யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர் அடையாளத்தை தேடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இலங்கை அகதியின் போராட்டக்களம் | ரேட்டிங்: 3.5/5

0
486

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைவிமர்சனம்: யாதும் ஊரே யாவரும் கேளிர் அடையாளத்தை தேடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இலங்கை அகதியின் போராட்டக்களம் | ரேட்டிங்: 3.5/5

சந்தாரா ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.இசக்கி துரை தயாரித்திருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட கிருஷ்ண ரோகந்த்.

நடிகர்கள்: விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், ரகு ஆதித்யா, மதுரா, கனிஹா, ரித்விகா, மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப், ஸ்ரீரஞ்சனி, இமான் அண்ணாச்சி, ராஜேஷ், பாவா செல்லதுரை, அஜய் ரத்னம், சம்பத்ராம்

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை: நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு-வெற்றிவேல் மகேந்திரன், எடிட்டிங்-ஜான் ஆப்ரகாம், கலை-வீரசாமர், மக்கள் தொடர்பு : நிகில்

இலங்கையை சேர்ந்த அனாதையான புனிதன் (விஜய்சேதுபதி) பாதிரியார் ராஜேஷ் உதவியுடன் லண்டன் இசை பள்ளியில் சேர்ந்து இசையை கற்றுக் கொள்ள அனுப்பப்படுகிறான்.ஆனால், புறப்படும் வழியிலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டு பல வருடங்கள் கழித்து வெளியே வருகிறார். அங்கிருந்து கள்ளத் தோணி வழியாக கேரளாவுக்கு செல்ல மீனவர்களால் மீட்கப்படுகிறார். அவர்கள் புனிதனின் இசை ஆர்வத்தை பார்த்து கேரளாவில் உள்ள ஒரு இசைக்கடை உரிமையாளரிடம் வேலைக்கு சேர்த்துவிடுகின்றனர். புனிதனின் இசை அறிவால் கவரப்பட்ட கடைக்காரர் இங்கிலாந்தில் நடக்கும் சர்வதேச இசைப் போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்கிறார்.  புனிதனின் இசை கவனிக்கப்பட்டு, போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுகிறார். புனிதனிடம் எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாததால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கிறார். இதனிடையே தமிழ்நாட்டிற்கு கேரள நண்பர்களுடன் பழனிகோயில் தரிசனம் செய்ய வரும் புனிதனை உரிய ஆவனம் இல்லாததால் இலங்கை அகதியாக கருதி சிறையில் அடைக்கின்றனர்.புனிதனை லாக்கப்பில் இருந்து வெளியே அழைத்து வரும் இன்னொரு இலங்கை தமிழரான கரு பழனியப்பன் அவருக்கு கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும்படி கூறுகிறார்.அகதிகளை விசாரிக்கும் கியூ பிரிவு போலீஸிடம் அவனுடைய விண்ணப்பம் வருகிறது. அதுவே ஆபத்தாக மாறுகிறது. கிருபாநிதி சீர்திருத்தப் பள்ளியில் இருந்தவன் என்பதாலும், தன் தந்தையை கொன்றவன் என்பதாலும், பல ஆண்டுகள் அவனை பழி வாங்க தேடி அலையும் போலீஸ் அதிகாரி ராஜனுக்கு தகவல் கிடைக்கிறது. கிருபாநிதியான விஜய்சேதுபதியை தீர்த்து கட்ட போலீஸ் அதிகாரி ராஜன் (மகிழ் திருமேனி) தேடி அலைகிறார். அதன் பின்னர் கிருபாநிதி என்கிற பெயரில் அடையாளத்தை பெற வேண்டுமானால் கிருபாநிதியின் அக்காவிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்பதால் கொடைக்கானல் பயணமாகிறார் புனிதன். வழியில், இசைக்கலைஞரான ஜெசியை சந்திக்கிறார் அத்துடன் ஜெசியுடன் பயணிக்கிறார். அப்போது ஒரு புகழ்பெற்ற உள்@ர் தேவாலயத்தில் இசைக்கலைஞரான மாடில்டாவை (மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். இசையின் மீதான அவர்களின் அன்பால் ஒன்றிணைந்து, அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துக் கொள்கிறார்கள்.இவர்கள் உதவியுடன் கொடைக்கானலில் உள்ள கேரட் பண்ணையில் பணிபுரியும் அக்கா கனகராணி (கன்னிகா) என்ற நபரை கண்டுபிடிக்கும் தேடலைத் தொடங்குகிறார். லண்டன் இசை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கிருபாநிதியின் கனவு நிறைவேறியதா?  புனிதனுக்கு அடையாளம் கிடைத்ததா? அகதிகள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை

விஜய்சேதுபதி இலங்கை அகதியாக புனிதன் என்ற இசை ஆர்வம் கொண்ட கதாபாத்திரத்தில் அமைதியும், தீர்க்கமான பார்வையுடனும், ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் விதமாகவும், அதே சமயம் அன்பை தெரிவிக்கும் காட்சிகளில் இயல்பாகவும், லண்டன் இசை போட்டியில் தன் இயலாமையை வெளிப்படுத்தும் காட்சியிலும், மனசாட்சிக்கு பயந்து உண்மையை எடுத்துரைக்கும் வசனக்காட்சிகளிலும், அகதிகளின் வாழ்க்கை, துயரங்களை அழுத்தமான பதிவாக கொடுத்துள்ளார்.

கண்களிலேயே பேசி அழகாக வசீகரிக்கும் மேகா ஆகாஷ், கொலை மிரட்டலுடன் ஆக்ரோஷமாக இருக்கும் போலீஸ் அதிகாரியாக மகிழ்திருமேனி,; சின்னி ஜெயந்த், குணசித்திர நடிப்பால்; மறைந்த நடிகர் விவேக், இயக்குனர் மோகன்ராஜா, இயக்குனர் கரு பழனியப்பன், ராஜேஷ், கனிகா, தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, அஜய்ரத்னம், சம்பத்ராம் ஆகியோர் பங்களிப்பு படத்திற்கு பலம்.

யுத்த களம், கடல், காடுகள், நகரம் , கடல் ஓரம் தலை உடைந்த புத்தர் சிலை, நிலச்சரிவில் சிக்கிய தேவாலயம் , கேரளா, பழனிக்கோயில், கோடைக்கானல் என்று அனைத்திலும் பயணித்த இசை: நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு-வெற்றிவேல் மகேந்திரன், எடிட்டிங்-ஜான் ஆப்ரகாம், கலை-வீரசாமர் ஆகிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்;களின் பணி அளப்பரியது படத்திற்கு ஏற்றவகையில் கடுமையாக உழைத்து பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இலங்கை முதல் லண்டன் வரை செல்லும் அகதியின் பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், மனித நேயங்கள், பாசப்பிணைப்புகள், எதிரிகள் இத்தனையும் தாண்டி தொலைத்த அடையாளத்தையும், தன் வாழ்நாள் கனவையும், ஆசையையும் நிறைவேற்ற போராடும் அகதியின் திரைக்கதையை ஈர்ப்போடு கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த்.யாதும் ஊரே யாவரும் கேளிர் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினைகளை பேசும் படம். அகதி முகாம்களில் கைதிகள் போல் நடத்தும் அகதிகளின் வாழ்க்கை போராட்டங்களையும், அவர்கள் படும் இன்னல்களையும் தெரிந்து கொள்ளும் திறவுகோலாக இந்தப் படம் அமைத்துள்ளதற்காக பாராட்டுக்கள் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த்.

மொத்தத்தில், சந்தாரா ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.இசக்கி துரை தயாரித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அடையாளத்தை தேடி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இலங்கை அகதியின் போராட்டக்களம்.