மாயோன் விமர்சனம்: மர்மம், திகில், த்ரில், திருப்பங்கள் நிறைந்து கற்பனையில் அசத்திடும் ஆன்மீக சக்தி நிறைந்த மாயக்கண்ணன் இந்த மாயோன் | ரேட்டிங் 3/5

0
489

மாயோன் விமர்சனம்: மர்மம், திகில், த்ரில், திருப்பங்கள் நிறைந்து கற்பனையில் அசத்திடும் ஆன்மீக சக்தி நிறைந்த மாயக்கண்ணன் இந்த மாயோன் | ரேட்டிங் 3/5

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்.கிஷோர்.
இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேராடி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை – இளையராஜா, ஒளிப்பதிவு ராம்பிரசாத், எடிட்டிங் – ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ், கலை-பாலசுப்ரமணியன், பாடல்கள்- இளையராஜா, சண்டை-பில்லா ஜகன், மக்கள் தொடர்பு- யுவராஜ்.

புதுக்கோட்டையில் மயோன் மலை சூழ்ந்த கிராமத்தின் நடுவே பள்ளிக்கொண்ட கிருஷ்ணரின் பழங்கால கோயில் உள்ளது. இந்த கோயிலை பரம்பரை பரம்பரையாக ராதாரவி குடும்பத்தார் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். அந்தக் கோயிலை மாலை வேளையிலேயே மூடி விடும் பழக்கமும், இரவில் யாரும் அந்தக் கோயிலில் இருக்க கூடாது என்றும் மீறி தங்குபவர்கள் மாய சத்தங்களால் பித்து பிடித்த நிலைக்கு ஆளாவார்கள் என்ற புரளியால் கோயில் இரவு நேரத்தில் வெறிச்சோடி இருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இந்த கோயிலை தொல்லியல் துறை சார்பில் கே.எஸ்.ரவிகுமார் தலைமையில் ஹரீஷ் பேராடி, சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் ஆகியோர் ஆராய்ச்சி செய்ய வருகின்றனர். வெளிநாட்டு கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய ஹரீஷ் பேராடி, தொல்லியல் துறை நிபுணரான சிபியிடம் அந்த கோயில் ரகசிய அறையில் புதையல் கிடைத்தால் பணம் தருவதாக பேரம் பேசுகிறார். சிபி, தன்யா, பகவதி பெருமாள் ஆகியோர் கூட்டாக ரகசிய அறைறைப்பற்றி கல்வெட்டில் எழுதி வைத்துள்ளதா என்று தேடுகின்றனர். பள்ளிக் கொண்ட கிருஷ்ணர் இருக்கும் கருவறையில் தான் ரகசிய அறையுடன் கூடிய புதையலும் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கின்றனர். அதற்குள்ளே செல்ல ராதாரவி  மறுப்பு தெரிவிக்க, கே.எஸ்.ரவிக்குமார் அரசின் அனுமதி பெற்று உள்ளே செல்ல முடிவெடுக்கிறார். அதற்குள் ஹரிஷ் பேராடி அரசிடம் புதையல் கிடைத்துவிடப் போகிறது என்று பயந்து சிபியை அன்றிரவே உள்ளே சென்று புதையலை எடுக்க வற்புறுத்துகிறார். இறுதியில் அனைவரும் கருவறைக்கு சென்று ரகசிய அறையை கண்டுபிடித்தனரா? இவர்களால் இந்த செயலை செய்ய முடிந்ததா? அங்கே நடந்த மர்மங்கள் என்ன?  தந்திரமாக புதையலை எடுத்தனரா? புதையல் யார் கைக்கு கிடைத்தது? என்பதே பரபரப்பான க்ளைமேக்ஸ்.

அர்ஜுன் மணிமாறனாக சிபி சத்யராஜ் தொல்லியல் நிபுணராக சங்க காலத்து பொருட்களை எத்தகைய வடிவில் கிடைத்தாலும் துல்லியமாக, கச்சிதமாக கண்டுபிடித்து சொல்வதில் வல்லுனராக இருப்பதை திறம்பட காட்சிகளில் சொல்லியிருக்கும் விதம் சிறப்பு. அதன் பின் அவர் எடுக்கும் தந்திரமான முடிவும், முதலில் நெகடிவ் கேரக்டராக காட்டப்படும் இவரின் கதாபாத்திரம் இறுதியில் என்ன திருப்பங்கள் நிறைந்துள்ளது என்பதை எளிமையாக இவரை காட்சியபடுத்திய விதம் அருமை, இயல்பாக செய்துள்ளார்.

தன்யா ரவிச்சந்திரன் அஞ்சனாவாக கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்களை படிக்கும் நிபுணராக வந்து முக்கியமான காட்சிகளுக்கு துப்பு கொடுத்து திருப்பங்கள் ஏற்பட வழி வகை செய்து கண்டுபிடிக்க உதவுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் தொல்லியல் குழுவின் தலைவராகவும், ஊர் பெரிய மனிதராக ராதாரவி, பகவதி பெருமாள், வில்லனாக ஹரிஷ் பேராடி தங்கள் கதாபாத்திரங்களுக்கு எற்ற வகையில் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

பாடலுடன் இசை கலந்த கோயில் புராண காலத்து வரலாற்றை நன்றாக இசைக்கலவையுடன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா. இரவில் கோயில் உள்ளே கேட்கும் அதிக சத்தங்கள் நம் காதுகளுக்கே அந்நியமாக தெரியும் அளவிற்கு ஒலி அமைப்பினை கொடுத்து அதிர வைத்து அசத்தியுள்ளார்.

ஆரம்ப காட்சி முதல் இறுதிக்காட்சி வரை மிரட்சியோடு பார்க்கும் வண்ணம் தன் காட்சிக்கோணங்களால் அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்.
கோயில், வரலாறு, கல்வெட்டு, மண்டபம், கருவறை, பள்ளிக்கொண்ட கிருஷ்ணர் சிலை, தங்க காசுகள், ஒலைச்சுவடிகள், கோயிலின் வெளிப்புறம், தெப்பக்குளம் என்று காட்சிகளில் எது அசல், எது நகல் என்ற அளவிற்கு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி பிரமிக்க வைத்துள்ளார் கலை இயக்குனர் பாலசுப்ரமணியன்.
ராம் பாண்டியன் மற்றும் கொண்டலராவ் படத்தொகுப்பு படத்திற்கு பலம்.

அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதியிருக்கும் இப்படத்தை படம் முழுவதும் வித்தியாசமான அணுகுமுறையுடன் தொல்லியல் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் ஆராய்ச்சி, கல்வெட்டு பாடல்கள், கடத்தல் கும்பல் என்று கற்பனையோடு ஆன்மீகத்தையும், ஆமானுஷ்யத்தையும், அறிவியலையும் சார்ந்து கதைக்களத்தை புரியும்படி இயக்கி விறுவிறுப்பு குறையாமல் க்ளைமேக்ஸ் வரை சொல்லி அசத்தி வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் கிஷோர்.

மொத்தத்தில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் திரைப்படம் மர்மம், திகில், த்ரில், திருப்பங்கள் நிறைந்து கற்பனையில் அசத்திடும் ஆன்மீக சக்தி நிறைந்த மாயக்கண்ணன் இந்த மாயோன்.