மேதகு 2 விமர்சனம் : உண்மையை உள்ளபடி சொல்லி மறைக்கப்பட்ட ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வரும் மேதகு 2 | ரேட்டிங்: 2.5/5

0
419

மேதகு 2 விமர்சனம் : உண்மையை உள்ளபடி சொல்லி மறைக்கப்பட்ட ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வரும் மேதகு 2 | ரேட்டிங்: 2.5/5

தஞ்சை குகன் குமார், அயர்லாந்த் கவிஞர் திருக்குமரன், டென்மார்க் சுமேஷ் குமார், தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் தயாரித்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இரா.கோ யோகேந்திரன்.

இதில் கௌரி சங்கர், நாசர் மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை:பிரவின்குமார், ஒளிப்பதிவு:வினோத் ராஜேந்திரன், பிஆர்ஒ: கே.எஸ்.கே செல்வா

2021ல் வெளியான முதல் பாகத்தில் 1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழ் மக்கள் சந்தித்த பிரச்னைகள் பற்றியும், அதைப் பார்த்து வளர்ந்த பிரபாகரன் எப்படி இத்தகைய அடக்குமறையை எதிர்த்து எழுச்சிமிகு தலைவராக உருவான தருணம் பற்றி அவரது வாழ்க்கையில் பல தடைகளை தாண்டி படிப்படியாக முன்னேறும் 21 வயது வரை படத்தில் சித்தரித்திருந்தார்கள். இப்படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்திருந்தது.

அதன் பிறகு இப்பொழுது வெளிவந்திருக்கும் மேதகு இரண்டாம் பாகம் பூர்வகுடி தமிழீழ மக்களின் உரிமையை பறித்து சிங்களவர்களிடம் ஆங்கிலேயர்கள் கொடுத்து விட்டு சென்றவுடன் நடந்த அரசியல் மாற்றங்கள்? ஈழத்தமிழர்கள் அதிகாரத்தை கேட்க முடியாதபடி இலங்கையில் அவர்களை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்த படுபாதக செயல்கள் என்ன? ஈழ தமிழர்களுக்கு சொந்தமான வாழ்வாதாரங்களை அவர்களின்; உரிமையை சொல்லும் அரிய பொக்கிஷமான புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை சிங்களவர்கள் எப்படி எரித்து சாம்பலாக்கினார்கள்? இதனை எதிர்த்;து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) எப்படி உருவானது? அதற்காக இன்னுயிரை தந்த போராளிகளின் தன்னலமற்ற தியாகம் என்ன? இந்த இயக்கம் பெரும் பலத்துடன் உருவாக காரணமான தமிழக அரசியல் தலைவர்கள் யார்? இதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் என்ன? என்பதை அந்த முக்கியமான 20 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதை இந்;தப்;படத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

1976, 1981, 1983 ஆகிய காலகட்டங்களை விவரித்தும், இந்திய அரசு விடுதலைப்புலிகளை சாமர்த்தியமாக வரவழைத்து ஒப்பந்தம் என்ற பெயரில் சிக்க வைக்க நினைக்க அதிலிருந்து தப்பித்து சொந்த நாட்டிற்கே சென்ற தமிழீழ இயக்கத்தை சார்ந்தவர்கள் பற்றியும் எதிர்கட்சி அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக அந்த நேரத்தில் பயன்படுத்த நினைத்ததையும் சிறப்பாக சொல்லியிருக்கின்றனர்.லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

உரிமைக்காக போராட துடிக்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து புதிய இயக்கத்தை உருவாக்கி அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதையும் சொல்லியுள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் தமிழீழ இயக்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுக்க, அதற்காக நன்றி தெரிவிக்க பிரபாகரன் தமிழகத்திற்கு சென்றதையும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக பிரபாகரனாக நடித்துள்ள கௌரி சங்கர் இருக்கமான முகத்துடன், ஈழ மக்களை காப்பாற்ற போடும் திட்டங்கள், அதை வெற்றியா தோல்வியா என்று பார்க்காமல் துரிதமாக முடிக்கும் இயக்க இளைஞர்களை நினைத்து கருணையோடு கண்ணீர் விடும் இடத்திலும் மனதில் நிற்கிறார்.இலங்கை ராணுவத்தை எதிர்த்து கொரில்லா தாக்குதல் நடத்தி போர் கருவிகளை எடுத்துக் கொண்டு செல்லும் பல காட்சிகளில் நிஜமான தலைவர் பிரபாகரன் இளமை கால கம்பீரத்தை உணர்த்தும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற நடிகர்களும் அவருக்கு ஈடு கொடுத்து  கவனம் ஈர்த்துள்ளனர்.

கல்லூரி மாணவ மாணவிகள் நடிகர் நாசரிடம் ஈழ தமிழர்களைப் பற்றி கேட்டறிந்து மறைக்கப்பட்ட, புதைக்கப்பட்ட ஈழ தமிழர் போராட்ட வாழ்வியலை குறிப்பாக மாணவர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி சொல்லும் விதம் புதுமை. மாணவர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகள் தான் அதற்கான விடையை நாசர் தன் இயல்பான புரிதலுடன்; விளக்கும் காட்சிகள் நெத்தியடி.

இசை:பிரவின்குமார், ஒளிப்பதிவு:வினோத் ராஜேந்திரன் வரலாற்று நிகழ்வுகளை  காட்சிப்படுத்துவது எவ்வளவு கடினமான வேலை அத்ததைய காட்சிகளை சிறப்பாக கொடுத்திருப்பதற்காக இவர்களை பாராட்டலாம்.

வரலாற்று ஆய்வுகளுடன் போரடிக்காத வகையில் நகர்த்தி சிங்களவர்களின் அராஜகத்தை கர்ப்பிணி பெண்களுக்கு செய்யும் கொடுமைகள், ஆண்களை கத்தியால் குத்தும் காட்சிகள் அதிர்ச்சி தருகிறது. ஓடிடி தளத்தில் வருவதால் இதை காட்டியுள்ளார்கள். இதனை தவிர்த்து தமிழீழ விடுதலைக்காக இயக்கங்களால் முன்னெடுக்கும் முயற்சிகள், சம்பவங்கள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி படத்தில் தெளிவாக, எத்தகைய தயவு தாட்சண்யமின்றி அசத்தலாக கொடுத்துள்ளார் இயக்குனர் இரா.கோ யோகேந்திரன்.மூன்றாம் பாகத்திலிருந்து வெப் தொடராக கொடுத்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும.

வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு துவங்கியுள்ளது. தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்சொட் ஓடிடி தளத்தில்  (www.tamilsott.com)  இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியும்.

மொத்தத்தில் உண்மையை உள்ளபடி சொல்லி மறைக்கப்பட்ட ஈழ மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வரும் மேதகு 2.