பட்டாம்பூச்சி  விமர்சனம் : பட்டாம்பூச்சி சிகப்பு சாயம் தோய்த்து பறக்க துடிக்கும் மின்மினி பூச்சி

0
229

பட்டாம்பூச்சி  விமர்சனம் : பட்டாம்பூச்சி சிகப்பு சாயம் தோய்த்து பறக்க துடிக்கும் மின்மினி பூச்சி

அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்து பத்ரி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்தள்ள படம் பட்டாம்பூச்சி..
இதில் சுந்தர்.சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு -கிருஷ்ணசுவாமி , இசை -நவநீத் சுந்தர், எடிட்டிங் – பென்னிஆலிவர் ,சண்டைப்பயிற்சி – ராஜசேகர்,திரைக்கதை -நரு. நாராயணன், மகா கீர்த்தி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்

சிறையில் தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கும் கைதி சுதாகர் (ஜெய்). சிறு வயதிலிருந்தே கழுத்து பகுதியில் ஒருவித நரம்பு பாதிப்பால் அவதிப்படுகிறார் ஜெய். சாவதற்கு முன் தன்னைப் பற்றிய சில விஷயங்களை சொல்ல வேண்டுமென்பதற்காக பட்டாம்பூச்சி என்ற சைக்கோ தொடரை எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர் விஜயலட்சுமி (ஹனி ரோஸை) சந்திக்க விரும்புகிறார். அந்த சந்திப்பில் தான் செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதுடன், தான் ஏழு கொலைகள் செய்த பட்டாம்பூச்சி எனும் சைக்கோ கொலைகாரன் கூறி அதிர வைக்கிறார். இந்த தகவல் பத்திரிக்கையில் வெளியானதும் அவரது தூக்குத்தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவர் செய்த கொலைகளை பற்றி ஒரு மாத கால அவகாசத்திற்குள் இதை விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது.இதுபற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக குமரன் (சுந்தர்.சி) நியமிக்கப்படுகிறார். முதலில் விசாரணைக்கு உடன்பட மறுக்கும் ஜெய் பின் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தர்.சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது போல் நடித்து, ஒருகட்டத்தில் அவர் மூலமாகவே சிறையிலிருந்து வெளியேறி  இன்னொரு கொலையும் செய்துவிட்டு, நீதிமன்றத்தில் அதை வைத்தே தான் நிரபராதி என வாதிட்டு விடுதலையும் ஆகிறார்.அப்போதுதான் ஜெய்யின் திட்டம் என்ன என்பது சுந்தர்.சி க்கு தெரிய வர மீண்டும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர முயற்சிக்கிறார்.. ஆனால் அதே சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மீண்டும் கொலைகளில் இறங்குகிறார் ஜெய். இந்த முறை சுந்தர்.சிக்கு நெருங்கியவர்கள் மீது ஜெயின் வன்முறை பாய்கிறது. அதை சுந்தர்.சியால் தடுக்க முடிந்ததா ? தூக்குத் தண்டனையில் இருந்து ஜெய் தப்பித்தாரா? உண்மையில் அந்த பட்டாம்பூச்சி யார்? கொலைகளுக்கு காரணம் என்ன? குற்றவாளியை நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தினாரா சுந்தர்.சி ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

சைக்கோ கொலைகாரன், தூக்கு தண்டனை கைதி, ஒரு வித நரம்பு பாதிப்பால் அவதிப்படும் சுதாகராக ஜெய், முதன்முதலான கொடூரமான கதாபாத்திரத்தில் தயவு தாட்சண்யமின்றி அப்பா பாசமிகுந்த முதியவர் முதல் பெண்கள், குழந்தைகள் என்று கொன்று குவிக்கும் கொலைகாரனாக,  தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை கொலைகள் மூலம் தீர்த்து கொள்ளும் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனாக நடை, உடை, பாவனையில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி குமரன் கதாபாத்திரத்தில் சுந்தர்.சி  முக்கியத் தூணாக விளங்கி படத்தின் ஒட்டத்திற்கு உதவியுள்ளார்.

பத்திரிக்கை நிருபர் விஜயலட்சுமியாக ஹனி ரோஸ்; முக்கிய கதாபாத்திரத்தில் வந்து பட்டாம்பூச்சியை பற்றி கட்டுரைகள் வெளியிட்டு படத்தின் ஆரம்ப ட்விஸ்ட்டுக்கே பிள்ளையார் சுழி போட்டு படம் முழுவதும் பயணிக்கும் வேடம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெய்யிடம் அடிபட்டு மிதிபட்டு குழந்தையை காப்பாற்ற போராடும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பினரின் பரிதாபத்தை பெறுகிறார்.

போலீஸ்காரராக வரும் இமான் அண்ணாச்சி ஒருகட்டத்தில் சுந்தர்.சியின் திட்டத்தைச் செயல்படுத்துவதாக கூறி சைக்கோ கொலைகாரன் ஜெய்யின் கோபத்துக்கு ஆளாகி கொல்லப்படுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அவருக்கு மகளாக சில காட்சிகளே வந்து செல்லும் பேபி மானஸ்வி நன்றாக நடித்துள்ளார். இவர்கள் தவிர படத்தில் நடித்துள்ள போலீஸ் அதிகாரிகள், சுந்தர் சி யின் தந்தையாக நடித்திருப்பவர் மற்றும் குழந்தை நட்சத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு சைக்கோ த்ரில்லர் கதைக்களத்திற்கேற்ற காமிரா கோணங்களில் அசத்தியுள்ளார். நவீன் சுந்தரின் பின்னணி இசை ஒரளவு ஒகே.ரகம் தான்.

படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவரின் பங்களிப்பு குறைவாகவே தோன்றுகிறது.

சைக்கோ கொலைகாரன் தூக்குதண்டனையிலிருந்து தப்பிக்க எடுக்கும் பரபரப்பான யுக்திகளை பத்திரிகையாளர் மற்றும் போலீஸ் அதிகாரியை பகடைக்காயாக பயன்படுத்தி தப்பித்து கொலைகளை செய்ய செல்கிறான் என்பதை திரைக்கதையில் கொண்டு வந்து தன்னால் முடிந்த வரை சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர் பத்ரி. இது 1980களில் காலகட்டங்களில் நடக்கும் பட்டாம்பூச்சி என்ற பெயரில் கொலைகளை செய்யும் சைக்கோ திரில்லர் கதை. இதற்கான மெனக்கெடல்கள் படத்தில் இருந்தாலும் சில இடங்களில் லாஜிக் இல்லா மேஜிக்காக படத்தை நகர்த்திருக்கிறார் இயக்குனர் பத்ரி. முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் டாம் அண்ட் ஜெர்ரி போல் இருவரும் ஒடிக்கொண்டே இருப்பதால் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் அவ்னி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரித்திருக்கும் பட்டாம்பூச்சி சிகப்பு சாயம் தோய்த்து பறக்க துடிக்கும் மின்மினி பூச்சி.