யானை முகத்தான் திரைவிமர்சனம் : யானை முகத்தான் மனதில் நல்லெண்ணத்தை விதைப்பவன் | ரேட்டிங்: 2/5

0
209

யானை முகத்தான் திரைவிமர்சனம் : யானை முகத்தான் மனதில் நல்லெண்ணத்தை விதைப்பவன் | ரேட்டிங்: 2/5

தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் எம் ஜே பாரதி தயாரித்து யானை முகத்தான் படத்தை ரெஜிஷ் மிதிலா எழுதி இயக்கியிருக்கிறார்.

இதில் யோகிபாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஹரீஷ் பெராடி, கிரேன் மனோகர், உதய் சந்திரா, நாக விஷால், ஜார்ஜ் மரியன், குளப்புள்ளி லீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர், இசை : பரத் சங்கர்,படத்தொகுப்பு : சைலோ சத்யன், தயாரிப்பு மேற்பார்வை : சுனில் ஜோஸ்,மக்கள் தொடர்பு : ஜான்சன்.

ஆட்டோ ஓட்டுனர் கணேசன் (ரமேஷ் திலக்) தீவர விநாயக பக்தர். சவாரி செல்லும் போது அதிக பணம் கேட்பது, கடன் வாங்குவது, கடன் கேட்க வருபவர்களிடம் பொய் சொல்வது, கடன் கொடுத்தவர்களுக்கு பிரச்னை ஏற்பட வேண்டும் என்று நினைப்பது, வீட்டு வாடகை பாக்கி வைப்பது போன்ற குணாதிசயங்கள் நிறைந்தவராக தினமும் விநாயகரை வேண்டிக் கேட்டுக் கொள்வார். வீட்டின் உரிமையாளர் ஊர்வசி, வாடகை கொடுக்காத ரமேஷ் திலக்கை திட்டினாலும், ஆட்டோ வாங்கி கொடுத்து, அவ்வப்போது உதவிகள் செய்து சொந்த மகன் போல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் ரமேஷ்; திலக் அவரையும் ஏமாற்றியே காலத்தை ஒட்டுகிறார். ஒரு நாள் திடீரென்று வீட்டில் வணங்கும் விநாயகர் படம் கண்ணுக்கு தெரியாமல் போகிறது. இதற்கு காரணம் என்ன என்று யோசிக்கும் போது, அவர் முன் யோகி பாபு தோன்றி மனித உருவில் கடவுளாக வந்திருப்பதாக கூறுகிறார். இதனை நம்ப மறுக்கும் ரமேஷ் திலக்கை ஒரு நாள் மட்டும் நல்லவனாக வாழ்ந்தால் தன்னுடைய கடவுள் ரூபத்தை காட்டுவதாக யோகிபாபு கூறுகிறார். அதன்படி ரமேஷ் திலக் நல்லவராக நடந்து கொண்டாரா? அதனால் என்ன பயன் பெற்றார்? தனது தவறை உணர்ந்து நல்ல மனிதராக மாறினாரா? கடவுள் தன் வாக்கை காப்பாற்றி என்ன உணர்;த்தினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நகைச்சுவை, குணச்சித்திரம், நண்பன் என்று பல தோற்றங்களில் பார்த்திருக்கும் ரமேஷ் திலக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட கதையின் நாயகனான கதாபாத்திரம். கடவுள் பக்தன் கணேசனாக ரமேஷ் திலக்; ஏமாற்று பேர்வழியாகவும், அதே சமயம் மனம் திருந்துபவராகவும் உண்மையான கடவுள் நம்முள் தான் இருக்கிறது என்பதை உணரும் தருணம், கண் கலங்கி நிற்கும் இடத்தில் இயல்பு மாறாத நடிப்பு கச்சிதமாக உள்ளது.

விநாயகராக வரும் யோகிபாபு தன் பக்தனின் கதையை ஒரு சிறுவனிடம் சொல்வது போன்று ஆரம்பிக்கும் கதையில், பாதி வசனங்களிலும், இன்றைய காலகட்டத்திற்கேற்ற மனித உருவில் கடவுளாக கொஞ்சம் காட்சிகளில் கண் முன்னே வந்து ரமேஷ் திலக்கிற்கு பாடம் புகட்டி மனித நேயத்தை புரிய வைக்கும் இடத்திலும், இறுதிக் காட்சியிலும் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார்.

வீட்டு உரிமையாளர் மல்லிகா அக்காவாக ஊர்வசி தன்னுடைய கோபம், ஆதாங்கம்,வேதனையை வெளிப்படுத்தி துன்பத்தில் உற்ற துணையாக இருந்து உதவி செய்யும் அம்மாவாக நடந்து கொள்ளும் விதத்தில் தனிச் சிறப்பு பெறுகிறார். நண்பனாக கருணாகரன் வந்து போகிறார்.

ஹரீஷ் பெராடி, கிரேன் மனோகர், உதய் சந்திரா, நாக விஷால், ஜார்ஜ் மரியன், குளப்புள்ளி லீலா ஆகியோர் சில இடங்களில் தடம் பதித்து விட்டு போகின்றனர்.

சென்னை முதல் ராஜஸ்தான் வரை செல்லும் பயணத்தில் கார்த்திக் எஸ் நாயரின் ஒளிப்பதிவும், பரத் சங்கர் இசையும் பின்னணி இசையும் படத்திற்கேற்ற வகையில் உழைப்பை கொடுத்துள்ளனர்.

முதல் பாதி கதைக்குள் வருவதற்கே பல நேரம் ஆகிவிடுவதால் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுவதை தவிர்க்கமுடியவில்லை அதை இரண்டாம் பாதியில் தான் சரி செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சத்யன்.

பிறரை ஏமாற்றி மனதை புண் படுத்தி வாழ்வதை விட, பிறரிடம் அன்பு செலுத்தி மனித நேயத்தை மேம்படுத்தி வாழ்வதே சாலச் சிறந்தது, கடவுளை எங்கேயும் தேட வேண்டாம் நம் மனதில் தான் வாழ்கிறார் என்பதை மனித உருவில் வரும் கடவுள் உணர்த்துவதாக கற்பனை கலந்த கதையில் சொல்ல நினைத்திருக்கும் இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இன்னும் அழுத்தமான திரைக்கதையால் வசீகரித்திருக்கலாம். திருடன் அடையாளமாக வைத்த கல்லே கோயிலாக மாறும் போது, மனிதன் மனமும் மெல்ல மெல்ல மாறும் என்பதை காட்சிகளாக உணர்த்தியுள்ளார்.

மொத்தத்தில் தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் எம் ஜே பாரதி தயாரித்திருக்கும் யானை முகத்தான் மனதில் நல்லெண்ணத்தை விதைப்பவன்.