பொன்னியின் செல்வன் பாகம்- 1 விமர்சனம்: வீரமும், வீழ்ச்சியும், சூழ்ச்சியும் ஒன்று சேர உலக சினிமாவிற்கு தமிழ் சினிமா சரித்திரம் கொடுத்த வைர கிரீடம் | ரேட்டிங்: 4.5/5

0
1363

பொன்னியின் செல்வன் பாகம்- 1 விமர்சனம்: வீரமும், வீழ்ச்சியும், சூழ்ச்சியும் ஒன்று சேர உலக சினிமாவிற்கு தமிழ் சினிமா சரித்திரம் கொடுத்த வைர கிரீடம் | ரேட்டிங்: 4.5/5

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன்- 1 படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.
இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், ஷோபிதா துளிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஜெயசித்ரா, ரஹ்மான், அஸ்வின் காகாமானு, லால், கிஷோர், பாபு ஆண்டனி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், நாசர், நிழல்கள் ரவி, மோகன் ராமன், வினோதினி, ஷ்யாம் பெர்னான்டோ, பாலாஜி சக்திவேல், யோக் ஜாப்பி, ரியாஸ் கான், வித்யா சுப்ரமணியன்,அர்ஜுன் சிதம்பரம் மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஏ.ஆர்.ரஹ்மான்,ஒளிப்பதிவு-ரவிவர்மன், படத்தொகுப்பு-ஸ்ரீகர் பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டாதரணி, உடை-ஏகா லக்கானி, சந்திரகாந்த் சோனாவானே, தலை அலங்காரம் ஒப்பனை-விக்ரம் கெய்க்வாட், நகை-கிஷன்தாஸ், ஒலிவடிவமைப்பு-ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, நடனம்-பிருந்தா, சண்டை-கேச்சா கம்பக்டே, ஷ்யாம் கௌஷல், கதை-அமரர் கல்கி, திரைக்கதை-மணிரத்னம், ஜெயமோகன், குமாரவேல்,வசனம்-ஜெயமோகன், தயாரிப்பு மேற்பார்வை-சிவா ஆனந்த், பிஆர்ஒ-ஜான்சன்.

தஞ்சையை ஆளும் சுந்தரச் சோழர் (பிரகாஷ்ராஜ்) உடல் நலமின்றி இருக்க, அடுத்து முடி சூட மகன்கள், ஆதித்த கரிகாலனும் (விக்ரம்), அருண்மொழிவர்மனும் (ஜெயம் ரவி) இருக்க, இவர்களுக்கு உதவியாக மகள் குந்தவையும்( த்ரிஷா) இருக்கிறாள். அதே சமயம் கடம்பூர் அரண்மனையில் சுந்தரச் சோழரின் பெரியப்பா மகன் மதுராந்தகனை (ரகுமான்) அரியணையின் அமர்த்த பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) தலைமையில் சிற்றரசர்கள் குழு, திட்டம் தீட்டுகிறது. அந்தக் கூட்டத்தில், சுந்தர சோழருக்குப் பிறகு ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக கண்டராதித்தரின் மகன் மதுராந்தகனை அரசனாக்க வேண்டுமென பேசப்படுகிறது.தன் தந்தை சுந்தரச் சோழருக்கு எதிராக சதி நடப்பதை அறியும் ஆதித்த கரிகாலன், அந்தச் சதி என்ன என்பதை அறியவும் தன் தங்கை குந்தவையை சந்திக்கவும் வந்தியத்தேவனை (கார்த்தி) தூது அனுப்புகிறார்.இதற்குப் பிறகு, தஞ்சைக்குச் செல்லும் வழியில் பழுவேட்டரையரின் மனைவி நந்தினியைச் சந்திக்கும் வந்தியத்தேவன் அவளிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெறுகிறான். அதை வைத்து சுந்தர சோழரையும், குந்தவையையும் சந்தித்து நடக்கும் சதிகள் பற்றித் தெரிவிக்கிறான். அப்போது குந்தவை, வந்தியத்தேவன் இலங்கைக்குச் சென்று தன் சகோதரன் அருள்மொழி வர்மனைச் சந்தித்து அழைத்துவர வேண்டுமெனக் கூறுகிறாள். இதற்காக பூங்குழலி உதவியுடன் இலங்கைக்கு வந்தியத்தேவன் சென்று அருள்மொழி வர்மனைச் சந்தித்து நடந்தவைகளை கூறுகிறான். அதே சமயம் ஆதித்த கரிகாலனால் கொலை செய்யப்பட்ட பாண்டிய மன்னரின் படைத்தலைவன் தலைமையிலான ஒரு படையினர் அருள்மொழி வர்மனை கொன்று சோழ சாம்ராஜ்யத்தை முற்றிலுமாக அழிக்க சபதம் எடுத்து இலங்கைக்கு வருகின்றனர். பெரிய பழூவேட்டரையரும், நந்தினியும் சூழ்ச்சி செய்து அருள்மொழி வர்மனை தஞ்சைக்கு அழைத்து வர படைகளை அனுப்புகின்றனர். இந்த இரு படைகளிடமிருந்து அருள்மொழி வர்மன் தப்பித்தாரா? வந்தியத்தேவன் உயிருக்கு ஆபத்து ஏற்பட காப்பாற்றுவது யார்? இந்த சண்டையில் அருள்மொழி வர்மன் இறந்தாரா? பிழைத்தாரா? அருள்மொழி வர்மனை காப்பாற்றும் வயதான தாய் யார்? என்பதே பொன்னியின் செல்வன் முதல் பாகக் கதையின் முடிவு.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் ஆர்ப்பாட்டமான அமர்க்களமாக தன்னுடைய காட்சிகளில் ஆக்ரோஷமான சண்டைகளையும், பறி போன காதலி நந்தினியை நினைத்து ஏங்கி உருகுவதும், பின்னர் தன்னை பழி தீர்க்கும் நந்தினிக்கு எதிராக ஆவேசப்படுவதும், சோழ அரசிற்கு எதிராக நடக்கும் சதி திட்டங்களை முறியடிக்க முயல்வது, தங்கை குந்தவை மீது பாசம் என்று பலவித காட்சிகளில் காதலும், பாசமும், நிறைந்த உயிரோட்டமான உணர்ச்சிகளுடன் கூடிய தத்ரூபமான நடிப்பு அற்புதம். வெல்டன்.

நந்தினியாய் அழகான ஆனால் சாதுர்யமாக காய் நகர்த்தும் ஐஸ்வர்யா ராய் மயங்கச் செய்யும் பார்வை, பேச்சு  என்று பெரிய பழுவேட்டரையரிடம் காரியத்தை சாதித்து கொள்ள எதற்கும் துணிந்து அச்சமில்லாமல் ஆனால் தீர்க்கமான சதி திட்டங்களை உடனுக்குடன் எடுத்து அதை செயல்படுத்தி, அரியணை ஏற ஆசைப்படும் பேராசைக்காரர் பழி தீர்க்கும் கதாபாத்திரம் அற்புதம். பாராட்டுக்கள்.

விக்ரமிற்கு உறுதணையான வந்தியத்தேவனாக கார்த்தி நண்பன், வீரன், தூதன், விளையாட்டுத்தனம், குறும்பு, எதற்கு அஞ்சாதவன், சோழ சாம்ராஜ்ஜித்திற்காக தன் உயிரை பணயம் வைக்க கூடியவன், காதல் பார்வையுடன் வசனம், சாகச நடனம், சண்டை, வசியப்பேச்சு என்று விறுவிறுவென காட்சிகள் இவரை வைத்து தான் நகர்கின்றன. அதற்கு ஏற்றாற்போல் முழு திறமையையும் வெளிப்படுத்தி இறுதிக் காட்சியில் பெரிய பாய்மரக்கப்பலில் நடக்கும் சண்டையில் அசத்தியுள்ளார்.

அருள்மொழிவர்மனான பொன்னியின் செல்வனாக கதையின் நாயகன் ஜெயம் ரவி இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் என்றாலும் தன் கம்பீரத்தாலும், ஆளுமையாலும் தனித்து நிற்கிறார். சண்டைக் காட்சிகளில் மெய் சிலிர்க்க வைக்கிறார்.

குந்தவையாக த்ரிஷா கொள்ளை கொள்ளும் கம்பீர அழகு, பொறுமையாக தன் சகோதரர்களுக்கு எடுத்துரைக்கும் பாங்கு, தந்தையிடம் பாசம் என்று சோழ அரசை காப்பற்ற தன் புத்தி கூர்மையோடு எடுக்கும் முடிவு என்று புத்திசாலி அழகு பெண்ணாக மனதை கொள்ளை கொள்கிறார்.

நந்தினியின் கைப்பிடியில் தன்னை மறந்து வீழும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்துக்கு சரத்குமாரின் தோற்றம் கச்சிதம்.

நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பியாக வந்தியத்தேவன் போன்று ஒற்றனாக தன் யதார்த்தமான அப்பாவித்தனத்துடன் பேசும் வசனங்கள் நகைச்சுவையில் கலகலக்க வைக்கிறார்.

சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பார்த்திபேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரியவேளார் பிரபு, சமுத்திரக்குமாரி பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, வானதிஷோபிதா துலிபாலா, மதுராந்தகன் ரகுமான், ரவிதாசன் கிஷோர், பாண்டியன் ஆபத்துதவியான ரியாஸ்கான், சேந்தன் அமுதன் அஸ்வின் உட்பட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் கதையின் தன்மைக்கேற்றவாறு தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அழுத்தமாக தடம் பதித்துள்ளனர்.

பெரும்பகுதி உண்மையான தளங்களில் படமெடுத்து, பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்கள், பல தூண்கள் மற்றும் உயரமான கூரைகள் கொண்ட விசாலமான அரங்குகள், கடலின் பரந்த பரப்பளவில் கொந்தளிப்பில் மாட்டும் கப்பல்கள், அதனுள் சண்டைக் காட்சிகள், படகு உடைந்து தண்ணீருக்குள் செல்வது, போர்க் காட்சிகள், புத்தக் கோயில்கள, ஆர்ப்பரிக்கும் ஆக்ரோஷம் நிறைந்த பாடல் நடன காட்சிகள், துரத்தல் சண்டைக் காட்சிகள் என்று பிரம்மாண்டமாய் நம் கண்களுக்கு ஆச்சர்யங்களை அளித்து விஷ{வல் டிரிட் கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்ககளும், பின்னணி இசையும் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அழுத்தமாக கொடுத்து தமிழ் மண்ணின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். முக்கியமாக கதையின் இரண்டாம் பாதியில் உற்சாகமான உலக தரத்தில் கொடுத்துள்ளார். ஹாட்ஸ் ஆஃப்.

தோட்டா தரணியின் கலை இயக்கம் கனவை மெய்பட வைத்து உயிர் கொடுத்துள்ளார்.

எழுபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மூலக் கதையிலிருந்து விலகாமல் ஐந்து பாகங்களை வைத்து திரைக்கதை அமைத்து இரண்டு பாகமாக திரைப்படமாக பல ஆண்டு கால உழைப்பில் படாதபாடு பட்டு வெளிக்கொணர்ந்து உள்ளார் இயக்குனர் மணிரத்னம். கதையின் தொடர்ச்சியைத் தக்க வைக்க, ஏராளமான கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருப்பதால் கதையின் ஒட்டத்திற்குகேற்ப மெதுவாக கதைக்குள் சென்ற பிறகு புரிய ஆரம்பிக்கிறது.சில கேரக்டர்களின் பின்னணி, முதல் பாகத்தில் முழுமை அடையாமல் இருப்பதற்கு இரண்டாம் பாகம் பதில் சொல்லும். படத்தின் முடிவும் இறுதித் தருணத்தில் வரும் முக்கியக் கதாபாத்திரத்தின் முகமும் பொன்னியின் செல்வன் பெயர் காரணத்தின் எதிர்பார்ப்பும் அடுத்த பாகத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளன. பொன்னியின் செல்வன் கதாசிரியர் கல்கியின் காவிய கதை,வரலாற்றை பின்னணியை ஆதாரமாகக் கொண்ட, ஒரு கற்பனை புனைவை தரமாக, உலகதரத்தில் பதிவு செய்த இயக்குனர் மணிரத்னம்,ஏ.ஆர்.ரகுமான், கதாபாத்திரத் தேர்வு, விஎப்எக்ஸ் காட்சிகள், ஜெயமோகன், இளங்கோ குமரவேலின் திரைக்கதையும் இதை தயாரிக்க முன் வந்த லைக்கா சுபாஷ்கரன் ஆகியோரின் கடின உழைப்பும், முயற்சியும், சாதனையும் என்றுமே பாராட்ட வேண்டிய மட்டுமல்ல போற்றககூடியது தான்.

மொத்தத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வீரமும், வீழ்ச்சியும், சூழ்ச்சியும் ஒன்று சேர உலக சினிமாவிற்கு தமிழ் சினிமா சரித்திரம் கொடுத்த வைர கிரீடம்.