நித்தம் ஒரு வானம் விமர்சனம் : தன்னிலை கண்டுபிடிப்புப் பயணத்தில் ழுழுமையாக ஈடுபட வைக்கும் அற்புத வர்ண ஜாலங்கள் நிகழ்த்தும் வானவில்! | ரேட்டிங்: 3.5/5

0
322

நித்தம் ஒரு வானம் விமர்சனம் : தன்னிலை கண்டுபிடிப்புப் பயணத்தில் ழுழுமையாக ஈடுபட வைக்கும் அற்புத வர்ண ஜாலங்கள் நிகழ்த்தும் வானவில்! | ரேட்டிங்: 3.5/5

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாhரித்துள்ள நித்தம் ஒரு வானம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரா.கார்த்திக்.

நடிகர்கள் :

அசோக்செல்வன் (அர்ஜுன், வீர, பிரபா), ரிதுவர்மா – சுபத்ரா, அபர்ணாபாலமுரளி – மதி, ஷிவாத்மிகா ராஜசேகர் – மீனாட்சி, சிவாதா – கோச், காளிவெங்கட் – சூசை,அபிராமி – கிருஷ்ணவேணி, அழகம்பெருமாள் – சென்னியப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு : விது அய்யன்னா, இசை : கோபி சுந்தர், பின்னணி இசை : தரன் குமார், படத்தொகுப்பு : அந்தோணி, மக்கள் தொடர்பு : யுவராஜ்

சென்னையில பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அர்ஜுன் (அசோக் செல்வன்). யாருடனும் பழகாமல் பேசாமல் தனக்கான ஒரு தனி உலகத்தில் ஒரு இண்ட்ரோவெர்ட் ஆக வாழ்ந்து வருகிறார். சுத்தமாக இருக்க வேண்டும், எதுவும் ஒழுங்காக இருக்க வேண்டும், எதையும் முறையாகச் செய்ய வேண்டும் என்ற குணம் எண்ணம் கொண்டவர். வீட்டில் இருக்கும் வளர்ப்பு நாயைக் கூட தொடாதவர். அப்படிப்பட்ட இவருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடைபெற்று திருமணம் வரை செல்கிறது, ஆனால், இவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண் திருமணத்திற்கு முதல் நாள் தான் காதலித்தவனுடன்  செல்கிறேன் என்று அர்ஜுனிடம் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறார். இதனால் மனசிதைவுக்கு ஆளாகும் அர்ஜுன் மருத்துவரை நாடுகிறார். அவரை அதிலிருந்து மீண்டு வர, அவரது மருத்துவர் அவரை பயணம் செய்ய அறிவுறுத்த அர்ஜுன் மறுக்கிறார். பிறகு தான் எழுதிய சிறுகதைகள் அடங்கிய இரண்டு புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்கிறார். இந்த இரண்டு கதைகளின் நாயகனாக அர்ஜுன் தன்னை தானே கற்பனை செய்து கொள்கிறார். இந்த புத்தகத்தில், மீனாட்சியை (சிவாத்மிகா) காதலிக்கும் வீராவாக அர்ஜுன் (அசோக் செல்வன்) தன்னை கற்பனை செய்து கொள்ள, மற்ற கதை பிரபா (அசோக் செல்வன்) மற்றும் மதி (அபர்ணா பாலமுரளி) பற்றியது. ஆனால், அந்தக் கதைகளில் முடிவுகள் கிழிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலில் மருத்துவர் அபிராமியிடம் அதைப் பற்றிக் கேட்க. அவை கதை அல்ல, உண்மையில் நடந்தவை என்றும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள நீ சண்டிகருக்கும், ஹிமாச்சல பிரதேசத்திற்கும் அவர்களைத் தேடிப் போக வேண்டும் என முகவரிகளைக் கொடுக்கிறார். அசோக்கும் அவர்களைப் பார்க்க கிளம்புகிறார். கதை நாயகர்களை தேடிப் போகும் பேருந்து பயணத்தில், சுபத்ராவை (ரிது வர்மா) சந்திக்கிறார். இருவரும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள அதன் பின் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவங்கள் என்ன? தேடிச் சென்றவர்களை சந்தித்தார்களா? மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்ததா? சந்திக்க சென்றவர்களின் வாழ்க்கையிலிருந்து இருவரும் கற்றுக் கொண்டது என்ன? என்பதுதான் நித்தம் ஒரு வானம் படத்தின் மீதிக் கதை.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ஒரு கனவு பாத்திரம் கிடைத்திருக்கிறது. படம் முன்னேறும் போது அர்ஜுனாக அவரது சொந்த கதாபாத்திரம், மற்றும் பொறியாளர் மற்றும் போலீஸ் அதிகாரியாக பல மாற்றங்களை காட்டும் அசோக் செல்வன் ஒரு படத்தில் பலவிதமான குணாதிசயங்கள் கொண்ட மூன்று பேராக நேர்த்தியாகவும் எளிதாகவும் அற்புதமாக கையாண்டு நடித்திருக்கிறார்.

இந்தப் பயணக் கதையில் ரிது வர்மா மிகச் சிறந்த பாத்திரத்தில் தன் பங்களிப்பைச் சேர்த்து மெருகேற்றுகிறார்.

நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் கதைகளுக்குள் கதைகள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியை தூண்டுகிறது. மேலும், இந்தக் கதைகளில்தான் ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் கட்டுப்பாடற்ற மற்றும் உணர்ச்சிமிக்க பெண் கதாபாத்திரங்கள்.

கோச்சாக சிவாதா, சூசையாக காளிவெங்கட்,  கிருஷ்ணவேணி டாக்டராக அபிராமி, சென்னியப்பனாக அழகம் பெருமாள் ஆகியோர் கதைக்கு ஏற்றவாறு வாழ்கிறார்கள்

வித்து அயன்னாவின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. கோபி சுந்தரின் இசை, தரனின்  பின்னணி இசை இந்தப் பயணக் கதையில் பயணிக்க பொருத்தமாக இருக்கிறது. மேலும் எடிட்டிங்கின் முக்கியமான அம்சம் ஆண்டனியால் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

ஒரு நபர் எவ்வளவு ஆழமாக காதலிக்க முடியும், அதே காதல் இனி இல்லை என்பதை உணரும்போது எவ்வளவு ஆழமான வடுக்கள் இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. எதிர்மறையை விட்டுவிடுவது, வாழ்க்கையில் நேர்மறையாக இருக்க மனப்பூர்வமான முயற்சியை மேற்கொள்வது மற்றும் எது வந்தாலும் மகிழ்ச்சியைத் தேடுவதற்கான பாடமாக பயணக்கதையாக திரைக்கதை அமைத்து ஒரு அவசரப்படாத வேகத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ரா. கார்த்திக். இயக்குனர் பார்வையாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பது தெளிவாக புரியும்படி மூன்று கதைகளாக கொடுத்திருப்பதை திரையரங்கில் உட்கார்ந்து அனைத்தையும் உணர்ந்து ரசிக்க வேண்டும் அப்பொழுது தான் முழுமையாக உணர முடியும். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மென்ட் மற்றும் வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள மனதைக் கவரும் இந்த நித்தம் ஒரு வானம் தன்னிலை கண்டுபிடிப்புப் பயணத்தில் ழுழுமையாக ஈடுபட வைக்கும் அற்புத வர்ண ஜாலங்கள் நிகழ்த்தும் வானவில்!