அதைப்பற்றி ஐகிரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அக்னியுடன் இனிதே வாழ்கிறார். இதற்கிடையே ஒருநாள் ஒட்டலில்  முன்னாள் காதலி தரங்கிணியை பார்க்கிறார் அக்னி, அதன் பின் குழப்பத்தில் இருக்கும் காதலி தரங்கிணிக்கு உதவி செய்கிறார். இதனால் ஐகிரிக்கு அக்னி மேல் சந்தேகம் எழ, இவர்களை கண்காணிக்க அலுவலகத்தில், வீட்டில், காரில் மறைமுக கேமிராவை வைக்கிறார். இருவரின் நட்பு எந்த சந்தேகத்தையும் ஐகிரிக்கு ஏற்படுத்தவில்லை. இதனிடையே சிறு மனஸ்தாபத்தால் ஐகிரி பிரிந்து போக, அதுவே அக்னிக்கும், தரங்கிணிக்கும் உறவு ஏற்பட காரணமாகிறது. இறுதியில் சந்தேகம் நிஜமானதை ஐகிரி எவ்வாறு தாங்கிக்கொண்டார்? ஐகிரியின் மறைமுக கேமிராவைப் பற்றி தெரிந்து கொள்ளும் அக்னி என்ன செய்தார்? மனமுடையும் அக்னி இருவரில் யாரை தன் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்தார்? கையாளும் உத்திகளை செய்யும் அக்னியின் மறுமுகம் என்ன? என்பதே மீதிக்கதை

அக்னியாக வி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அறிமுகப் படத்திலேயே வாய் ஜாலத்தை கையாண்டு தமிழ், ஆங்கிலம் என்று கலந்து பேசி சந்தர்ப்பத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளும் யுக்தியை கையாண்டு முத்திரை பதித்துள்ளார். இவருக்கு உறுதுணையாக அனிகா விக்ரமன் சந்தேகபுத்தி கொண்ட மனைவி ஐகிரியாகவும், சைத்ரா ரெட்டி அழகு,அறிவு இருந்தும் தூண்டில் சிக்கிய மீனாக மாட்டிக் கொள்ளும் காதலி தரங்கிணியாகவும் படம் முழுவதும் வந்து தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர். இந்த மூன்று பேரை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களும் தேவைப்படாமல் போகிறது.
வெளிப்புறப் படப்பிடிப்பு குறைவு என்பதால், அலுவலகம், வீடு, கடற்கரை, சாலை என்று சிறிய வட்டத்திலேயே காட்சிக்கோணங்களை தகுந்தவாறு வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜெ.கல்யாண்.

கவின்-ஆதித்யா இருவரும் படத்திற்கு ஏற்ற வகையில் தங்கள் பங்களிப்பை கொடுத்திருப்பது சிறப்பு.

எஸ்.மணிக்குமரன் படத்தின் சில காட்சிகளை எடிட் செய்திருந்தால் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கும்.

one who controls the mind control everyone – ஒருவர் மனதை யார் கட்டுப்படுத்துகிறாரோ அவரே அவர்களை வசப்படுத்தி தங்களுக்கு சாதகமாக ஆட்டிப்படைக்கும் திறன் கொண்டவர். இந்த ஒரு வரியில் தான் மொத்த கதையை கையாண்டுள்ளார் இயக்குனர் வி. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து பயிற்சியாளரின் வாழ்க்கையே உதாரணமாக காட்டி வசப்படுத்தும் யுக்தியை கையாண்டு இறுதிக்காட்சியில் சஸ்பென்சோடு முடித்துள்ளார் அறிமுக இயக்குனர் வி. இந்த டைட்டிலுக்கு கேற்ற கதை என்பதால் க்ளைமேக்ஸ் காட்சிக்காக படம் முழுவதும் பார்த்தால் தான் படத்தின் ஒரு வரி புரியும், தெளிவாக சொல்லும் போது படத்தின் நோக்கம் தெரியும்.

மொத்தத்தில் ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஷமக்காரன் சதுரங்க ஆட்டும் ஆடும் வில்லங்கமானவன்.