நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்: நட்சத்திரம் நகர்கிறது புது முயற்சியோடு காதல் விண்வெளி பயணத்தில் ஓரு துருவ நட்சத்திரமாக மிளிர்கிறது | ரேட்டிங்: 3.5/5

0
1184

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்: நட்சத்திரம் நகர்கிறது புது முயற்சியோடு காதல் விண்வெளி பயணத்தில் ஓரு துருவ நட்சத்திரமாக மிளிர்கிறது | ரேட்டிங்: 3.5/5

யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல்ஜேசன் தயாரிப்பில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித்

இதில் கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துசாரா விஜயன், ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர் கல்லாரக்கல், ரெஜின்ரோஸ், தாமு, ஷெரின் செலின் மேத்யூ, வின்சு ரேச்சல சாம், மனிஷா டைட், அர்ஜூன் பிரபாகரன், உதயசூர்யா, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:– ஒளிப்பதிவு-கிஷோர் குமார், படத்தொகுப்பு-செல்வா ஆர்.கே, இசை-டென்மா, கலை-எல்.ஜெயரகு, நடனம்-சாண்டி, சண்டைப்பயிற்சி-ஸ்டன்னர் சாம், பாடல்கள்-உமாதேவி, அறிவு, உடைகள்-அனிதா, ஏகாம்பரம், பிஆர்ஒ-குணா.

காளிதாஸ் ஜெயராம் மற்றும் துசாரா விஜயன் இருவரும் நாடகக்குழுவில் பயில்பவர்கள் காதலர்கள். சிறு ஊடல் ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள். இருந்தாலும் பாண்டிச்சேரி நாடகக்குழுவில் ஒன்றாக நடிப்பு பயிற்சி செய்கிறார்கள்.இந்த நாடக்குழுவில் பலதரப்பட்ட நடிகர்கள் இருக்க சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு கலையரசன் இந்த குழுவில் வந்து சேர்கிறார்.அதில் ஆண், பெண் ஒரின சேர்க்கை காதலர்கள், திருநங்கை காதலர்கள், அனைவரும் சுதந்திரமாக தங்கள் விருப்பம் போல் வாழ்வதைப் பார்த்து கலையரசன் அதிர்ச்சியாகிறார். அப்பொழுது நாடகக்குழுவில் அரசியல் கலந்த காதலைப் பற்றி நாடகம் போட திட்டமிட்டு அதற்கான ஒத்திகையை நடத்துகின்றனர். இந்த ஒத்திகையின் போது கலையரசன் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்தை புரிந்து கொள்ள முற்படும் போது துசாரா விஜயன் மீது காதல் கொள்கிறார். இந்த காதலை துசரா விஜயன் ஏற்றுக்கொண்டாரா? காளிதாஸ்-துசாரா முடிந்து போன காதல் இணைந்ததா? காதல் நாடகத்தை வெற்றிக்கரமாக நடத்தினரா? நாடகம் போடும் போது ஏற்பட்ட தடங்கல்கள் என்ன? என்பதே மீதிக்கதை.

சினிமா கனவோடு களமிறங்கும் ஆர்வமுள்ள இளைஞராக, பழமையான நடைமுறைகளை பின்பற்றும் மனப்பான்மை மிகுந்தவர் இன்றைய சூழலில் கால மாற்றத்தை மெதுவாக உணர்ந்து அதிலிருந்து வெளிவர கஷ்டப்படுவதும், மனம் ஒத்து போகாத பெண்ணுடன் திருமண நிச்சயத்தை தடுத்து நிறுத்த முயலும் போதும், துணிச்சல் மிகுந்த துசாராவை பார்த்து காதல்வயப்படுவதும், தன் திருமணத்திற்கு தாயிடம் வாக்குவாதம் முற்றும் சந்தர்பங்களிலும், காதலைப் பற்றி புரிதலை அறியாமல் குடித்து விட்டு அளப்பறை பண்ணுவதும் என்று ஒவ்வொரு காட்சியிலும் படம் முழுவதும் தனித்து நின்று வெற்றி பெறுகிறார் கலையரசன். கலையரசனின் அம்மாவாக வருபவர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் படத்தில் அவர் பண்ணும் அன்பான அடாவடித்தனம், நினைத்தை முடிப்பது என்று அதகளம் பண்ணுகிறார். படத்தில் நடிப்பு கற்றுக் கொள்ள தன் தாயிடமே பயிற்சி எடுத்திருக்கலாம் கலையரசன்.

காதலனாக காளிதாஸ் ஜெயராம் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை முறிந்து போன காதலைப் பற்றி நினைத்துக் கொண்டு வருந்துவதும், துசாரவிடம் சண்டை போட்டு பின்னர் மறக்க நினைத்தாலும் முடியாமல் தவிப்பதும், இவருடைய கதாபாத்திரம் அழுத்தமாக இல்லாததால் காதல் இளவரசனாக மட்டுமே மனதில் நிற்கிறார். நடனத்திலும், நடிப்பிலும் குறையேதுமில்லை.

துசாரா விஜயன் சார்பட்டா பரம்பரையில் மாரியம்மாளாக தன் நடிப்பால் கவனம் ஈர்த்தவர். இதில் ரேனே என்கிற தமிழ் கதாபாத்திரத்தில் தைரியம், துணிச்சல் மிகுந்த பெண்ணாக, என்ன நினைக்கிறாரோ அதை கவலைப்படாமல் செய்வது, சொல்வது,நடந்து கொள்வது, மனதில் பட்டதை பட்டென்று கேட்டு விடும் குணம், தன் சாதியை பற்றி குறிப்பிடும் போது ஏற்படும் கோபம், எரிச்சல், தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட அவமானங்களை தாங்கிக் கொண்டு அதை தன் வாழ்க்கைக்கு படிக்கற்களாக செதுக்கிக் கொண்டு வாழ பழகிக் கொள்ளும் திறமை, இளையராஜாவின் ரசிகையாக படத்தில் நடை, உடை, பாவனை, வசனம், நடனம் என்று இயல்பாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனதை கொள்ளை கொள்கிறார் துசாரா.

இதில் ஹரிகிருஷ்ணன், வினோத், ஞானபிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர் கல்லாரக்கல், ரெஜின்ரோஸ், தாமு, ஷெரின் செலின் மேத்யூ, வின்சு ரேச்சல சாம், மனிஷா டைட், அர்ஜூன் பிரபாகரன், உதயசூர்யா, ஸ்டீபன்ராஜ் அனைவருமே முக்கியமான கதாபாத்திரங்களாக படத்தின் காட்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

கிஷோர் குமார் ஒளிpப்பதிவு ஆரம்பம் முதல் இறுதி வரை வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி அவர் எடுத்திருக்கும் காட்சிக்கோணங்கள் பிரமிக்க வைக்கிறது.

உமாவதி, அறிவு பாடல்களில் டென்மாவின் இசை இன்னிசை கலந்து இளையராஜாவின்; தேனிசையோடு ஒலிக்கிறது சிலிர்க்க வைக்கிறது.

படத்தொகுப்பு-செல்வா இன்னும் ஷார்பாக எடிட் செய்திருக்கலாம். கலை-எல்.ஜெயரகு, நடனம்-சாண்டி, சண்டைப்பயிற்சி-ஸ்டன்னர் சாம் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

காதலை புதுவித கோணத்தில் இன்றைய இளைய சமுதாயத்தின் பார்வையில் வலுவான நாடக குழுவின் கதாபாத்திரங்களாக வடிவமைத்து, ஒவ்வொருவரின் தனிப்பட்ட விரும்பிய வாழ்க்கையை விவரித்து, ஆணவக் கொலைகளை சுட்டிக் காட்டி, அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் படுபாதக கொடூர கொலைகளால் ஏற்பட்ட பாதிப்பு, காதலர்களை பிரிக்காதீர்கள், நிம்மதியாக வாழ விடுங்கள் என்பதை வித்தியாசமாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் பலவகை காதலை எடுத்துச் சொல்லி அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், அரசியல் கலந்த காதலை துணிச்சலுடன் மாறுபட்ட கருத்துக்களை, எண்ணங்களை முன் வைத்து அசத்தி இயக்கியுள்ளார் பா.ரஞ்சித்.

மொத்தத்தில் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் மனோஜ் லியோனல்ஜேசன் தயாரிப்பில் நட்சத்திரம் நகர்கிறது புது முயற்சியோடு காதல் விண்வெளி பயணத்தில் ஓரு துருவ நட்சத்திரமாக மிளிர்கிறது.